Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்! - Thiru Quran Malar

மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்!

Share this Article

#ஒன்றே_குலம்_ஒருவனே_இறைவன் என்ற கருத்தில் உடன்பாடு இல்லாதவர்கள் மிக அபூர்வமே. ஆனால் ஆளுக்கு ஆள், இனத்துக்கு இனம் இடத்துக்கு இடம், நிறத்துக்கு நிறம், மொழிக்கு மொழி வேறுபாடுகளும் வேற்றுமை உணர்வுகளும் கொண்ட மனிதகுலத்தை ஒருங்கிணைக்க ஒரு வழி இருக்குமானால் அது இன்று உலகம் சந்தித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இருக்கும்.

அவ்வழி  தனிநபர் ஒழுக்கத்தையும் சமூக ஒற்றுமைக்கான அடிப்படைகளையும் மேம்படுத்துவதாகவும் அமைந்து விட்டால் உலகமே அமைதிப் பூங்காவாக மாறாதா? இஸ்லாம் என்ற இறைமார்க்கம் அதில் இணைந்தவர்களுக்கு  விதிக்கும் ஒவ்வொரு கடமைகளிலும் இந்த மனிதகுல ஒருங்கிணைப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை ஆராய்வோர் அறியலாம்.

#இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இதன் இன்னொரு பொருள் #கீழ்படிதல் (discipline) என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல் விலக்கலகளை ஏற்று அதன்படி வாழும்போது பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம்! இஸ்லாத்தின் முக்கிய கடமையான #ஐவேளைத் #தொழுகை மக்களை வேளாவேளைக்கு ஒன்று கூட்டுவதையும் தீண்டாமை ஜாதிக்கொடுமை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதையும் அறிவீர்கள். அதைப் போலவே ஒவ்வொரு ரமலான் மாதம் வரும்போதும் நோன்பு என்ற கடமை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தவறாது செய்கிறது.

= ”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்கிறாரோ அவருக்கு நோன்பு திறப்பவரின் கூலி கிடைக்கிறது. இதன் மூலம் நோன்பாளியின் கூலியில் எந்தவித குறையும் ஏற்படுவதில்லை”. (ஆதாரம்:அஹ்மத்)

இந்த நபிமொழிகள் ஐவேளைத் தொழுகைகளை கூட்டாகத் தொழுவதையும் சக நோன்பாளி நோன்பு திறப்பதற்காக உணவளிப்பதையும் வலியுறுத்துவதால் ரமலான் மாதத்தில் அதிகம் நன்மைகளையும் இறைப் பொருத்தத்தையும் நாடி விசுவாசிகள் இவற்றில் கூடுதல் ஊக்கத்தோடு ஈடுபடுவதை நீங்கள் காணலாம்.

கண்கொள்ளாக் காட்சிகள்

– உலகெங்கும் உள்ள பள்ளிவாசல்களில் ஐவேளைத் தொழுகை நேரங்களில் இறைவிசுவாசிகள் இன, நிற, மொழி மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள் மறந்து தொழுகைக்காக வரிசைகளில் அணிவகுப்பதும் – கடுங்குளிரிலும் அதிகாலை வேளைக்கு முன்னதாகவே எழுந்து உணவருந்திவிட்டு சூரியன் உதிக்கும் முன்னரே அதேபோல் தொழுகைகளில் அணிவகுப்பதும்- மாலை சூரியன் அஸ்தமிக்கும் முன்னரே பள்ளிவாசல்களில் ஒன்று கூடி அவரவர் கொண்டுவந்த உணவுப்பொருட்களையும் பழங்களையும் ஓரிடத்தில் குவித்து, பள்ளிவாசல்களில் காய்ச்சப்படும் நோன்புக்கஞ்சியுடன் சேர்த்துப் பரிமாறப்பட  நீண்ட சமபந்திகளில் அமர்ந்து சக விசுவாசிகளோடு பகிர்ந்துண்பதற்காக காத்திருப்பதும்- சூரியன் மறைந்த உடன் இறைவனை நினைவு கூர்ந்து பிரார்த்தனைகள் கூறப்பட ஒரே நேரத்தில் சகவிசுவாசிகளோடு பேரீத்தம்பழம் கொண்டு நோன்பைத் திறப்பதும்- உணவுண்ட பின் மீண்டும் மாலைத் தொழுகைக்காக அணிவகுப்பதும் அதைத் தொடர்ந்து இரவுத் தொழுகைக்காக அணிவகுப்பதும்….

