பணியாளர்களிடம் பணிவு!
இவ்வுலகம் என்ற தற்காலிக பரீட்சைக் கூடத்தில் நமக்கு மற்ற மனிதர்களை விட பொருளாதாரத்தைக் கொண்டோ அதிகாரங்களைக் கொண்டோ மேன்மையைத் தந்தும் நம்மை இறைவன் பரீட்சிப்பான். நாம் அவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் பற்றி இறுதித்தீர்ப்பு நாளில் இறைவன் விசாரிப்பான். நல்லவிதம் நடந்து கொண்டால் சொர்க்கம் நமக்குப் பரிசாகக் கிட்டும். தீயவிதமாக நடந்து கொண்டால் நரகம் கிட்டும்.
இறைவனின் இறுதித்தூதர் கீழ்க்கண்டவாறு நமக்கு வழிகாட்டுகிறார்கள்.
பணியில் ஒத்துழை:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உங்கள் பணியாளர்கள் உங்களுடைய சகோதர்கள், அவர்களை உங்களுக்குக் கீழே நியமித்தவன் இறைவனே! எனவே, ஒருவர் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் சகோதரர்க்கு தான் உண்பவற்றிலிருந்து உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதைப் போன்றே அவருக்கும் ஆடைகள் அளிக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுக்காதிருக்கட்டும். அப்படி (அவர் சக்திக்கு மீறிய பணியை) கொடுக்க நேரிட்டால் அவர்களுக்கு அப்பணியில் தாமும் உதவி செய்யட்டும்.”
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.
பகிர்ந்து உண்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”உம்முடைய பணியாளர் உமக்காக உணவைக் கொண்டு வரும்பொழது, நீர் அவரை உம்மோடு அமர்ந்து உணவருந்த அழைக்காவிடினும், அதிலிருந்து ஒரிரு கவள மேனும் அவருக்கு உணவளிப்பாயாக! அடுப்பின் வெம்மையில் சிரமம் ஏற்று அந்த உணவை சமைத்தவர் அவரே!”
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம்
மன்னிப்பு:
“எத்தனை முறை நம்முடைய பணியாளர்களை மன்னிக்க வேண்டும்?” என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். இறைத்தூதர் மவுனமாக இருந்தார்கள். அந்த மனிதர் மீண்டும் வினவினார். மூன்றாவது முறையும் அவர் வினவியதும், ரஸூல் (ஸல்) அவர்கள் விடை பகர்ந்தார்கள்: ”நாளொன்றுக்கு எழுபது முறை (அதாவது அதிகமதிகம்) அவரை மன்னித்து விடுவீராக”
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல் :அபூதாவூது
ஏமாற்றாதே:
”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன் – ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன்! இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்! மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்!” – என்று இறைவன் கூறுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி)
இம்மையிலேயே திருத்திக்கொள்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அமர்ந்து தனது நிலைமையை எடுத்துக்கூறுகிறார்.
‘இறைத்தூதரே! எனக்கு இரண்டு அடிமைகள் உண்டு.
அவ்விருவரும் என்னிடம் பொய்யாக நடந்து கொள்கிறார்கள்;
மேலும், எனக்கு மோசடி செய்கிறார்கள்: இன்னும், எனக்கு மாறு செய்கிறார்கள்; இதனால் நான் அவர்களை திட்டிவிடுகிறேன்; இன்னும் நான் அவர்களை அடிக்கவும் செய்கிறேன். நான் அவர்களிடம் நடந்துகொள்ளும் முறை எப்படி?’ என வினவுகிறார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் அவர்கள் உனக்கு செய்த பொய், மோசடி, மாறு ஆகியவற்றையும், நீ அவர்களுக்கு வழங்கிய தண்டனையையும் நீதி தராசில் வைத்து நிறுக்கப்படும். அவர்கள் செய்த குற்றங்களுக்கு நிகராக உனது தண்டனை அமைந்துவிட்டால், அது உனக்கு போதுமானதாகும். இதனால் உன்மீது ஏதும் பாவம் கிடையாது. ஆனால், அவர்களின் குற்றங்களை விடவும் உனது தண்டனை குறைவாக அமைந்து விட்டால், இது உனக்கு சிறப்பானதாகும். மாறாக அவர்களை குற்றங்களை விடவும் உனது தண்டனை மேலோங்கிவிட்டால், அவர்களுக்காக உமது நன்மைகள் பிடுங்கப்பட்டு நீ பழிவாங்கப்படுவாய்’ என கூறினார்கள்.
இதை கேட்ட அந்த மனிதர் சப்தமிட்டு அழ ஆரம்பித்து, கண்ணீர் வடித்தார். அவரைப்பார்த்து நபி (ஸல்) அவர்கள் ‘திருக்குர்ஆனில் வருகிற “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (21:47)
இந்த வசனத்தை நீ படிக்கவில்லையா?’ என்று கேட்டார்கள்