பேரழிவுகள் தரும் படிப்பினைகள் !
கொரோனா கொள்ளைநோய் சோதனையில் இருந்து மீள்வதற்குள் இன்று வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. கடந்த சில வருடங்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள், விலங்குகள், மரங்கள், வீடுகள் என பலவற்றை இழந்து மக்கள் செய்வதறியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.
இவற்றுக்கு முன்னரும் பல பேரழிவுகள் நம்மைக் கடந்து சென்றுள்ளதை நாம் அறிவோம்.நாமும் இந்த பேரழிவுகள் நமக்கு ஏன்? எதற்கு? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் அதை கடந்துசென்று கொண்டேதான் இருக்கின்றோம்.
உண்மையில் நமக்கு இவை கொண்டு வரும் செய்தி என்ன?
அன்றாட வாழ்வில் அனுதினமும் புதுப்புது அலுவல்களில் மூழ்கிக்கிடக்கும் நமக்கு இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் பற்றியோ அதில் ஒரு நுண்ணிய துகள் போன்ற பூமியின் மீது வாழும் மற்றொரு நுண் துகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமது நிலை பற்றியோ சிந்திக்க சற்றும் நேரம் கிடைப்பதில்லை.
எதற்காக இங்கு இவ்வளவு அவசரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இதன் இறுதி முடிவு என்ன? இங்கிருந்து எங்கே போகிறோம்? இதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளை நாம் கேட்பதுமில்லை.
இப்படிப்பட்ட நம்மை நெறிப்படுத்தவே வருகின்றன என்பதை நாம் உணரவேண்டும். இவ்வுலகைப் படைத்த இறைவன் இந்த தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சையாகவும் படைத்துள்ளான்.
இதில் இறைவனின் எவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வோருக்கு பரிசாக சொர்க்கத்தையும் இறைகட்டளைகளைப் புறக்கணித்து வாழ்வோருக்கு தண்டனையாக நரகத்தையும் ஏற்பாடு செய்துள்ளான்.
அப்படிப்பட்ட பரீட்சைக் கூடத்தில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதை நினைவூட்டும் நிகழ்வுகளே இதுபோன்ற பேரழிவுச் சம்பவங்கள். இதை உணர்வோர்தான் அறிவாளிகள்.
சோதனைகள் வாழ்க்கையின் அங்கம்
இறைவன் தன்னுடைய இறுதி வேதமான குர்ஆனில் கூறுகிறான்:
= “ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதுமில்லை.” (திருக்குர்ஆன் 9:126)
= “உங்களைப் போன்ற பலரை அழித்திருக்கிறோம். படிப்பினை பெறுவோர் உண்டா?” (திருக்குர்ஆன் 54:51)
இறைவன் இந்த பேரழிவுகளை நடத்துவது மனிதர்களாகிய நாம் படிப்படினை பெற வேண்டும் என்பதற்காகவே. அறிவியலும் ஆய்வுகளும் ஊகங்களும் நமக்கு பல காரணங்களை சொல்லலாம்.
ஆனால் இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நமது அற்பநிலையை – அற்ப ஆயுளை – உணர்ந்த பின் இந்த உலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது அறிவீனமே! இந்த அறிவீனம் நம்மை இதைவிடப் பெரிய ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
பேரழிவுக்கு முன்வரும் எச்சரிக்கை
இந்தப் புயல் நம் கண் முன்னே சிலவற்றை அழித்ததைப் போலவே நாமும் ஒருநாள் மரணம் என்ற நிகழ்வு மூலம் அழிக்கப்பட இருக்கிறோம் என்ற உணர்வையாவது நாம் குறைந்தபட்சம் பெற வேண்டும்.
= “நீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே. (திருக்குர்ஆன் 4:78)
= “நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறுவீராக! (திருக்குர்ஆன் 62:8)
திருந்திவாழ முயல்வோம்
அழிவு அல்லது மரணம் நம்மை சந்திக்கும் முன் நம்மை நாமே சுதாரித்துக்கொண்டு திருந்திவாழ முற்படுவதே அறிவுடைமை! இறைவேதம் திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
= “உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா?தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான். (திருக்குர்ஆன் 63:10)
நமது ஆயுள் என்பது வரையறுக்கப்பட்ட ஒன்று. ஆனால் நமக்கு எப்போது அது முடியும் என்பது தெரியாது. உண்மை இவ்வாறு இருந்தும் நாம் மெத்தனமாக இருந்தால் அப்போக்கு மிகவும் ஆபத்தானது.
= “சுற்றி வளைக்கும் அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வருவதைப் பற்றியோ, அவர்கள் அறியாத நிலையில் திடீரென யுகமுடிவு நேரம் வந்து விடுவதைப் பற்றியோ அவர்கள் அச்சமற்று இருக்கிறார்களா?” (திருக்குர்ஆன் 12:107)
= “மாறாக, அது அவர்களிடம் திடீரென்று வந்து அவர்களைத் திகைக்க வைக்கும். அதைத் தடுக்க அவர்களுக்கு இயலாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்.” (திருக்குர்ஆன் 21:40)
= யுகமுடிவு நேரம் திடீரென தங்களிடம் வருவதைத் தவிர வேறெதனையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அதன் அடையாளங்கள் வந்து விட்டன. அது அவர்களிடம் வரும் போது அவர்கள் படிப்பினை பெறுவது எப்படி? (திருக்குர்ஆன் 47:18)
ஆம் அன்பர்களே இன்று வாழும் நமக்காக இறைவன் அருளிய இறுதி வேதம் திருக்குர்ஆன் நமக்கு முன்னே இருக்கிறது. அதன்பால் திரும்பி வாழ்வில் ஈடேற்றம் பெற முயல்வோமாக
= “மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழிகெட்டவர் தனக்கு எதிராகவே வழிகெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (திருக்குர்ஆன் 10:108)