நோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு?
நமக்கோ குழந்தைகளுக்கோ நமக்கு வேண்டியவர்களுக்கோ திடீரென நோய் வந்து விட்டால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. நிம்மதியை இழந்து விடுகிறோம்.
சில அடிப்படையான விஷயங்களைப் புரிந்து கொண்டு அவற்றை மனதில் இருத்தி அதன்படி செயல்பட்டால் நோயும் குணமாகும், அந்த நோய் கொண்டுவரும் உடல்ரீதியான, மனரீதியான, மற்றும் பொருள்ரீதியான இழப்புகளில் இருந்தும் நாம் நம்மை சுதாரித்துக் கொள்ளலாம்.
நோய் ஏன் வருகிறது? முதலில் நோய் ஏன் வருகிறது? பல பதில்களை நாம் அறிந்திருந்தாலும் அது நம்மைப் படைத்தவன் புறத்திலிருந்து எச்சரிக்கை என்பதை அதிமுக்கியமாக நாம் உணர வேண்டும்! கண்களை மூடிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் குதிரையை அதன் மேலுள்ள குதிரைஒட்டி மெதுவாக கடிவாளம் கொண்டு இழுக்கும் போது அக்குதிரை நிதானத்தை அடைகிறது.
அதுபோன்ற ஒரு செயலே நோய் என்பதும்! மனிதன் அன்றாட வாழ்க்கையில் ஈடுபடும்போது இறைவனைப் பற்றியோ, இறைவன் புறத்திலிருந்து அனுபவித்துக் கொண்டு வரும் எண்ணற்ற அருட்கொடைகளைப் பற்றியோ சிறிதும் பொருட்படுத்துவதில்லை.
தன்னிலை மறந்து கண்ணை மூடியவனாக ஓடிக்கொண்டிருக்கும் அவன் அவனது உடல், பொருள் ஆவி என அனைத்துக்கும் சொந்தக்காரன் தன்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன்தான் என்பதை மறந்து விடுகிறான்.
அவனது கருணை இல்லாமல் தன்னால் இங்கு வாழ முடியாது என்பதையும் அவன் கொடுத்துவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதையும் எளிதாக மறந்து விடுகிறான்.
அப்படிப்பட்ட மனிதனை நிதானப் படுத்த இறைவன் விடுக்கும் எச்சரிக்கையே நோய் என்பது! நோய் வரும் முன் வரை தனது உடல் இயக்கங்களை சமநிலையில் இயக்கிவந்த இறைவனின் கருணையை நினைவூட்ட வருகிறது நோய்!
அவ்வாறு இறைவனை நினைவூட்டி மனிதனை பாவங்களில் இருந்து மீட்டு நல்லவனாக மாற்ற வருகிறது நோய்!எனவே நோய் வரும்போது நாம் மிக மிக முக்கியமாக உணர வேண்டியவை:
படைத்தவனை உணர்வோம்: நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் கருணை மிக்க இறைவன் ஒருவன் இருக்கிறான். நாம் இதுவரை தங்கு தடையின்றி அனுபவித்து அருட்கொடைகளுக்கு நம் இறைவனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அந்த ஒருவன் மட்டுமே நம் அனைவருக்கும் இறைவன்.
அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவன் மட்டுமே நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்க முடியும். அவன் எப்படிப்பட்டவன்? திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான்:
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
(அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ கருதி விடாதீர்கள். இவ்வுலகைப் படத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறப்படும். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது.)
அப்படிப்பட்ட இறைவனை நேரடியாக விளித்துப் பிரார்த்திக்க வேண்டும். நமக்கு வாய்த்துள்ள கஷ்டங்களையும் குறைகளையும் நீக்குமாறு முறையிட வேண்டும். நோயிலிருந்து விரைவில் நிவாரணம் நல்குமாறு கோர வேண்டும்.
நமது குறைகளை நமது இறைவனிடம் முறையிட எந்த இடைத்தரகர்களையும் நாடக்கூடாது. அவனுக்கு இணையாக வேறு யாரையும் தெய்வங்கள் என்று கருதி வணங்கக்கூடாது. உயிரும் உணர்வும் அற்ற உருவங்களை நோக்கி ‘கடவுளே’ என்று அழைத்து அவனை இழிவு படுத்தக் கூடாது.
30:40 ‘அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.’
திருக்குர்ஆனில் இறைவன் நமக்கு இவ்வாறு பிரார்த்திக்குமாறு கற்றுத்தருகிறான்.
“இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்” (குர் ஆன் 1 : 4).
படைத்தவனை விட்டு விட்டு அவனது படைப்பிங்களை வணங்குவதோ அவைகளிடம் பிரார்த்திப்பதோ நமக்கு எந்த பயனையும் தராது. அது பாவமாகும். அதனால் நோயும் குணமாகாது மாறாக இறைவனது கோபத்தை அது தூண்டும்.
