மாமனிதர் மது ஒழித்த வரலாறு
மது தீமைகளின் தாயாகத் திகழ்கிறது. மதுவற்ற தேசத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாதவாறு இன்று எங்கும் அது பரந்து விரிந்து வியாபித்துள்ளது
தனது சிந்தையை மதுவிடத்தில் ஒப்படைத்தவர்கள் அதனை விட்டு மீளவே முடியாதவாறு அது குடிப்பவர்களை ஆளுமை செய்து விடுகிறது. மதுவைத் தடுக்க வேண்டிய அரசாங்கமோ குடி கொடுக்கும் குடியரசாகத் திகழ்கிறது.
உயிர்கள் பலவற்றைக் குடித்தாலும் உறவுகள் பலவற்றை அது முறித்தாலும் குடிகள் பலவற்றை அது கெடுத்தாலும் அந்த கொடிய தீமையை அறவே நிறுத்தமுடியாது எனப் பலர் கூக்குரலிடும் இந்த நேரத்தில் நம்மைப் படைத்த இறைவனால் அனுப்பப்பட்ட அவனது தூதர் தனது பிரச்சாரத்தின் மூலமும் செயல்பாட்டின் மூலமும் மதுவை தனது நாட்டில் அழித்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம்.
மது மட்டுமல்ல, சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பித்தல், தீண்டாமை, வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், மனித உரிமை மீறல்கள் என அனைத்து சமூகத் தீமைகளுக்கும் எதிராக குரல் கொடுப்பது மட்டுமல்ல மாறாக நடைமுறைக்கு சாத்தியமான தீர்வுகளையும் வழங்குவது இஸ்லாமிய மார்க்கம். மதுவின்றி வாழ்கையில் எதுவுமே இல்லை என வாழ்ந்து கொண்டிருந்த அரேபிய மக்கள் மது அருந்துதல் என்பது ஒரு தீய பழக்கம் என்ற சிந்தனையே இல்லாது தண்ணீர் குடிப்பது போல் மது அருந்தும் குடிகார மக்களாக வாழ்ந்து வந்தனர்.
திசையற்று பயணித்துக்கொண்டிருந்த அந்த மக்களிடையே நபிகள் நாயகம் (ஸல்) இஸ்லாம் மார்க்கம் கூறும் மூன்று முக்கிய அடிப்படைகளை நினைவூட்டி மக்களை நல்லொழுக்க சீலர்களாக மாற்றினார்கள். ஒன்றே மனிதகுலம் ஒருவன் மட்டுமே இறைவன், அவனிடமே நமது மீளுதலும் என்பவையே அந்த அடிப்படைகள்.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ….. நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
அனைத்து மனித குலமும் ஒரே குடும்பமே, நம் அனைவருக்கும் ஒரே இறைவனே என்று உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் அனைவரும் உள்ளோம் என்பதை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் சமூகத்தைக் கட்டியெழுப்பினார் நபிகளார்.
அதன் விளைவாக மனித சமத்துவத்தையும் சக மனிதனின் உரிமைகளையும் பேணவேண்டியது கடமை என்பதை மக்கள் உணர்ந்தார்கள். நல்லொழுக்கத்தைப் பேணுவோருக்கு இறைவனிடம் வெகுமதிகளும் பேணாதவர்களுக்கு தண்டனைகளும் காத்திருக்கின்றன என்பதை உணர்ந்த மாத்திரத்திலேயே அவர்கள் சமூகப் பொறுப்புணர்வு மிக்க ஒழுக்க சீலர்களாய் மாறினார்கள்.
ஆரம்பத்தில் மக்களிடையே இஸ்லாம் தெளிவு படுத்தப்பட்ட பின்னரும் இந்த போதையளிக்கும் மது எதற்கு என்ற ரீதியில் நபியவர்களிடத்தில் மதுவைப் பற்றி பேசினார்கள். ஆனாலும் இறைவனோ நபியவர்களோ உடனடியாக மது தடுக்கப்பட்டு விட்டது அது உங்களுக்கு ஆகுமானதல்ல என்று உத்தரவு விதிக்கவில்லை. அவர்கள் விரும்பி அருந்திக்கொண்டிருந்த மதுவை உடனடியாக நிறுத்துவது இறைவனின் நாட்டமாக இருக்கவில்லை.
