மதுவை ஒழிக்க நடைமுறை சாத்தியமான தீர்வு
மது மற்றும் போதைப்பொருட்களின் ஆதிக்கம் குடும்பங்களின் அமைதியையும் சமூக அமைதியையும் சீர்குலைத்து வருவதை அந்த போதையாளர்கள் உட்பட யாரும் மறுப்பதற்கில்லை. இவற்றை முற்றிலும் தடை செய்யவேண்டும் என்பது கோடிக்கணக்கான தாய்மார்களின் பிரார்த்தனை.
இவற்றின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலத்தைக் காக்கவேண்டும் என்பது சமூகப் பொறுப்புணர்வுள்ள நல்ல மனிதர்களின் ஆவல். ஆனால் இந்தத் தீமையை உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலமாகவோ சட்டங்கள் மூலமாகவோ காவல்துறை கட்டுப்பாடுகள் மூலமாகவோ தடுக்க முடிவதில்லை என்பதை அனுபவபூர்வமாகவே நாம் அறிகிறோம். என்னதான் கடுமையாக மதுவிலக்கையே அரசு அமுல்படுத்தினாலும் அங்கு கள்ளச்சாராயம் ஊடுருவுவதைக் காண்கிறோம்.
பிறகு என்னதான் வழி?
மேற்படி தீமையில் இருந்து மக்களைக் காப்பாற்ற உரிய தடுப்பு நடவடிக்கைகளை கைகொள்வதோடு மனித இதயங்களை திருத்துவதற்கான வழிகளையும் ஒருசேர செயல்படுத்தினால் இதற்கு ஒரு தீர்வு ஏற்படும். இவ்வுலகைப் படைத்த இறைவன் தன் இறுதித் தூதர் மூலமாக காட்டிய வழி இதுவாகும்.
தனிமனித நல்லொழுக்கம்
முதலில் மனிதன் பாவங்களிருந்து தவிர்ந்து வாழ வேண்டுமானால் என்ன தேவை எனபதை ஆராய்வோம். அதற்கு முக்கியமாக மனித மனங்களுக்குள் இரண்டு அடிப்படை விஷயங்கள் விதைக்கப் படவேண்டும். முதலாவதாக என்னைப் படைத்து பரிபாலிக்கக்கூடிய இறைவன் ஒருவன் எனக்கு மேலே இருக்கிறான். அவன் என்னைக் கண்காணித்து வருகிறான் என்ற உணர்வு மிகமிக முக்கியமானது.
அடுத்த படியாக அந்த இறைவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன், நான் தவறு செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற பய உணர்வும் நல்லது செய்தால் பரிசளிப்பான் என்ற எதிர்பார்ப்பும் மிக முக்கியமானது. இதுவே இறையச்சம் எனப்படும். இந்த இறையச்சம் இல்லை என்றால் மனிதன் எந்தப் பாவத்தையும் துச்சமாகவே கருதுவான்.
தன் மனோ இச்சைகளை நிறைவேற்றிக்கொள்ள மது மற்றும் போதைப் பொருட்களை உட்கொள்ளுதல் மற்றும் விபச்சாரம் உட்பட எப்பாவத்தையும் கூச்சமின்றி செய்வான். அவற்றை நிறைவேற்றக் கொள்ள கொள்ளையும் கொலையும் துணிந்து செய்வான்.இந்த இறையச்சம் என்பது இன்று இல்லாமல் போனது என்?
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன..
= அறவேநிரூபிக்கப்படாத மனித ஊகங்களைக் கோர்வையாக்கி பரிணாமக் கொள்கை என்ற பெயரில் தவறான அறிவியலை மக்களுக்குக் கற்பித்து இறைவனை மறுக்கும் நாத்திகம் போதிக்கப்படுவது.
= இறைவனின் தூதர்கள் போதித்தபடி ‘படைத்த இறைவன்தான் வணங்குவதற்குத் தகுதியானவன்’ என்று மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதை விட்டுவிட்டு, குழந்தைப் பருவம் முதல் உயிரற்ற உணர்வற்ற பொருட்களையும் உருவங்களையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி ‘இதுதான் உன் கடவுள்’ என்று போதிக்கப்படுவது.
