பக்ரீத் ஏன் கொண்டாடப்படுகிறது?
தியாகத் திருநாள் என்று அறியப்படும் பக்ரீத் பண்டிகை சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இப்ராஹீம் என்ற இறைத் தூதரின் முன்மாதிரி தியாகங்களை நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது. ஒரு கோவில் பூசாரியின் மகனாகப் பிறந்து அந்நாட்டில் சிலைவழிபாட்டுக் கலாச்சாரத்துக்கு எதிராக தனிமனிதனாக நின்று போராடி ஏக இறைவழிபாட்டை நிலைநாட்ட பாடுபட்ட மகான் அவர்.
அந்த போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு அரசனால் நெருப்புக் குண்டத்தில் தூக்கி எறியப்பட்டார். இறையருளால் அதிலிருந்து காப்பாற்றப் பட்டார். தொடர்ந்து தனது துணைவியாரையும் பச்சிளம் பாலகனையும் பாலைவனத்தில் தனியாக விட்டுச் செல்லும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டார்.
அந்த சோதனையிலும் அம்மூவரும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து அந்த மகன் இஸ்மாயில் நடமாடும் பருவம் அடைந்தபோது அவருக்கு அடுத்த சோதனை இறைவன் புறத்திலிருந்து காத்திருந்தது………
பச்சிளம் பாலகன் வளர்ந்து ஒடியாடித் திரிகின்ற பருவம்.. ஒரு நாள் நபி இப்றாஹிம்(அலை) அவர்கள், பல்லாண்டு ஏங்கிப் பன்முறை இறைவனிடம் வேண்டிப் பெற்ற அருமை மகனை தன் கைகளாலேயே அறுத்துப் பலியிடும் கனவொன்றைக் காண்கிறார்கள். இதை இறை உத்தரவு என்பதைப் புரிந்து கொள்கிறார்கள்.
இறைவனின் நாட்டத்தை நிறைவேற்றுவதே அடியானாகிய தனது கடமை என முடிவெடுத்து, தனது கனவைச் செயல்படுத்த அன்பு மகனிடம் விவரிக்கிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் இஸ்மாயில்(அலை) அவர்கள் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்தப் பதில் நமது சிந்தனைக்குரியது.
“அன்புத் தந்தையே இறைவன்வின் கட்டளைப்படிச் செய்யுங்கள். இறைவன் நாடினால் அதில் என்னை நீங்கள் பொறுமையாளர்களாகவே காண்பீர்கள்” (அல்குர்ஆன் 37:102)
என்று மிக அழகாகப் பதில் கூறுகிறார்கள்.
சகோதர, சகோதரிகளே! இந்த வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை இவ்வுலகம் என்பது ஒரு பரீட்சைக்கூடம் என்ற அடிப்படையை புரிந்து கொண்டோமானால் இறைவனின் விருப்பத்திற்கு முன்னால், பந்தம், பாசம், ஆசை, அபிலாசைகள் அனைத்தும் நாம் துறக்கத் தயாராகி விடுவோம். இறைவனின் விருப்பத்தை நிறைவுச் செய்வதே அடியார்களின் தலையாய கடமை என்பதைத் தந்தையும், தனயனும் எந்த அளவு உணர்ந்திருக்கிறார்கள்? இதுதான் இங்கு இவர்களுக்கு முன்னால் வைக்கப் பட்ட சோதனை!இது ஓர் கடுமையான சோதனைக்கட்டம்.
இப்றாஹிம்(அலை) கொண்ட உறுதியில் தளர்வதாக இல்லை. இந்தக் கட்டத்தில் ஷைத்தான் வந்து தந்தையின் உள்ளத்தில் பிள்ளைப் பாசத்தை உண்டாக்கி, சோதனையின் தோல்வியடையச் செய்ய முயற்சி செய்தான். தந்தை ஷைத்தானின் வலையில் சிக்கவில்லை, கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள், அடுத்து ஷைத்தான் பெற்ற தாயிடம் சென்று, அவர்களை சீண்டிப் பார்த்தான்.
பெற்ற மனம் பித்து என்பார்கள். ஆனால் இங்கு அந்தப் பித்து உள்ளமும் கலங்கவில்லை. மாறாக இறைவனின் விருப்பம் அதுவானால், அதை நிறைவேற்றுவதைத் தவிர நமக்கு வேறு வழி என்ன இருக்கிறது என்று கூறி ஷைத்தான் அடித்துத் துரத்துகிறார்கள்!.
இறுதியில் பலியிடப் போகும் மகனை நெருங்குகிறான். தனயனும் ஷைத்தானின் சாகச வார்த்தையில் மயங்கவில்லை. ஷைத்தானுக்கு அங்கும் தோல்வி. இறைவனது விருப்பம் அதுவானால் தந்தைக்கோ, தாய்க்கோ, தனயனுக்கோ அதில் என்ன உரிமை இருக்க முடியும்? ஓடிப்போ! என்று கல்லால் அடித்து ஷைத்தானைத் துரத்துகிறார்கள்.
