பள்ளிகளில் இருந்தே பண்பியல் தொடங்குவோம்!
இரவும் பகலும் இன்று பெற்றோர்கள் உழைப்பது எதற்காக என்று கேட்டால் வரும் பதில் நம் அனைவருக்கும் தெரிந்ததே…
ஆம், தமது பிள்ளைகளைப் போற்றி வளர்ப்பதற்கே என்பதே!ஆனால் அந்தப் பிள்ளைகள் நாளை இவர்களை சற்றும் மதிக்காமல் அந்நியர்களோடு ஓடிப்போவதையும், இவர்களது வயதான காலத்தில் இவர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும், (வட இந்தியாவில்) காசியில் கொண்டுபோய் விட்டு விடுவதையும், கருணைக் கொலை என்ற பெயரில் கொன்று விடுவதையும் அன்றாட நிகழ்வுகளாகக் கண்டு வருகிறோம். இவர்களுக்கு முறைப்படி கற்பிக்க வேண்டியவற்றைக் கற்பிக்காமல் வளர்த்ததே இவற்றுக்கெல்லாம் காரணம்
கல்வியின் நோக்கம் பண்படுத்தலே, சம்பாதிப்பது அல்ல!
கல்வி கற்பிப்பதன் தலையாய நோக்கம் மனிதனை சீர்படுத்தி அவனை பண்புள்ளவனாக ஆக்கவேண்டும் என்பதாக இருக்கவேண்டும். மாறாக உணவை சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும். உண்மையில் அதற்குக் கல்வி கற்பதன் அவசியமும் இல்லை. காரணம் மனிதனை விட அறிவு குறைந்த விலங்கினங்களும் பறவைகளும் மீன்களும் எல்லாம் தங்களின் உணவை எளிதாகவே அடைவதைப் பார்க்கிறோம்.
ஒன்றே குலம், ஒருவனே இறைவன்!
குழந்தைகளுக்கு கற்பிக்கவேண்டிய முதல் பாடம் ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பதாக இருக்க வேண்டும். மனிதகுலம் அனைத்தும் ஒரு ஆண்- ஒரு பெண் ஜோடியில் இருந்து உருவானதே. எனவே அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்களே என்ற அடிப்படை உண்மை போதிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து படைத்த இறைவன் ஒருவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன், அவன் நம் மீது அளவிலா அன்பு கொண்டவன், அவன் நம்மைப் பரிபாலிக்கிறான். இவ்வுலகையும் அதில் உள்ளவற்றையும் நமக்காக படைத்த அவனுக்கு நாம் நன்றிக்கடனோடு வாழ கடமைப்பட்டுள்ளோம் என்பவற்றைக் கற்பிப்பதோடு இறைவன் அல்லாத எதுவும் வணக்கத்துக்குரியவை அல்ல என்பதையும் அடிப்படையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
அடுத்து இவ்வுலகின் தற்காலிக தன்மைகளை நினைவூட்டி இது மனிதனுக்கு ஒரு பரீட்சைக் கூடம், இந்த குறுகிய வாழ்வை முடித்துக்கொண்டு இறைவனிடம் மீள உள்ளோம், நம் செயல்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு, மரணத்திற்குப் பிறகு நமக்கு சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பவற்றை அவசியமாகக் கற்பிக்க வேண்டும்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; ….. – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.(திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
இந்த வசனத்தில் கூறப்படுவது போல சதா நாம் இறைவனின் கண்காணிப்பில் உள்ளோம் என்ற உணர்வு குழந்தைகளுக்கு உண்டாக்கப் பட்டால்தான் நற்குணமுள்ள பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.
அதேவேளையில் நீதிபோதனைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை போதித்தால் குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கை வளராது. நாத்திகமும் போலி பக்தியும்தான் வளரும். நன்னடத்தை வளராது, சுயநலம்தான் வளரும், நாட்டில் பாவங்கள் மலியும்!
நன்மை- தீமை பிரித்தறிதல்
உண்மையான இறையச்சத்தைப் வளர்ப்பதற்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டியது நன்மை எது தீமை எது என்பது பற்றிய கல்வியாகும். அதாவது இறைவனின் பார்வையில் எது பாவம் எது புண்ணியம் என்பதை அறிந்தால்தான் மனிதனால் இறைவனின் ஏவல் விலக்கல்களை அறிந்து கொண்டு செயல்படமுடியும். அப்போதுதான் வாழ்க்கையில் நல்லொழுக்கம் என்பது ஏற்படும்.
பயனுள்ள கல்வி
குழந்தைகள் தங்கள் பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தவும் அதைக்கொண்டு இவ்வுலகை ஆராயவும் அதன் விளைவாக இவ்வுலக வளங்களை மனிதகுலத்துக்கு பயன்படும் வண்ணம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு தூண்டுகோலாக பாடத் திட்டங்கள் அமைய வேண்டும்.
மேற்கூறப்பட்ட போதனைகளை கட்டாயப் பாடமாக்கி அத்துடன் மற்ற பாடங்களை போதிக்கும்போதுதான் மனிதன் தான் பெற்ற கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவான். இல்லையேல் அது அழிவுக்குத்தான் பயன்படும். அதைத்தான் இன்று வல்லரசுநாடுகளின் செயல்பாட்டில் காண்கிறோம்.
அவை இன்று அணுஆயுத தளவாடங்களைக் காட்டி உலகநாடுகளின் வளங்களைக் கொள்ளையடித்து வருவதும் உலகில் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தி மனித உயிர்களை மிக மலிவாகக் கருதி மாய்த்து வருவதும் தீய கல்வியின் பயன்பாடுகளே!