இதயங்கள் இணையட்டும்! – பாகம் 1
எங்கள் உடன்பிறவா சகோதர சகோதரிகளே!
நாம் இன்று ஒரே நாட்டில் பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்டவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேசுவோராகவும் பல்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்டோராகவும் உள்ளோம். இப்படிப்பட்ட சூழலில் நாம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் நாம் கொண்டிருக்கும் மத நம்பிக்கைகளைப் பற்றி பரஸ்பரம் அறிந்து கொள்வதும் மிக மிக அவசியம். அதுவே நம்மிடையே இன்று நிலவி வரும் இனம்புரியாத வெறுப்புணர்வையும் பகைமையையும் நீக்க உதவும்.
அப்போதுதான் இப்பகைமை எனும் தீயை மேலும் வளர்த்து நமக்குள் கலவரங்கள் மூட்டி அதனால் வயிறு வளர்க்கும் சுயநல சக்திகளையும் அரசியல்வாதிகளையும் வேரறுக்கவும் முடியும். முறிந்து கிடக்கும் நம் உறவுகளை வலுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் மனம்திறந்து உங்களோடு நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான உறவு பற்றிய உண்மையை இங்கு நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.
அதாவது, நாம் அனைவரும் ஒரே இறைவனால் ஒரே தாய் தந்தையில் இருந்து உருவாக்கப்பட்டு அவர்களிருந்து வாழையடி வாழையாக உருவாகி பூமியெங்கும் பரவி வாழ்ந்து கொண்டிருப்பவர்களே. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே என்பதை ஒருபோதும் மறந்து விடகூடாது. நமக்குள் கருத்து வேறுபாடுகளும் நமது நம்பிக்கைகளும் கலாசார வேறுபாடுகளும் ஆயிரம் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற உண்மையை ஒருபோதும் மறந்து விடக்கூடாது.
இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் உங்கள் உள்ளங்களில் பல சந்தேகங்களும் குற்றச்சாட்டுகளும் கேள்விகளும் இருக்க வாய்ப்புண்டு. அவற்றை தெளிவு படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. அதற்காகவே இந்த தொடர். உங்கள் கேள்விகளுக்கான பதில்களை ஆராயும் முன் நாங்கள் பின்பற்றி வரக்கூடிய இஸ்லாம் என்ற மார்க்கத்தைப் பற்றி சில அடிப்படை உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வது இங்கு மிக மிக அவசியம் என்பதை உணர்கிறோம். அப்போதுதான் நம் பதிலில் இருக்கக் கூடிய நியாயத்தை நீங்கள் உணரமுடியும்.
இஸ்லாம் என்றால் என்ன? .
இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும் முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்..
ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.
முஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்…….. என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்….. என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன.
அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது! .ஆக, இந்த அடிப்படையில் இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி……. மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.
இஸ்லாம் புதிதல்ல!
ஆம், அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கமும் அல்ல என்ற உண்மையை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களில் பெரும்பாலோர் இன்றும் இது ஒரு புதிய மார்க்கம் என்றும் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நம்பி வருகின்றனர். இன்றும் கூட இந்தத் தவறு பள்ளிக்கூடப் பாட புத்தகங்களில் திருத்தப்படாமலே தொடர்கிறது.
ஆம், அன்புக்குரியவர்களே, நாம் அனைவரும் ஓரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்னும்போது நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது.
அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது. அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. அந்த மார்க்கத்திற்க்குப் பெயர்தான் ‘இஸ்லாம்’ என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறது. மாறாக முஹம்மது நபி அவர்கள் புதிதாக எதையும் கொண்டுவரவும் இல்லை தோற்றுவிக்கவும் இல்லை.
இந்த இறைவனின் மார்க்கம் முக்கியமாக மூன்று நம்பிக்கைகளை முன்வைக்கிறது. இவை எல்லாக் காலங்களிலும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வந்த இறைவனின் தூதர்களால் அந்தந்த மக்களுக்கு போதிக்கப்பட்டது. அவை இவையே:
1). இறை ஏகத்துவம்: அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒரே ஒருவனே! அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவன் மட்டுமே பிரார்த்தனைகளை ஏற்கக்கூடியவன். அவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. அவை அனைத்தும் அழியக்கூடியவையே. தன்னிகரில்லாத மற்றும் தனக்கு உவமையே இல்லாத இறைவனுக்கு கற்பனை உருவங்கள் சமைப்பதோ அல்லது உயிரும் உணர்வும் அற்ற பொருட்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ பெரும் பாவமும் வீணும் வழிகேடும் ஆகும்
2). மறுமை : இவ்வுலக வாழ்வு என்பது குறுகியதும் தற்காலிகமானதும் மனிதனுக்கு ஒரு பரீட்ச்சை போன்றதும் ஆகும்.. இங்கு அவன் செய்யும் செயல்கள் யாவும் பதிவு செய்யப் படுகின்றன. இவ்வுலகம் ஒருநாள் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் நீதி விசாரணைக்காக எழுப்பப்பட்டு அவர்கள் செய்த பாவங்களும் புண்ணியங்களும் காண்பிக்கப் படுவார்கள். அன்று புண்ணியங்களை அதிகமாகச் செய்தோருக்கு சொர்க்கமும் பாவங்களை அதிகமாகச் செய்தோருக்கு நரகமும் விதிக்கப் படும். அதுவே மனிதனின் நிரந்தரமான உண்மையான வாழ்விடம் ஆகும்
3) தூதுத்துவம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்களே. அவர்கள் எங்கிருந்த போதும் எவ்வாறு பரவியபோதும் ஒரே மனிதகுடும்பத்தின் அங்கங்களே! அவர்களுக்கு இறைச் செய்திகளை அறிவிக்கவும் வழிகாட்டவும் இறைவன் அவ்வப்போது அவர்களிலிருந்தே சிறந்த மனிதர்களைத் தேர்ந்தேடுத்து அவர்களைத் தன் தூதர்களாக நியமிக்கிறான்.
அனைத்து காலங்களிலும் அனைத்து நாடுகளுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள். அவர்களின் வரிசையில் இவ்வுலகுக்கு இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். இவருக்கு முன் வந்து சென்றவர் இயேசு நாதர். இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே கிடையாது என்கிறது இஸ்லாம்.
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)