அதனால் சிறுவயதிலேயே கடவுளைப் பற்றிய உணர்வு மழுங்கடிக்கப்பட்டு சிறிதளவும் பயம் என்பதே இல்லாமல் தலைமுறைகள் வளர்கின்றன. அவர்கள் பாவங்களில் துணிந்து ஈடுபடுகிறார்கள்.இதை முதலில் திருத்தினால்தான் தனி மனித நல்லொழுக்கம் உருவாகும். அதற்கு இறைவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் கலப்படமற்ற முறையில் மக்களுக்கு போதிக்கவேண்டும்.
அடுத்ததாக இவ்வுலக வாழ்க்கையில் மனிதனால் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதிவு செய்யப்பட்டு அதுபற்றி மறுமையில் விசாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் சொர்க்கமோ அல்லது நரகமோ அவனுக்கு வாய்க்க இருக்கிறது என்பதை கலப்படம் இல்லாமல் கருத்து சிதைவு இல்லாமல் போதிக்கவேண்டும்.
சரி எது தவறு எது என்பதற்கான அளவுகோல்
மனிதர்கள் மனோஇச்சைக்கு ஏற்ப பாவ புண்ணியங்களைத் தீர்மானிப்பது பாவங்கள் பெருகுவதற்கு மற்றொரு காரணம் ஆகும். உண்மையில் இவ்வுலகின் சொந்தக்காரன் எவனோ அவன்தான் பாவம் எது புண்ணியம் எது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது. அவன்தான் மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளின்போது நம் செயல்களை விசாரிக்க இருப்பவன்.
மேலும் அவன்தான் தன் படைப்பினங்களுக்கு எது நல்லது எது தீயது என்பவற்றை நுணுக்கமாக அறிந்தவனும் அவைகளின் உரிமைகளை பக்குவமாக பங்கிட்டு அளிக்கக்கூடியவனும் அவனே.அவன்தரும் அளவுகோலின்படி மது என்பது முழுக்க தடை செய்யப்பட்டதாகும்.இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:
= “(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது;மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2:219)
= இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் இறைவன் சபிக்கிறான் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: இப்னு மாஜா 3371
= போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு மறுமையில் நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் புகட்டப்படும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) – நூல்: முஸ்லிம்)
மது அருந்துவோருக்கு தண்டனை
மதுவை தீமைகளின் தாய் என்று கண்டித்து தடை செய்ததோடு மட்டுமல்லாமல் அதன் தீமைகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வையும் நபிகள் நாயகம் கூறிச் சென்றார்கள்.
அதை மதீனாவில் அரசாட்சி கைவந்தபோது நடைமுறைப்படுத்தவும் செய்தார்கள். அது என்ன? இதோ நபிகளாரின் ஆட்சியின்போது நடந்த சம்பவங்களில் ஒன்று இது:
நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரைஅடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன். அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி) (ஆதார நூல்: அஹ்மத் 18610)
மதுவிலக்கை அமுல்ப்படுத்துவதோடு பொதுமக்களுக்கு முன் குடித்த நிலையில் வருபவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க ஏற்பாடு செய்தால் யாராவது அதற்குத் துணிவார்களா? பாதிக்கப்படும் மக்களுக்கு “குடிமகன்களை” தண்டிக்கும் அதிகாரத்தைக் கொடுத்து அதை சட்டபூர்வமாக்கலாம். இதை தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பினால் நாடே இதுகுறித்து விழிப்புணர்வு பெறும் என்பதில் ஐயம் இல்லை.
ஆக, நல்லொழுக்கம் மிக்க குடிமக்களை உருவாக்குவதற்கு மனித மனங்களில் முறையான இறையச்சம் விதைக்கவேண்டும். அதில் நிலைத்திருக்க படைத்த இறைவனுக்கு அனுதினமும் நன்றிகூறும் வழிபாட்டை கற்பிக்கவேண்டும். அவர்கள் தங்கள் அன்றாடப் பொறுப்புகளை நிறைவேற்ற தடையாக நிற்கும் மதுவை அருந்தினால் இம்மையிலும் மறுமையிலும் உண்டாகும் தீமைகள் குறித்து எச்சரிக்கவேண்டும்.
அவற்றை மீறுவோரின் தீமைகளில் இருந்து பொதுமக்களைக் காக்க அக்குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்கும் பொறுப்பை பொதுமக்களிடமே ஒப்படைத்து அதை சட்டபூர்வமாக்க வேண்டும். இதுவே இஸ்லாம் இத்தீமையை ஒழிக்கக் கூறும் வழி.