Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்? - Thiru Quran Malar

நாம் பின்பற்றவேண்டிய தலைவர் யார்?

Share this Article

வெவ்வேறு காலகட்டங்களில் இப்ப்பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு வந்து சென்ற அனைத்து இறைத்தூதர்களும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையைப் போதிப்பதற்காக அனுப்பப்பட்ட செம்மல்களே! அவர்கள் அனைவரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் நிராகரிக்கக் கூடாது. அவர்கள் வேற்று நாட்டவர் அல்லது வேற்று மொழியினர் வேற்று காலத்தவர்கள் என்று கூறி புறக்கணிக்கவோ தரம்  தாழ்த்தவோ இறைவிசுவாசிகளுக்கு அனுமதியில்லை, ஏனெனில் நம் மனிதகுலம் என்பது ஒரே தாய் மற்றும் ஒரே தந்தையில் இருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களால் ஆனதே.

அனைத்து இறைத்தூதர்களும்  நம்மவரே, அனைவரும் நமது மனித குடும்பத்துக்காக, நமது சகோதர சகோதரிகளை நேர்வழிப் படுத்த நமது இறைவனால் அனுப்பப்பட்ட சான்றோர் பெருமக்களே என்ற மனப்பாங்கோடு அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.

ஆனால் யாரை நாம் பின்பற்ற வேண்டும் என்பதை எப்படி தீர்மானிப்பது?

இறைத்தூதர்களின் வரிசையில் நம் மூதாதையருக்கு அனுப்பப் பட்டவர்களும் அடங்குவர், நம் நாட்டினருக்கு, நம் மொழியினருக்கு அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர். வேற்று நாட்டினருக்கு, வேற்று மொழியினருக்கு அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர்.  ஒரே கொள்கையையே அவர்கள் போதித்து இருந்தாலும் அந்தந்த காலகட்டங்களில் மக்களின் மனமுதிர்ச்சிக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு நடைமுறைச் சட்டங்களும் வணக்க வழிபாட்டு முறைகளும் அந்தந்த இறைத்தூதர்களால் போதிக்கப் பட்டன.

இன்று வாழும் நாம் மறுமையில் வெற்றி அடைய வேண்டுமானால் அல்லது மோட்சம் பெற வேண்டுமானால் இறைவன் யாரை நமக்காக அனுப்பியிருக்கிறானோ அவரையே நாம் பின்பற்றியாக வேண்டும். அதை விடுத்து நாம் நம் இனத்துக்கு அல்லது நம் நாட்டுக்கு அல்லது நம் மொழிக்கு அனுப்பப்பட்ட தூதரையோ அல்லது வேதத்தையோ மட்டுமே பின்பற்றுவோம் என்று பிரிவினை வாதம் பேசினால் நஷ்டம் நமக்குத்தான். அதுவும் சாதாரண நஷ்டம் அல்ல – நிரந்தர நரகம் அது!

இன்று நமக்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபி அவர்கள் தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு சில தகவல்களை முன் உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்வதற்காக முன்வைக்கிறோம்:
முஹம்மது நபி அவர்களுக்கும் அவருக்கு முன் வந்து சென்ற இறைத்தூதர்களுக்கும் இடையே நாம் கண்கூடாக காணக்கூடிய ஒரு சில வேறுபாடுகளை நாம் சற்று ஆராய்ந்தாலே இன்றைய காலகட்டத்துக்காக அனுப்பப்பட்டவர் இவர்தான் என்ற முடிவுக்கு வந்து விடுவோம்:

1. அகில உலகுக்கும் பொதுவான மற்றும் இறுதி இறைத்தூதராக முஹம்மது நபி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.

முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். உதாரணமாக,

7:65 ,இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;)

7:85 மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் ..”

தூதர்கள் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வந்து சென்றவர் ஏசு என்றழைக்கப் படும் ஈஸா (அலை) அவர்கள். அவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கித்தான் அனுப்பப் பட்டு இருந்தார்.

43:59 அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.

ஏசுவும் இஸ்ராயீலின்  மக்களை நோக்கி தனக்குப் பிறகு வரவிருக்கும் முஹம்மது நபியைப் பற்றி முன்னறிவிப்பும் செய்தார்கள்:

61:6 மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!)……

ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள்.  நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

7:158 (நபியே!) நீர் கூறுவீராக: “மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை – அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் – ..”

அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள்..இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.

2. முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர் மூலமாக அனுப்பப்பட்ட வேதம் அழியாமல் பாதுகாக்கப் படுகிறது.