ரமலான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்! மனிதகுலம் சகோதர பாசத்தோடு ஒன்றிணைந்து தங்கள் வேற்றுமைகள் மறந்து தீண்டாமை மறந்து தோளோடுதோள் சேர்ந்து நின்று தொழும் காட்சியும் ஒரே தட்டில் பகிர்ந்துண்ணும்  காட்சியும் அதைக் காண்பவர்களுக்கே குதூகலம் அளிக்கும் ஒன்று என்றால் அதை அனுபவிக்கும் அங்கத்தினர்களின் உள்ளங்களில் எழும் மகிழ்ச்சியை எழுத்தில் எவ்வாறு வடிக்க இயலும்?

குடும்பங்களில் குதூகலம்

இல்லங்களில் பெரியோர்களைப் பார்த்து ஐந்து வயதுக் குழந்தைகளும் கூட  நோன்பு வைக்க ஆசைப்படுவதும், பெற்றோர்களின் தடையையும் மீறி அவை உணவைத் தவிர்ப்பதும், ஆசையாக அவர்கள் உண்ணும் பொருட்களை கையில் பிடித்தபடியே நோன்பு துறக்கும் வேளை வரைப் பொறுமை காத்து பிறகு உண்பதும் இல்லங்களில் நாம் காணும் காட்சிகள்!

விடியற்காலை நோன்பைத் துவங்கும்போது உண்ணும் உணவுக்காக பெரியவர்களை எழுப்பும்போது குழந்தைகளை எழுப்பாமல் போனால் காலையில் அவர்கள் செய்யும் களேபரங்களைப் பார்க்கத்தான் வேண்டும்! உலகம் பசியை தணிப்பதற்காகவே இயங்கி வருவதை நாம் அறிவோம். 

‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!’ என்பது பழமொழி. பசியின் முற்றிய நிலையில் மனிதனின் மனோநிலை எப்படி இருக்கும் என்பதையே இப்பழமொழி நமக்கு எடுத்துக் கூறுகிறது. ஒரு பத்து பேரை மதிய உணவுக்காக விருந்துக்கு அழைத்து இரண்டு மணிநேரம் காத்திருக்க வைத்துப் பாருங்கள்…

பசியின் கொடுமையான விளைவுகளை அறிந்து கொள்ள முடியும்! குழந்தைகள் முதல் பெரியோர் வரை  உலக மக்கள்தொகையில்  கால்வாசிக்கும் அதிகமான மக்களை எவ்வளவு சுயக்கட்டுப்பாடு மிக்கவர்களாக ரமலான் வார்த்தேடுக்கிறது பாருங்கள். அவர்களைப் பகல் முழுக்க பட்டினி போட்டு அதே வேளையில்

அவர்களுக்குக் கையெட்டும் தூரத்தில் உணவுக் குவியலையும் வைத்துவிட்டு மாலைவரை பொறுமை காத்து வருமாறு கட்டளையிட்டு அதே வேளையில் இயல்பு வாழ்க்கை வாழவைக்கும் இறைவனின் இந்த பயிற்சிக்கு இணையான ஒன்றை நாம் வேறெங்கும் காண முடியுமா? 

உலகெங்கும் பரவிக்கிடக்கும் தன் அடியார்கள் அனைவருக்கும் பகலில் பசி என்ற சீருடை அணிவித்து மாலையில் அவர்கள் சகோதர பாசத்தோடு பசியாறும் அழகைக் கண்டு ரசிப்பதில் இறைவனுக்கு அலாதி இன்பமோ?

= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ (புஹாரி, முஸ்லிம்).

Share this Article

Add a Comment

Your email address will not be published.