தர்மமும் பயங்கரவாதமும் (part-6)
6.நபிகள் நாயகமும் பயங்கரவாதமும்
நபிகள் நாயகம் பயங்கரவாதத்தை எவ்வாறு எதிர்கொண்டார்கள்?தன் தாயகமான மக்காவில் நபிகள் நாயகம் மக்களை மூடநம்பிக்களைக் கைவிட்டுவிட்டு ஏக இறைவனை வணங்கச் சொல்லி அழைத்தார். ஆனால் சத்தியம் மக்களுக்குக் கசந்தது. தீவிரமாக எதிர்த்தார்கள். அவரையும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோரையும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினார்கள். ஆனால் நபிகளார் பொறுமைக்கு மேல் பொறுமை மேற்கொண்டு சத்தியப் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். பதிமூன்று வருடம் தொடர்ந்த பயங்கரவாத அடக்குமுறைகளுக்கு உள்ளான பிறகு நபிகள் நாயகமும் தோழர்களும் சுமார் 500 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மதீனாவுக்குக் குடிபெயர்ந்த பின்னரும் அவர்களைத் தாக்க வந்தனர் மக்காவின் கொடுங்கோலர்கள். அந்த நிலையில் இறைவனின் அனுமதிக்குப் பிறகு தற்காப்புக்காக அவர்களோடு போர் புரிந்து வெற்றியும் பெற்றனர் நபிகளாரும் தோழர்களும்.
இத்தற்காப்புப் போர்மூலமும் நபிகள் நாயகத்தின் வழியாக பல பாடங்களை உலகுக்குக் கற்றுத் தருகிறான் இறைவன்:
= அதர்மத்துக்கு எதிரான போரில் எக்காரணம் கொண்டும் பொதுமக்களும் பாமரர்களும் அப்பாவிகளும் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படக் கூடாது. எதிரிகள் தாக்கவரும் போதும் அவர்கள் ஊருக்குள் வந்து மக்களைத் தாக்க விடாமல் ஊருக்கு வெளியிலேயே எதிர் கொள்கிறார்கள் நபிகளார்.
= போரில் எக்காரணம் கொண்டும் பெண்களும் குழந்தைகளும் கொல்லப் படக்கூடாது. நிராயுதபாணிகளைக் கொல்லக் கூடாது.
= சரணடைபவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
= மரங்களை வெட்டக் கூடாது. பயிர்களை நாசம் செய்யக் கூடாது.
= இறந்துபோன சடலங்களை சிதைக்கக் கூடாது.
= இவைபோன்ற இன்னும் பல ஒழுங்குமுறைகள்……
தர்ம யுத்தத்தில் இவற்றையெல்லாம் இறைவிசுவாசிகள் பேணியே ஆகவேண்டும்.இன்றைய காலகட்டத்துப் போர் நடைமுறைகளோடு பொருத்திப் பார்க்கும்போதுதான் இக்கட்டளைகளின் அருமையை நாம் உணர முடியும்.
அமேரிக்கா வியட்நாமைத் தாக்கியபோது BLU -82B /C -130 என்ற உற்பத்திப் பெயரைக் கொண்ட, “Daisy Cutter “ என்று செல்லமாக அழைக்கப்பட்ட நாசகார ஆயுதத்தை வியட்னாம் காடுகளில் போட்டார்கள். அந்த குண்டு வனாந்தரக் காட்டின் மத்தியில் 600 மீட்டர் சுற்றளவுக்கு மரங்களை அழித்து விடும். மரங்கள் அழிக்கப் பட்ட இடத்தில் ஒரு ஹெலிகாப்டர் இறங்கக்கூடிய அளவுக்கு இடம் கிடைத்துவிடுமாம். டெய்சி கட்டர் குண்டு வீச்சினால் பரவிய காட்டுத்தீயில் அங்கு வாழ்ந்த வியட்நாமிய மக்களும் மரணமடைந்தனர், சீறிப்பாய்ந்த தீச்சுவாலைகளால் மிரண்ட மக்களை எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் தவிக்க வைத்தது. அதைப்பற்றி யாருக்குக் கவலை? ஹெலிக்காப்டர் தரையிறங்குமளவுக்கு இடம் கிடைத்ததல்லவா? அதுதானே ஆயுத வியாபாரத்திற்கு அவசியமான விளம்பரம்?