= இறைவன் நபி(ஸல்) அவர்களுக்கு முதல் கட்டமாக திருக்குர்ஆனின் பின்வரும் வசனத்தை இறக்கினான்….
“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (திருக்குர்ஆன் 2:219)
மதுவில் நன்மையை விட தீமை அதிகமுள்ளது தவிர்ந்திருத்தல் நல்லது என்ற இந்த அறிவுரை வந்தபோது சிலர் தவிர்ந்திருநதனர. ,சிலர் மது அருந்தினார்கள்.
= சிறிது காலம் சென்றது மக்கள் மது குடித்தவாறே தொழுகையில்ஈடுபட்டார்கள். தொழுகையின்போது குர்ஆனின் வசனங்களை ஓத வேண்டும். தொழுகையில் போதை காரணமாகச் சிலர் தவறாக ஓதினார்கள். இப்போது இறைவன் சற்று கட்டுபடுத்தும் விதமாக “நீங்கள் மது அருந்திய நிலையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்;” (திருக்குர்ஆன் 4:43) என்ற வசனத்தை இறக்கினான்.
= இவ்வாறு சிறிது காலம் சென்றது. இப்போது மக்கள் தொழுகையின் போது மட்டும் மது அருந்தாமல் இருந்தனர். இருந்தாலும் நேர்வழி பெற்ற நபித் தோழர்கள் மதுவைத் தடை செய்வது பற்றித் தெளிவான வசனம் இறைவனிடமிருந்து வர வேண்டும் எனப் பிரார்த்தித்தார்கள். சிறிது காலத்திற்குப் பின்னர் மதுவிலக்கு குறித்து முழுமையான வசனம் இறக்கியது.
.”நம்பிக்கை கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின்அருவருக்கத்தக்கச் செயல்களிலுள்ளவையாகும்: ஆகவே இவற்றை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.” (திருக்குர்ஆன் 5:90)
இவ்வசனம் இறக்கப்பட்டதும் நபித்தோழர்கள் மகிழ்ந்தார்கள். எங்கள் விஷயத்தில் எங்கள் இறைவன் தெளிவான தீர்ப்பளித்து விட்டான் என இறைவனைப் புகழ்ந்தார்கள். இந்த வசனம் இறங்கியதுபோது வினாடிகூட தாமதிக்கவில்லை. அருந்திக் கொண்டிருந்தவர்கள் மதுவைத் துப்பினார்கள். குடித்தவர்கள் வாந்தி எடுத்தார்கள்.
மதீனா வீதிகளிலே அவர்கள் வீடுகளில் வைத்திருந்த மது பீப்பாய்களைக் கொட்டினார்கள்.
மதுவிலக்கு அங்கு பூரணமாக அமல்படுத்தப்பட்ட போதும் அவர்களுக்கு அது ஒரு பாரமாகவோ, சுமையாகவோ, பின்பற்ற முடியாததாகவோ இருக்கவில்லை அவர்கள் இறைத்தீர்ப்பை பொருந்திக் கொண்டார்கள். மதுவை முழுவதும் விட்டொழித்த சான்றோர்களாய்த் திகழ்ந்தார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று..?
இறைவனைக் குறித்த அச்சத்தை முதலில் விதைத்தார்கள். பின்னர் படிப்படியாக மது தடை செய்யப்பட்டது. முதலில் மதுவின் தீங்கைப் பற்றி எடுத்துரைத்து, பின்னர் இறைவனை ஐவேளைத் தொழும் போது தடைவிதித்து, பின்னர் மதுவை முற்றிலுமாக தடை செய்த போது அவர்களுக்கு அது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இங்கு நாம் கவனிக்கவேண்டிய ஒரு விடயம் என்ன என்பதைப் பாருங்கள்…. மக்கள் தாங்களாகவே ஒழுக்க வாழ்வு வாழ்வதற்கு மது தடையாக இருப்பதை உணர்ந்து அவர்களாகவே இது இறைவனால் தடைசெய்யப்பட வேண்டி பிரார்த்திக்கிறார்கள். இறைவனும் அதை நிறைவேற்றுகிறான்! தலைமுறை தலைமுறையாக உலகெங்கும் இஸ்லாம் பரவப் பரவ இதன் கட்டமைப்புக்கும் வருவோர் எல்லாம் மதுவின் தீங்குகளில் இருந்து காப்பாற்றப் படுகிறார்கள்!