Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
நீதி ஏன் கேலிக்குரியதாகிறது? - Thiru Quran Malar

நீதி ஏன் கேலிக்குரியதாகிறது?

Share this Article

அறவே வலுவில்லாத சட்டங்கள்:

நாட்டில் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போவதற்கான  முதல் காரணம் தனிநபர் ஒழுக்கம் பேணப்படாமையே. அதற்கு அடுத்த முக்கிய காரணம் நமது சட்டங்களின் வலுவின்மையே! சரி எது தவறு எது நன்மை எது தீமை எது நியாயம் எது அநியாயம் எது என்பதை தீர்மானிக்கும் வேலையை மனிதனே மேற்கொள்வது பெரும் குழப்பங்களுக்குக் காரணமாகிறது.

அதன் காரணமாக பலமுறை சட்டங்கள் மாற்றபடுவதும் சிலருடைய சுயநல தேவைகளுக்காக சட்டங்கள் வளைக்கப்படுதும் நடக்கின்றன. அதனால் நீதி, நியாயம் என்பவை கேலிக்குரியவை ஆகின்றன. எந்தக் கொடிய குற்றத்தைச் செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனோதைரியமும் குற்றவாளிகளுக்கு உண்டாகின்றன. குறிப்பாக அதிகாரத்தில் உள்ளோர் அசைக்கமுடியாத ஆதிக்கம் பெற்று விடுகின்றனர்.

யார் தீர்மானிப்பது?

முதலில் இங்கு சரி எது, தவறு எது அல்லது நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதை தெளிவாக வரையறுத்து அறிந்தால்தான் சட்டம் என்பதை யாரும் இயற்றமுடியும். அந்த அறிவில்லாமல் மனிதன் தன் மனம்போன போக்கில் இயற்றும் சட்டங்கள் கண்டிப்பாக குறைபாடுள்ளதாகவே இருக்கும் என்பது தெளிவு!  

நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம். நம்மில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இளைஞர்களும் முதியோரும் ஏழைகளும் செல்வந்தர்களும் அறிஞர்களும் பாமரர்களும் உழைப்போரும் அதிபர்களும் என்று பலதரப்பினரும் உள்ளோம்.

மறுபுறம் நம்மைச்சுற்றி சிறிதும் பெரிதுமான கண்ணுக்குத் தெரிந்ததும் தெரியாததுமான பல ஜீவராசிகளும் உள்ளன. அனைவருக்கும் இங்கு உரிமைகள் உள்ளன. ஒருவருக்கு தவறாகவோ  பாவமாகவோ படுவது மற்றவர்களுக்கு தவறாகவோ  பாவமாகவோ படுவதில்லை.

அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் சரி எது தவறு எது என்பதை எவ்வாறு தீர்மானிப்பது
சற்று சிந்தித்துப்பாருங்கள்…

= பெரும்பான்மைக்கு மதிப்பளித்து ஒரு செயலை சரி என்றோ தவறு என்றோ நாம் தீர்மானிக்க முடியுமா? 

= அல்லது ஒரு சிலர் கூறுவது போல் மனசாட்சி கூறுவதே உண்மை என்று அதை ஏற்பதா?

 = அல்லது நம் முன்னோர்கள் செய்ததே சரி என்ற அடிப்படையில் செயல்படுவதா?

 = அல்லது நம்மிடையே உள்ள மதகுருமார்களும் சந்நியாசிகளும் மகான்களும் ஆன்மீகத் தலைவர்களும் சொல்வதே சரி என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? 

= king is always right! –(அரசன் எப்போதும் சரியே!) என்று சொல்லப்படுவது போல் அரசியல் தலைவர்களும் ஆட்சியதிகாரம் படைத்தோரும் பலாத்காரம் செய்வோரும் செய்வதே சரி என்று எடுத்துக்கொள்வதா?

= அல்லது நமது இனத்தவர், நமது மொழியினர், நமது மாநிலத்தவர், நமது கட்சியினர், நமது மதத்தவர் செய்வதுதான் சரி என்று அவர்களைச் சார்ந்திருக்கலாமா? 

நன்மை தீமைகளைப் பிரித்தறிய தெளிவான அளவுகோல்

இப்படி எந்த வழியில் நாம் சரி-தவறு அல்லது நன்மை – தீமை அல்லது பாவம் – புண்ணியம் பற்றி முடிவெடுத்தாலும் நமக்கு மிஞ்சுவது குழப்பமே என்பதை உணரலாம். காரணம் அது சார்புடையதாகவே இருக்கும் என்பது உறுதி! சிற்றறிவு கொண்ட மனிதர்களின் அறிவின் அடிப்படையில் அவை ஆனதால் கண்டிப்பாக குறைபாடுகள் உள்ளதாகவே இருக்கும். 

எனவே இந்த விடயத்தில் குழப்பமற்ற தெளிவான முடிவுக்கு வர ஒரே வழிமுறை இதுதான்:யார் இவ்வுலகிற்கும் அதில் உள்ளவற்றிர்க்கும் சொந்தக்காரனோ அதிபதியோ அவன் எதை நமக்கு நன்மை என்றும் அல்லது நமக்குத் தீமை என்றும் சொல்கிறானோ அதுவே உண்மையிலும் உண்மை. அவன்தான் இப்பெரண்டம் அனைத்தையும் அவற்றில் உள்ள சிறிதும் பெரிதுமான அனைத்து படைப்பினங்களையும் படைத்து இயக்கிப் பரிபாலித்து வருபவன்.

அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் பற்றிய முழுமையான அறிவுள்ளவன். அவனது அறிவு அனைத்தையும் சூழ்ந்தது. மனிதனுக்கும் மனித குலத்துக்கும் மட்டுமல்ல மற்ற அனைத்துப் படைப்பினங்களுக்கும் எது நல்லது எது கெட்டது என்பதை மிக மிகப் பக்குவமாக அறிபவன் அந்த இறைவன் மட்டுமே.

எனவே நம் பரிபாலகன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை.அது மட்டுமல்ல, இந்தக் குறுகிய தற்காலிகமான வாழ்வு என்ற  பரீட்சைக் களத்தில் அந்த இறைவன் எதைச் செய் என்று சொல்கிறானோ அதுவே புண்ணியம் என்பது.

அவன் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பது!ஆக, அந்த இறைவனுக்கு மட்டுமே நமக்கு எது நல்லது எது கெட்டது என்ற முழுமையான அறிவு உள்ளது. அவனுக்கு மட்டுமே எது புண்ணியம் எது பாவம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டு அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொண்டால் இவ்வுலக வாழ்விலும் அமைதியைப் பெறலாம்.

மறுமை வாழ்விலும் அவன் நமக்குப் பரிசாக வழங்கும் சொர்க்கத்தை அடையலாம்.எனவே நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சட்ட சிக்கல்களில் இருந்தும் அமைதியின்மையில் இருந்தும் விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இறைவனின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அளவுகோலை அமைத்துக் கொள்வதும் இறைவன் தரும் சட்டங்களை அமுல் படுத்துவதும் ஆகும்

Share this Article

Add a Comment

Your email address will not be published.