போர்க்கைதிகள்
அடுத்ததாக, போரில் பிடிபட்ட கைதிகளை என்ன செய்தார்கள் நபிகளார்? அங்கும் நமக்குப் படிப்பினை இருக்கிறது.போர் செய்யும் போது பிடிபட்ட எதிரி நாட்டு வீரர்களை தண்டிப்பதுதான் மரபாகப் பேணப்பட்ட அக்காலத்தில், நபி (ஸல்) அவர்களோ பத்ரு பேரின்போது பிடிபட்ட குறைஷிப் படையின் கைதிகளை தங்களின் எதிரிகளாகப் பாவிக்காது மதீனாநகர் சிறுவர்களுக்கு அக்குறைஷிகள் கற்றிருந்த கல்வியிலிருந்து எதையேனும் பயிற்றுவிக்கச் செய்து அவர்கள் அனைவரையும் மன்னித்து விடுதலை செய்தார்கள்ஆம், மக்கள் நமக்கு எதிரிகளல்ல – ஒவ்வொரு மனித உயிரும் விலை மதிப்பற்றது – அவர்கள் திருந்த வாய்ப்பளிக்க வேண்டும் – என்பதையே உலகுக்கு மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்கிறார்கள் நபிகளார்!தொடர்ந்து பல போர்கள் தர்மத்தின் காவலர்களுக்கும் அதர்மத்தின் காவலர்களுக்கும் மத்தியில் நடந்தன. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. இறுதி வெற்றி தர்மத்திற்கே. நபிகள் நாயகமும் தோழர்களும் திரளாக மீண்டும் தாயகமான மக்காவுக்கே திரும்பினார்கள்.
மன்னிப்பின் சிகரம்
சுமார் பத்தாயிரம் தோழர்களுடன் முன்னறிவிப்பு இன்றி மக்காவுக்குள் நுழைந்தார்கள் நபிகளார். அவர்களை ஊரை விட்டே விரட்டியவர்களும், அவர்களின் குடும்பத்தினரையும் தோழர்கள் பலரையும் படுகொலை செய்தவர்களும் சித்திரவதை செய்தவர்களும் அனைவரும் தங்களின் கதி என்னவாகுமோ என்று பீதியடைந்தார்கள்.சக்தி மிக்க ஆட்சியாளராகவும் தனது கட்டளைக்கு காத்திருக்கும் தோழர்களைக் கொண்ட சமுதாயத்தின் தலைவராகவும் மக்காவில் பிரவேசித்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கத்தியை எடுக்கவில்லை. இரத்தமும் சிந்தச் செய்யவில்லை. எவரையும் பழிவாங்கவில்லை. பயந்து நடுங்கி வீட்டிற்குள் அடைபட்டுக் கிடந்த மக்கத்துக் குறைஷையரை அன்பொழுக அழைத்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) :
“குறைஷிகளே! உங்கள் மீது இன்றைய தினம் எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் மன்னிப்பை பெற்று உரிய பாதுகாப்பைப் பெறுகிறீர்கள்” என்று பறைசாற்றினார்கள் மன்னிப்பின் சிகரம் நபிகள் நாயகம்.(அவர் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!)உலக வரலாற்றில் சக்தி மிக்க ஒரு தலைவர் ஒரு உயிரைக் கூடப் பறிக்காது. ஒரு நாட்டை வெற்றி கொண்டது இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.
எதிரி நாட்டு நீர் நிலைகளை யானையை விட்டுக் கலக்கி – விளைநிலங்களுக்குத் தீ வைத்து – தோற்றவன் பற்களைப் பிடுங்கி கோட்டைக் கதவில் பதித்து,- தோற்றவனின் மூக்கை அறுத்துக் கோரப்படுத்தி – தோல்வி கண்டவனின் மனைவியின் கூந்தலை வெட்டி அவமதித்து – போரில் பங்கு கொண்டவன், பங்கு கொள்ளாதவன் என்ற பாகுபாடின்றி அனைவரையும் வெட்டிக் குவித்து – இன்னபிற அக்கிரமங்கள் எல்லாம் நிறைவேற்றிப் பழிதீர்த்துக் கொள்ளும் நடைமுறைகளை அன்றும் இன்றும் கண்டு வருகிறோம்.
ஆனால் இங்கு நபிகளார் நடத்தியது போரல்ல தர்மத்தை நிலைநாட்டுவதற்கான முயற்சி!ஆம், இங்கு உயர்ந்த ஒரு இலக்கை அடைவதற்காக சாமானிய மனிதர்களுக்கு இயல்பாகவே ஏற்படும் பழிவாங்கும் உணர்வுகளை எல்லாம் அடக்கியாண்டு முழு உலகுக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள் நபிகளார்! அதாவது பூமியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும், மக்கள் படைத்தவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக சாந்தியோடும் சகோதர உணர்வோடும் இன்ப துன்பங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உலகெங்கும் உருவாக்க வேண்டும் என்ற மிக உயர்ந்த தனது இலக்கை அடைவதற்காக பொறுமையையும் மன்னிப்பையும் ஆயுதமாகக் கொள்கிறார்கள் நபிகளார்.
அநீதியை ஒழித்து நீதியையும் பகைமையை ஒழித்து நட்பையும் கலவாரங்களை ஒழித்து அமைதியையும் நிலைநாட்டத்தான் கருணையுள்ள இறைவன் தன்னை தூதராக அனுப்பியுள்ளான் என்பதை உணர்ந்து கடமை உணர்வோடு நடந்துகொண்டார்கள் நபிகளார்.
7:199 .எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
‘நன்மையைக் கொண்டே தீமையைத் தடு’ என்ற இறைக் கட்டளையை அட்சரம் பிசகாமல் பின்பற்றினார்கள். இந்த அணுகுமுறை கல்நெஞ்சங்களையும் கரைத்தது. மக்கள் மனமுவந்து இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.