இந்த முன்மாதிரிக் குடும்பத்தின் (தந்தை, தாய், தனயன்) செய்கையை இறைவன் பொருத்திக் கொண்டு அதன் ஞாபகார்த்தமாக இன்றும் மூன்று இடங்களில் கல் எறிவதை ஹஜ்ஜ் என்ற புனிதக் கடமையில் ஒரு அங்கமாக ஆக்கி இருக்கிறான் இறைவன்! இறுதியில் இப்றாஹிம்(அலை) அவர்கள் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களைக் கிடத்திக் கழுத்தில் கத்தியை ஓட்டத் தயாராகிறார்கள்.
37:103.ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது; நாம் அவரை ”ஓ இப்றாஹீம்!” என்றழைத்தோம். ”திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். ”நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.” ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்; இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக! இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.. நிச்சயமாக அவர் விசுவாசியான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (அல்குர்ஆன் 37 :103-110)
இப்றாஹிம்(அலை) அவர்களின் தியாக உணர்வை இறைவன் ஏற்றுக்கொண்டு இஸ்மாயில்(அலை) அவர்களுக்குப் பகரமாக ஒரு ஆட்டைப் பலியாக்கி உலகம் அழியும்வரை, மக்கா வந்து ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும், ஹஜ்ஜுக்கு வராத மற்றும் வசதி படைத்த முஸ்லிம்களும் குர்பானி கொடுப்பதையும் விதியாக்கியுள்ளான்.
ஆம்! இறைவனின் சோதனையில் உறுதியாக இருந்து அதில் வெற்றி பெற்றுவிட்டால், அதன் முடிவு எல்லை இல்லா மகிழ்ச்சியே அல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்தச் சம்பவங்கள் இறைவனுக்கு மிகவும் பிரியமானதாக ஆகி விட்டதால், அந்தச் சம்பவங்களை நினைவு கூறும் பொருட்டு அதை பண்டிகை தினமாகக் வழங்கியுள்ளான் இறைவன்!
வருடா வருடம் ஹாஜிகள் நிறைவேற்றும் பல கடமைகள் இந்தச் சம்பவங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. தியாகத்தின் திருவுருவங்களாகத் திகழ்ந்த நபி இப்றாஹிம்(அலை), இஸ்மாயில்(அலை) இருவராலும் புணர் நிர்மாணம் செய்யப்பட்ட கஃபா ஆலயத்தை வலம் வருவதை ஒரு வணக்கமாகவே இறைவன் ஆக்கிவிட்டான். அவர்கள் நின்று கஃபா ஆலயத்தைக் கட்டிய இடம் மகாமே இப்றாஹிம் என்று அறியப்படுகிறது. அதை ஹஜ்ஜின் போது தொழும் இடமாகவும் இறைவன் ஆக்கி விட்டான். (அல்குர்ஆன் 2:125)
தியாகத் திருநாள் நம்முன் ஒரு முக்கியமான விடயத்தை நினைவூட்டி நம்மைப் பரீட்சிக்கிறது. நமது நமது என்று சொந்தம் கொண்டாடும் சொந்த உடல், உறவுகள், உடைமைகள் இவை அனைத்தும் உண்மையில் நமதல்ல.
இவற்றின் உரிமையாளன் இறைவனே. இவையனைத்தும் இந்த உலகம் எனும் பரீட்சைக் கூடத்தில் தற்காலிகமாக நமக்கு – இரவலாக – அவனால் தரப் படுபவை. அவற்றைத் தந்தவன் இவற்றில் எதையாவது திருப்பிக் கேட்கும்போது நாம் எந்த அளவுக்கு அவற்றை மனமுவந்து திருப்பிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்? …..
இக்கேள்வியை நினைவூட்டவே வருகிறது தியாகத் திருநாள்! இப்ராஹீம் (அலை) அவர்கள் இந்தப் பரீட்சையின் உச்ச்சகட்டத்தை சந்தித்தார்கள். இதில் வென்று காட்டினார்கள். இறைவனின் நண்பன் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள்!
இந்நாளில் நம்மில் வசதி உள்ளவர்களுக்கு முன் வைக்கப்படுவது இதன் குறைந்தபட்ச சோதனையே. இறைவன் உணவுக்காக படைத்துள்ள பிராணிகளில் ஒன்றை அவனுக்காக நாம் தியாகம் செய்ய அவர்களுக்கு பணிக்கப்படுகிறது. உண்மை இறை நம்பிக்கையாளர்களை கீழ்கண்டவாறு கூற இறைவன் பணிக்கிறான்:
6:162. நீர் கூறும்; ”மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
நன்றி: நியாஸ் அஹமது, பெங்களூர்