முந்தைய இறைத்தூதர்கள் மூலம் அனுப்பப்பட்ட வேதங்கள் பிற்கால மக்களால் கூட்டப்படவோ குறைக்கப்படவோ செய்யப்பட்டுள்ளன. அருளப்பட்ட காலத்தில்  கலப்படமின்றி தூய்மையான நிலையில் இருந்த அவ்வேதங்கள் இன்று மனித கரங்களால் மாசுபடுத்தப்பட்ட நிலையில் காணப் படுகின்றன. அதுவும் அவற்றின் மொழிபெயர்ப்புகளைத்தான் நாம் காண முடிகிறதே தவிர அவற்றின் மூல மொழி வசனங்களை நாம் எங்கும் காண முடிவதில்லை. அதுமட்டுமல்ல, அவை அருளப்பட்ட மொழிகளே இன்று பேச்சுவழக்கில் இல்லை என்பதெல்லாம் நிதர்சனமான உண்மைகள்.

ஆனால் இறுதித் தூதர் மூலமாக அனுப்பப்பட்ட திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகள் கடந்தும் எந்த விதமான மாற்றங்களுக்கும் இரையாகாமல் அருளப்பட்ட மொழியிலேயே அட்சரம் பிசகாமல் அப்படியே உலகின் எல்லா மூலைகளிலும் கிடைக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. இதைப் பரிசோதிக்க உங்களுக்கு அருகாமையில் உள்ள பொது நூலகத்தில் உள்ள பல்வேறு மொழிகளில் கிடைக்கும் மொழிபெயர்ப்புகளை எடுத்து பாருங்கள். எல்லாவற்றிலும் மூல(அரபு) மொழி வசனங்கள் அப்படியே இருப்பதைக்  காண்பீர்கள்.

திருக்குர்ஆனுக்கு முன்னர் வந்த இறைவேதங்களின் இன்றைய நிலையை சற்று ஆராய்ந்தால் உங்களுக்கு உண்மை விளங்கிவிடும். அவற்றிலும் திண்ணமாக இறைவசனங்கள் உள்ளன. ஆனால் அவற்றுடன் இறைத்தூதர்களின் வார்த்தைகளும் அவர்களுக்கு பின்னர் வந்த மனிதர்களின் கூற்றுக்களும் இறைத்தூதர்கள் பற்றிய சரித்திர பதிவுகளும் கலந்து காணப்படுகின்றன.

அதனால் அவற்றை 100 சதவிகிதம் இறைவாக்குகள் என்று சொல்ல முடிவதில்லை. ஆனால் திருக்குர்ஆனின் நிலை இவ்விஷயத்தில் தனித்து விளங்குகிறது. அதில் பதிவாகியள்ளவை 100 சதவிகிதமும் இறைவாக்குகளே. (திருக்குர் ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப் படும் முறையும் என்ற குறிப்பைப் படிக்கவும்) .இந்த வேதத்தில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ மற்ற மனிதர்களின் வார்த்தைகளோ கலக்கவில்லையா?

இல்லை, நிச்சயமாக இல்லை. எவ்வாறு எனில் நபிகள் நாயகம் அவர்களின் கூற்று மற்றும் அவர் செய்த செயல்கள் பற்றிய செய்திகள் ஹதீஸ் எனப்படும் நூல்களாக தனித்து தொகுக்கப் பட்டுள்ளன. இவை இறைவாக்குகளோடு கலக்கவில்லை. அரபி இலக்கியத்தில் திருக்குர்ஆனும் ஹதீஸும் வெவ்வேறு இலக்கியத்தரத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இரண்டும் ஒன்றோடு ஒன்று கலவாமல் தனித்தனியாகவே விளங்குகின்றன.

3. முந்தைய இறைத்தூதர்களை மக்கள் கடவுள்களாக ஆக்கி வழிபட்டார்கள்.

இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும்  சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள்  படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம்.

ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ  பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது  உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.?

அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது  கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி, “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்” என்று எச்சரித்தார். 

இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.
அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல, தனக்காக பிறர்  எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். “யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார்.

4. முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.

இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள்.

அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப் பட்டு அவை பரிசோதிக்கப் பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.  இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை.

மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன.

அவர் கூறிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள் , பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள்  என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.
அன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல, எண்ணங்களில் மட்டுமல்ல, அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப் படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல.

அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி, கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார், அமர்ந்தார், எவ்வாறு உணவு உண்டார், என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார், இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி கூறுகிறான் இவ்வாறு:

33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. 

Share this Article

Add a Comment

Your email address will not be published.