திருமறை மூலம் இறைவன் கற்றுத்தருவதைப் பாருங்கள்; ‘அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான். நான் நோயுற்ற கால்த்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான். மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.’ (குர்ஆன் 26:78-81)
மேற்கண்டவற்றை உணர்ந்து நம்மைப் படைத்தவன்பால் திரும்பி பாவ மன்னிப்பு கோர வேண்டும். அடுத்ததாக நாம் உணர வேண்டியது:
இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை: இவ்வுலக வாழ்க்கை என்பது தற்காலிகமானது. அழியக்கூடியது. இதை இறைவன் ஒரு பரீட்சைக் கூடமாக ஏற்படுத்தியுள்ளான்.
67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்¢மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக மன்னிப்பவன்.
ஒருநாள் இவ்வுலகம் முற்றாக அழிக்கப் படும். மீண்டும் இறைவனிடமிருந்து கட்டளை வரும்போது இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைவரும்- அதாவது இப்பூமியின் மீது தோன்றிய முதல் மனிதனில் இருந்து கடைசி மனிதன்வரை அனைவரும்- மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவார்கள்.
அந்த நாள் தான் இறுதித்தீர்ப்பு நாள் எனப்படும். எனவே இங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சூழ்நிலைகளும் வசதிகளும் கொடுக்கப் படுகின்றன.
சிலருக்கு செல்வமும் சிலருக்கு வறுமையும் சிலருக்கு ஆரோக்கியமான உடல்கட்டும் சிலருக்கு உடல் ஊனமும் என மாறி மாறி கொடுக்கப்பட்டு இங்கு மனிதர்கள் பரிசோதிக்கப் படுகிறார்கள்.
அது மட்டுமல்ல, இங்கு அமைதி, அட்டூழியம் அக்கிரமம், நியாயம், அநியாயம் என பல சூழ்நிலைகளையும் கடந்து செல்ல வேண்டி வரும், இது ஒரு தற்காலிகமான சோதனைக்கூடம் என்பதால்!
மறுமை வாழ்க்கையே உண்மையானது: 21:35 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
இங்கு இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். கட்டுப்படாமல் தான்தோன்றித் தனமாக வாழபவர்களுக்கு தண்டனையாக நரகத்தை வழங்குகிறான்.
நமது உண்மையான மற்றும் நிலையான முடிவில்லாத வாழ்க்கை என்பது மரணத்துக்குப் பிறகு உள்ள வாழ்க்கைதான். அது ஒன்று சொர்க்கத்தில் அமையும் அல்லது நரகத்தில் அமையும். இவை இரண்டும் அல்லாத வேறு ஒரு வாழ்க்கை கிடையாது.
இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை என்ற வாய்ப்பு ஒரே ஒரு முறை கிடைப்பது. மீண்டும் மீண்டும் பிறப்பது என்பது கிடையாது. அதுவும் அவரவரது மரணம் வரை மட்டுமே இவ்வாய்ப்பு நீடிக்கும்.
3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும். அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான் உங்க(ள் செய்கைக) ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் உன்னிப்பாக, கவனமாக ஒழுங்குற செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம்.
ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.
மறுமை சாத்தியமா?: சொர்க்கம் நரகம் என்பது கற்பனையோ மாயையோ அல்ல என்பதை சற்று சிந்தித்தால் உணரலாம். சாதாரண ஒரு இந்திரியத் துளியில் இருந்து உருவாகி இன்று பூமியில் நடமாடிக்கொண்டிருக்கிறோம்.
இது எப்படி வாஸ்தவமோ அதைவிட வாஸ்தவம் அது, இதை நடத்திக்கொண்டிருக்கும் இறைவனுக்கு நம்மை மீண்டும் படைப்பது என்பது கடினமானது அல்ல.
36: 77-79 ”மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ”எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?” என்று. (நபியே!) நீர் கூறுவீராக! ”முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்” என்று’·
இறுதித்தீர்ப்பு நாளின்போது ஒவ்வொரு மனிதனும் இப்பூமியின் மீது செய்த புண்ணியங்களும் பாவங்களும் எடுத்துக்காட்டப்படும். புண்ணியங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு சொர்க்கம் விதிக்கப்படும் பாவங்களை அதிகமாக சம்பாதித்தவர்களுக்கு நரகம் விதிக்கப்படும்.
சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்?: அது ஓர் சாந்தியும் சமாதனமுமான இருப்பிடம். அங்கு கவலை, தீமை, பகை, சோர்வு, நோய், முதுமை, பஞ்சம், போன்ற எதற்குமே இடம் இல்லை. திகட்டாத இன்பங்களில் ஊறித் திளைக்கும் இடம் அது.
