மனிதனோடு ஷைத்தான் ஏனிங்கு வந்தான்?
கூடவே வந்த ஷைத்தான்:
இறைவன் இந்தத் தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளதை நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது அறியமுடியும். அந்தப் பரீட்சையின் ஒரு பாகமாக மனித இனத்தைச் சார்ந்தவர்களின் மனங்களில் ஊசலாட்டத்தையும் தீய எண்ணங்களை விதைப்பதற்கு சக்தி பெற்ற ஷைத்தான் என்ற மனித கண்களுக்குப் புலப்படாத இனமும் கூடவே அனுப்பட்டுள்ளது.
மனித இனத்தின் ஆதம் எப்படி முதலாமவரோ அதே போல ஷைத்தானின் பரம்பரைக்கு முதலாமவன் இப்லீஸ்.
ஆக, முதல் மனித ஜோடி இந்த பூமியில் வசிக்க ஆரம்பித்த போது அவர்களோடு கூடவே வந்தவர்கள் இப்லீசும் அவனது சந்ததியினரான ஷைத்தான்களும்.
திருக்குர்ஆன் கூறும் சுருக்கமான வரலாறு :
திருக்குர்ஆன் இது பற்றிய வரலாற்று நிகழ்வுகளை பின்வருமாறு கூறுகிறது:
7:11. நாம் உங்களைப் படைத்து, பிறகு உங்களுக்கு உருவம் கொடுத்தோம். பின்னர் ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்குக் கட்டளையிட்டோம். (இக்கட்டளைக்கேற்ப) அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். ஆனால் இப்லீஸைத் தவிர! அவன் சிரம் பணிவோரில் ஒருவனாய் இருக்கவில்லை.
7:12. “சிரம் பணியும்படி, நான் உனக்குக் கட்டளையிட்டபோது, அதைச் செய்யவிடாமல் உன்னைத் தடுத்தது எது?” என்று இறைவன் கேட்டான். அதற்கு இப்லீஸ் “நான் அவரை விட உயர்ந்தவன்; நீ என்னை நெருப்பிலிருந்து படைத்தாய்; அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று பதில் கூறினான்.
7:13. அதற்கு அல்லாஹ் கூறினான்: “நீ இங்கிருந்து கீழே இறங்கி விடு; இங்கு பெருமையடிக்க உனக்கு உரிமை கிடையாது; நீ வெளியேறிவிடு! ஏனெனில், தமக்குத் தாமே இழிவைத் தேடிக் கொண்டவர்களில் திண்ணமாக நீயும் ஒருவனாகி விட்டாய்.”
7:14. (இப்லீஸ் இவ்வாறு) வேண்டினான்: “இவர்கள் அனைவரும் திரும்ப எழுப்பப்படும் நாள் வரையிலும் எனக்கு அவகாசம் அளிப்பாயாக!”
7:15. அதற்கு “நீ அவகாசம் அளிக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்!” என்று அல்லாஹ் கூறினான்.
7:16. அதற்கு இப்லீஸ் கூறினான்: “என்னை நீ வழிகேட்டில் ஆழ்த்திய காரணத்தால், திண்ணமாக, நானும் இம்மனிதர்களை உன்னுடைய நேரான வழியில் செல்லவிடாமல் தடுப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருப்பேன்.
மேற்படி ஒரு சம்பவத்தை முழு வீச்சில் நாம் புரிந்து கொள்ள இயலாவிடினும் இது உறுதியாக நடந்த ஒன்று என்பதை திருக்குர்ஆன் வசனங்களில் இருந்து அறியலாம்.
இன்றைய நம் வாழ்க்கை, நாம் வாழும் இந்த பூமி, இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நம் அற்ப நிலை, நம் வாழ்க்கையின் நோக்கம் ஆகியவற்றை ஆராயும்போது பகுத்தறிவு பூர்வமாக ஆராயும் எவரும் இந்த குறுகிய வாழ்வை ஒரு பரீட்சையாகவும் இந்த பூமியை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் இறைவன் படைத்துள்ளான் என்பதை உறுதியாக உணருவார்கள். இதை மறுப்பவர்களிடம் நீங்கள் இக்கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்:
1. மனித இனம் இந்த பூமியில் தோன்றுவதற்கான பின்னணி என்ன?
2. மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன?
3. உங்கள் வாதத்திற்கு நீங்கள் முன்வைக்கும் ஆதாரம் என்ன?
கண்டிப்பாக அவர்களால் இதற்கான உறுதியான – பகுத்தறிவு பூர்வமான – பதிலை தரவே முடியாது. அவ்வாறு நீங்கள் பதில் பெற்றால் எங்களோடு அவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.
மனிதனுக்கான பரீட்சையில் ஷைத்தானின் பங்கு
எந்த ஒரு பொருளையும் அதற்காக முயற்சி செய்து பெறும்போதுதான் அதன் அருமையை உணரமுடியும். மேலும் வெயிலில் சென்று கஷ்டப்பட்ட பின்தான் நிழலின் அருமை புரியும். தாகித்தவனுக்குத்தான் நீரின் அருமையும் புரியும். எந்த ஒரு உழைப்போ முயற்சியோ செய்யாமல் இலவசமாகக் கிடைத்த சொர்க்கம் என்ற அறிய பொக்கிஷத்தைப் பெற்றிருந்தார்கள் நம் ஆதி தந்தையும் தாயும் என்பதை முந்தைய கட்டுரையில் (மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு)
நாம் கண்டோம். அதே பொக்கிஷத்தை அதற்காக உழைத்து அதன்பின் பெறுவதற்காக இறைவன் செய்த ஏற்பாடாகவும் இந்தப் பரீட்சை வாழ்க்கை இருக்கலாம். இறைவனே மிக அறிந்தவன்.
= இங்கு நேர்வழி என்பது இறைவனின் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் நமக்கு வருகிறது. இந்த பரீட்சைக்களத்தில் வெறும் நேர்வழி மட்டும் இருந்து அதற்கு எதிரான ஒன்று இல்லாவிட்டால் அந்தப் பரீட்சையில் அர்த்தம் இருக்காது. அதனால்தான் ஷைத்தான் என்ற ஒரு தீய சக்திக்கு இறைவன் அனுமதி கொடுத்து அவனுக்கு சில ஆற்றல்களையும் வழங்கி மனிதனை வழிகெடுக்க அனுமதியும் கொடுத்துள்ளதை நாம் காணமுடிகிறது. யார் அவனைப் பின்பற்றுகிறார்களோ அவன் உண்டாக்கும் சஞ்சலங்களுக்கு இரையாகின்றார்களோ அவர்கள் இந்தப் பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். மறுமையில் நரகத்தை அடைகிறார்கள். அதைப்பற்றி இறைவன் நமக்கு எச்சரிக்கவும் செய்துள்ளான்:
= இறைவிசுவாசிகளே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; … (திருக்குர்ஆன் 24:21)
= ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு; மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம். (திருக்குர்ஆன் 7:27)