Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மாறும் முகவரிகள்... - Thiru Quran Malar

மாறும் முகவரிகள்…

Share this Article

உங்கள் முகவரி என்ன? என்ற கேட்டவுடன் சட்டென உங்கள் தற்போதைய முகவரியைக் கூறி விடுவீர்கள்.இதற்கு முன் எங்கிருந்தீர்கள் என்று உங்கள் முந்தைய முகவரிகளைப் பற்றிக் கேட்டால்?ஒவ்வொன்றாகக் கூறுவீர்கள்…அதற்கு முன், அதற்கு முன் என்று கேட்கக் கேட்க … அது ஒரு தொடர்போல நீளலாம்…இறுதியில் அது உங்கள் தாயின் கருவறையை அடையும் என்பதை அறிவீர்கள்…

அதற்கும் முன்?கருத்தரிக்கும் முன் நீங்கள் கடந்து வந்த பாதையின் கட்டங்கள் உங்கள் முகவரித் தொடரில் இடம்பெறலாம்..அதற்கும் முன் என்று கேட்டால்…இறுதியாக முகவரியே இல்லாத நிலை ஒன்றை அறிவீர்கள்… திருக்குர்ஆனில் உங்களைப் படைத்தவன் அந்நிலையை நினைவூட்டுகிறான்:

76:1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?

76:2. (பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் – அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

மேலும் கேட்கிறான் :

2:28. நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்

இப்பூவுலக முகவரிகள்

தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த பின் தாயின் மடி, தொட்டில், கட்டில் என உங்கள் முகவரிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. உங்கள் வளர்ப்பு, கல்வி, தொழில் போன்றவற்றைப் பொறுத்து இந்தப் புவியின் மீது உங்கள் முகவரியானது தொடர்ந்து பல மாற்றங்களுக்குள்ளாகி இறுதியில் கல்லறைக்குள் சென்று அடங்க உள்ளது என்பதை அறிவீர்கள்.

ஆனால் கல்லறையில் இருந்து தொடங்கி கருவறையில் முடியும் இந்தப் பயணத்தின் உண்மை நோக்கம் பற்றிய சிந்தனை பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. அதை நினைவூட்டுவதற்காகவே இப்பயணத்தை நிர்வகித்து வரும் இறைவன் தன் தூதர்களையும் வேதங்களையும் அவ்வப்போது அனுப்பி வந்துள்ளான். அந்த வகையில் இவ்வுலகிற்கு இறுதியாக வந்த வேதமாம் திருக்குர்ஆனில் இறைவன் கூறுவதைக் கேளுங்கள்:

= 56:57-59    நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா?அல்லது நாம் படைக்கின்றோமா?

படைத்தவனை மறுப்பவர்களைப் பார்த்து அவன் கேட்கிறான்:

= 52:35,.36 .எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக்கூடியவர்களா? அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்

அவ்வாறு படைத்தவன் நமக்காக அயராது வழங்கிவரும் அருட்கொடைகள் பற்றி நினைவூட்டுகிறான்.

78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?

78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?

78:8. இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.

78:9. மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.

78:10. அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.

78:11. மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.

78:12. உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.

78:13. ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.

78:14. அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.

78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.

78:16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).

இன்னும் இங்கு பட்டியலிடப்படாத எண்ணற்ற அருட்கொடைகள்… இவை அனைத்தும் இங்கு நடப்பது மனிதன் என்று முக்கியமான ஜீவியாகிய உங்களை வாழவைப்பதற்குத் தானே?இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே உங்களுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நீங்கள் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்பீர்களா?இதையே இறைவன் கேட்கிறான்:

23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” 

அவ்வாறு பகுத்தறிவோடு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும்.

அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது  செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு.

யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.ஆக, கருவறை தொடங்கி கல்லறையில் முடியும் இப்பயணத்தின் வெற்றி இவ்வுண்மைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவதில்தான் உள்ளது.

இறுதி முகவரி:   இப்பூவுலக முகவரிகளைப் பொறுத்தவரையில் நமக்கு பொருத்தமானவாறு அவற்றைத் தேர்ந்தெடுக்க முடியும். ஓரிடம் ஒத்துவராவிட்டால் வேறிடம் தேடிச் செல்ல முடியும். ஆனால் கல்லறைக்குப் பின்னருள்ள முகவரி அவ்வாறல்ல. அதுவே நம் நிரந்தர வாழ்விடம்- மேற்படி சாய்ஸ் என்பது அங்கு கிடையாது. திரும்பி வருதலும் தப்பித்துக் கொள்வதும் அங்கு சாத்தியமில்லை.

அங்கு இரண்டே இடங்களே உண்டு.. ஒன்று சொர்க்கம்… மற்றது நரகம். அந்த இறுதி முகவரி சொர்க்கமாக அமை யவேண்டுமானால் அதற்காக முயற்சியும் உழைத்தலும் இன்றே கைகொள்ள வேண்டும்…. மரணம் நம்மை வந்தடைவதற்கு முன்!

= 3:185.ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

Share this Article

Add a Comment

Your email address will not be published.