தோட்டங்களும் பூங்காவனங்களும் மாசற்ற நீரூற்றுகளும் உயர் மாளிகைகளும் சுவைமிக்க கனிகளும் உணவுகளும் பானங்களும் அளவின்றி அனுபவிக்க இறைவன் ஏற்பாடு செய்த இடம்! என்றும் இளமையோடு இருக்கும் இடம்! காரணம் மரணம் என்பது இனி இல்லையல்லவா? இதோ தனது திருமறையில் இறைவன் கூறுகிறான்:
43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும் இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும்,கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன. இன்னும், ‘நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!’ (என அவர்களிடம் சொல்லப்படும்.)
47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன. இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தின் எவன் என்றென்றுமே தங்கியிருந்து,கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?
29:58 எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நற்காரியங்கள் செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம். அவற்றில் அவர்கள்நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள். (இவ்வாறாக நற்)செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.
நரகமும் காத்திருக்கிறது: சொர்க்கத்தைப் போலவே நரகமும் மறுபுறம் காத்திருக்கிறது. அது இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் காத்திருக்கிறது.
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர் ஆன் எச்சரிக்கிறது:
7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு – இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
4:56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!…… கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
18:29 (நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: ‘இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது.’ ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம். (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப் படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும் இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக இறைவனிடம் மன்னிப்பு கோரி திருந்திய வாழ்க்கை வாழவேண்டும்.
இறைவன் நம் அனைவரையும் நரகிலிருந்து காப்பானாக! சொர்க்கம் செல்லும் நன்மக்களில் நம்மை சேர்த்து வைப்பானாக!
வாழ்க்கைப் பரீட்சையில் சோதனைகள் சகஜம்: அடுத்ததாக நாம் உணரவேண்டியது, இவ்வாழ்க்கை என்பது ஓர் பரீட்சை என்பதால் இதில் நோய் உட்பட பல சோதனைகளும் சகஜமாக வந்து செல்லும் என்பதே! இதை இறைவனே எடுத்துக் கூறுகிறான்:
2:155 ‘நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும்,பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
அவ்வாறு சோதனைகள் வரும்போது நாம் பதறாமல் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் உண்மை நிலையை மனதில் இருத்தி நம்மை நாமே நிதானப் படுத்திக் கொள்ள வேண்டும். இதோ இறைவனே வழிகாட்டுகிறான்:
2:156-157 ‘(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, ‘நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன. இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.’
அதாவது நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள் என்ற பேருண்மையை நினைவு கூர்ந்து பொறுமை காத்து ஆக வேண்டியவற்றை கவனித்தால் நமக்கு மன நிம்மதியும் ஏற்படும், இழப்பையும் இலாபகரமானதாக மாற்ற முடியும்! …..எப்படி?
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபியவர்கள் கூறினார்கள்:
“சோதனைக்கு உள்ளான ஒருவர் இறைவன் இட்ட கட்டளைப்படி இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நிச்சயமாக நாம் இறைவனுக்கு உரியவர்கள், அவனிடமே திரும்பிச்செல்ல உள்ளவர்கள்) என்று கூறியபின் இறைவா, நான் படும் துன்பத்திற்கு கூலி வழங்குவாயாக, நான் இழந்ததை விட மேலானதைக் கொண்டு இதற்க்கு பகரம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித்தால் அவருக்கு இறைவன் மேலானதை வழங்குவான்” (நூல்: முஸ்லிம்)
நோய் வரும்போது பொறுமையைக் கடைப்பிடித்து இறைவனை நினைவுகூர்ந்து துதித்தால் நமது ஆரோக்கியத்தை முன்பிருந்ததைவிட இறைவனே செம்மைப் படுத்துகிறான்! இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
“ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டு அவனை விசாரிக்க வருவோரிடம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பானாயின், இறைவன் “என் அடியான் மீது எனக்கு கடமை இருக்கிறது. அவனை நான் இறக்க வைப்பின் அவனை சொர்க்கத்தில் நுழைய வைப்பேன். அவனை நான் குணப்படுத்தினால் அவனுடைய சதையை விட சிறந்த சதையையும் அவனுடைய இரத்தத்தை விட சிறந்த இரத்தத்தையும் மாற்றி அவனுடைய தீமைகளை அவனை விட்டும் அப்புறப்படுத்தி விடுவேன்” என்று கூறுவான். (நூல் : முஅத்தா)
மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்: மேற்கண்ட வாழ்வின் அடிப்படை உண்மைகளை நினைத்து மனதை உறுதிப்படுத்தி மேற்கொண்டு நோய்க்கான சிகிச்சைகளை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும். நோயை வாழ்வின் சோதனையாக ஏற்படுத்திய இறைவனே அதற்கு மருத்துவம் மேற்கொள்ளவும் பணிக்கிறான்.
“மருத்துவம் செய்யுங்கள்! ஏனெனில் மரணம் என்ற நோயைத் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் அல்லாஹ் மருந்தை உருவாக்கியுள்ளான்” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
“ஒவ்வொரு நோய்க்கும் மருந்துண்டு: மருந்து நோயை அடைந்தால் அல்லாஹ்வின் அனுமதியுடன் நோய் நீங்கிவிடுகிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)