படைத்தவனுக்கே பரிந்துரையா?
ஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம்.
திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
2:164 .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? இதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:
23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”
அவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாப் படைத்துள்ளான் என்பது.
இதில் நமது செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு #நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.
இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப் படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த #தற்காலிகப் #பரீட்சைக் #கூடம்!
67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
இந்தப் பரீட்சைக் கூடத்தின் இயல்புகள்
கீழ்கண்டவை இந்த உலகம் என்ற பரீட்சைக் கூடத்தின் இயல்புகள் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்:
= இங்கு நேரான பாதையை மக்களுக்குக் காட்டித்தர இறைவன் தனது #தூதர்களையும் தன் #வேதங்களையும் அனுப்புகிறான். அதே நேரத்தில் இது ஒரு பரீட்சை என்ற காரணத்தால் இதில் #ஷைத்தான் என்ற ஒரு கெட்ட சக்திக்கும் நம்மோடு வாழ அனுமதி வழங்கியுள்ளான்.
= இங்கு இறைவன் எதை செய் என்று சொல்கிறானோ அதுவே நன்மை அல்லது புண்ணியம் ஆகும். எதை செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே தீமை அல்லது பாவம் ஆகும். அவற்றை இறைவனின் வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிகிறோம்.
= இங்கு நல்லவையும் தீயவையும் நியாயமும் அநியாயமும் செல்வமும் வறுமையும் நம் முன் மாறிமாறி வரும். நல்லோர்களுக்குத் துன்பமும் கஷ்டமும் தீயோர்களுக்கு இன்பமும் மகிழ்ச்சியும் கிடைப்பதெல்லாம் இங்கு சகஜம். அவ்வாறு நன்மை செய்வதற்கும் தீமை செய்வதற்கும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் இடமே இவ்வுலகம்.
= மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக உங்களை நாம் சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)
= யார் எவ்வாறு வேண்டுமானாலும் எதைக்கொண்டு வேண்டுமானாலும் பரீட்சிக்கப்படலாம். அவற்றின் நியாயம் அநியாயம் என்பது நமது சிற்றறிவுக்கு எட்ட வேண்டும் என்பது இல்லை. நீர்க்குமிழிகள் போல் வாழ்ந்து மறையும் மனிதர்களின் தீர்ப்புக்காக இறைவன் காத்திருக்க வேண்டிய அவசியமும் அவனுக்கு இல்லை.
= இந்த பரீட்சையை எவ்வளவு பக்குவமாக நடத்துவது என்பதை மிக நுணுக்கமாக அறிந்தவன் இறைவன். அவனது அறிவுநுணுக்கமும் அளவிலா ஆற்றலும் நம்மைச்சுற்றி உள்ள படைப்பினங்களின் பக்குவமான அமைப்பிலும் அவற்றின் குறையற்ற இயக்கத்திலும் அது பிரதிபலிப்பதைக் காண்கிறோம். அற்பஜீவிகளான நம்முடைய சிற்றறிவுக்கு அறவே புலப்பட வாய்ப்பில்லை.
= அவன் எதுவரை அனுமதிக்கிறானோ மற்றும் எவற்றை நமக்கு அறிவித்துத் தருகிறானோ அவை மட்டுமே நமது அற்ப அறிவு என்பது. அதை வைத்துக்கொண்டு அந்த இறைவனின் அறிவையும் ஆற்றலையும் எடைபோடுவதும் அவனது திட்டத்தில் குறைகாண்பதும் மனிதனின் அறியாமையின் வெளிப்பாடே!
மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட அற்பமான தவணையில் தோன்றி மறையும் அற்பத்திலும் அற்பமான மனிதன் ஆதியும் அந்தமும் இல்லாதவனும் அளவிலா அறிவும் ஆற்றலும் கொண்டவனும் ஆன இறைவனுக்கு அவன் ஏற்பாட்டுக்கு மாற்று ஒன்றைப் பரிந்துரைப்பது அகங்காரத்தின் உச்சகட்டம் என்பதை நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டு இறைவன்பால் திரும்பி அவனிடம் மனிதனின் செயல்பாடுகள் குறித்து விசாரணை உள்ளது. அன்று வருத்தப்படுவது மனிதனுக்கு பயனளிக்காது.
“ஆண்டுகளின் எண்ணிக்கையால் நீங்கள் எவ்வளவு காலம் பூமியில் தங்கினீர்கள்?” என்று அவன் (இறைவன்) கேட்பான். அதற்கவர்கள் “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியே தங்கியிருப்போம்” என்பார்கள்.” (அல்குர்ஆன் 23: 112,113)