நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ?
நோயுள்ள உலகை ஏன் படைத்தாயோ?
இறைவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் நாம் நமது நிலையைப் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்….
– இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு துகள் போன்றவர்கள் நாம்.
– இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு இல்லை.
– மட்டுமல்ல நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.
– நாம் இங்கு வருவதும் போவதும் – அதாவது நம் பிறப்பும் இறப்பும் நம் விருப்பப்படி நடப்பது அல்ல.நம்மை மீறிய நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்திதான் இவற்றையெல்லாம் படைத்து பரிபாலித்து தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு வருகிறது. அந்த சக்தியையே இறைவன் அல்லது கடவுள் என்று அழைக்கிறோம்.
எனவே முதலாவதாக அவனே எஜமானன் நாமோ அடிமைகள் என்பதால் அவனைக் கேள்விகள் கேட்கவோ அவனது திட்டங்களுக்கு மாற்றாக வேறு ஒன்றைப் பரிந்துரைக்கவோ நமக்கு துளியும் அதிகாரமும் இல்லை அதற்கேற்ற அறிவும் ஆற்றலும் நம்வசம் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.
அர்த்தமுள்ளதே வாழ்க்கை
அடுத்ததாக நமக்கு வழங்கப்பட்டுள்ள அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும்போது இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இறைவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நாம் உணரலாம். திருமறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன. (திருக்குர்ஆன் 2:164)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக் கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? இதையே இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:
“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (திருக்குர்ஆன் 23:115)
அவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாகப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன.
யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள். அவர்களுக்கு சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. அங்குதான் அறவே நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் அளவிலா இன்பங்களும் எல்லாம் வழங்கப்படும். யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப் படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் பரீட்சைக் கூடம்!
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)
இந்தப் பரீட்சை வாழ்வின் ஒரு பாகமாகவே இங்கு நோய் வருகிறது
‘நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:155)
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்
‘(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.’ (திருக்குர்ஆன் 2:156-157)