Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
நற்குண நாயகர் எங்கள் நபிகளார் - Thiru Quran Malar

நற்குண நாயகர் எங்கள் நபிகளார்

Share this Article

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபிகளாரின் நற்குணங்களில் சிலவற்றை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளை அன்னாரின் வரலாற்றுப் பதிவுகளில் இருந்து காணலாம்.

கொள்கைக்காக ஊர்விலக்கு, பட்டினி

= அண்ணலாரின் அழைப்பை ஏற்று ஆரம்பத்தில் இறை மார்க்கத்தை ஏற்றவர்கள்  ஏழை-எளிய மக்களே. இக்கால கட்டத்தில் சத்திய மறுப்பாளர்கள்  இறை விசுவாசிகளை  ஊர் விலக்கு செய்து, மூன்றாண்டுகள் மக்காவில் அபுதாலிப் கணவாயில் தங்க வைத்தார்கள். அவர்களோடு மக்கள் தொடர்பு கொள்ளவோ உணவளிக்கவோ கூடாது என்று சட்டம் இயற்றி தடை செய்தார்கள். இச்சூழ்நிலையில் இறை விசுவாசிகள் இலைகளையும்,  தழைகளையும் உண்ணும் அளவுக்கு வறுமை  அவர்களை வாட்டியது.

= நபிகளாரின் வீட்டில் மூன்று நாட்கள் தொடர்ந்து அடுப்பெரியும் நிலை இல்லாத அளவுக்கு வறுமை  கடுமையாக இருந்தது.

= ஒரு போரின்போது பசியின் காரணமாக அண்ணலார் தன் அடி வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டு பணியாற்றினார்கள்.

உழைப்பின் சிறப்பை உரைத்தவர்

= “ஒரு மனிதன் யாசிப்பதைவிட ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அதை விற்று வாழ்க்கை நடத்துவது சிறந்தது” என உழைப்பின் உயர்வை உணர்த்திக் காட்டி யாசிப்பதை வெறுத்தார் அவர்.

= “எந்த இறைத் தூதரும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை” என நபி(ஸல்) அவர்கள் கூற, அவர்களின் தோழர்கள், “இறைத் தூதர் அவர்களே! தாங்களுமா?” என்று கேட்டார்கள்.  அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஆம். மக்காவாசியிடம் சில கீராத் கூலிக்காக நானும் ஆடு மேய்ப்பவனாக இருந்தேன்” எனக் கூறினார்கள்  

கடன் வாங்கிய ஜனாதிபதி

நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் கடன் வாங்கியிருந்தார்.  அம்மனிதர் கடனைத் திருப்பிக் கேட்கையில் நபியிடம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். அப்போது அருகிலிருந்த நபித் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ”அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்குப் பேசும்  உரிமை உண்டு” எனக் கூறி, அக்கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்திவிட்டு, ”வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என கூறினர்கள் நபிகள் நாயகம்.

கல்லடி வாங்கியும் பழிவாங்காத தலைவர்

= மக்காவின் அருகே உள்ள தாயிஃப் நகர மக்களை இறைமார்க்கத்தின் பக்கம் அழைத்தபோது அம்மக்கள் அண்ணலாரை கல்லால் எறிந்து பலமாகக் காயப்படுத்தினார்கள். இரத்தம் சொட்ட சொட்ட இறைவனிடம் அவர் பிரார்த்தித்த போது இறைவனின் வானவர்கள் அவரிடம் வந்தார்கள். “நபியே, நீங்கள் அனுமதித்தால் இதோ இந்த இரு மலைகளுக்கு இடையே உள்ள இந்த ஊரை நசுக்கி அழிக்க எங்களால் முடியும்” என்றார்கள். ஆனால் அந்த வேளையிலும் அம்மக்களைப் பழிவாங்க நபிகளார் சம்மதிக்கவில்லை. மாறாக “இம்மக்கள் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் நேர் வழி பெறாவிட்டாலும் இவர்களின் சந்ததிகள் நேர்வழி பெறக் கூடும்” என எண்ணி அம்மக்களுக்காக இறைவனிடம் இறைஞ்சினார் அண்ணலார்.

= மக்காவில் இருந்து அங்கிருந்த ஆதிக்க சக்திகளால் வெளியேற்றப்பட்ட நபிகள் நாயகமும் தோழர்களும் இஸ்லாம் வளர்ந்து ஆதிக்கம் பெற்ற பின்னர் பத்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் மக்காவுக்கு திரும்பி வந்து அதை வெற்றி கொண்டார்கள். அந்த நிகழ்வின் போது நபிகளாருக்கும் அவரது சகாக்களுக்கும் சொல்லொணா துன்புறுத்தல் செய்த எவரையும் பழிவாங்காது அனைத்து மக்களுக்கும் பொது மன்னிப்பு அளித்தார் நபிகளார்.

பொதுப்பணத்தை தீண்டாத ஆட்சித்தலைவர்

= ஒரு முறை பள்ளிவாசலில் பொதுச் சொத்தாக குவிந்துக் கிடந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை நபி அவர்களின் பேரர் ஹஸன் எடுத்து தன் வாயில் வைத்துவிட்டார். உடனே தன் பேரரை நோக்கி, “”சீ! சீ! அதைத் துப்பிவிடு” என்று கூறிவிட்டு, ”தர்மப் பொருளை நாம் உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள்.  பொதுச் சொத்தை உண்பதை தம் குடும்பத்தினர் மட்டுமல்ல, பின்னர் வரக்கூடிய தம் தலைமுறையினர் அனைவருக்கும் தடை செய்தார் அண்ணலார் அவர்கள். இன்றும் கூட நபிகளாரின் தலைமுறையினர் ஜகாத் என்ற பொது நிதியில் இருந்து தர்மம் பெறுவதில் இருந்து தடுக்கப்பட்டுள்ளார்கள்.

இப்படியும் ஒரு வள்ளலா?

கேட்கும் மக்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அண்ணலார் விளங்கினார். ஒரு முறை அழகுற நெய்யப்பட்ட சால்வை ஒன்றை ஒரு பெண்மணி அண்ணலாருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.  அந்தச் சால்வையை அண்ணலார் அவர்கள் வேட்டியாக அணிந்திருந்தார். அதனைக் கண்ட நபித்தோழர் ஒருவர் அதைத் தனக்கு வழங்குமாறு கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள் வீட்டினுள் சென்று அதைச் சுருட்டி எடுத்து, கேட்டவரிடம் கொடுத்து அனுப்பினார். 

கடுஞ்சொல் அறியாதவர் 

= ஒரு முறை நபி அவர்களிடம் ஒரு மனிதர் வீட்டிற்குள் வர அனுமதி கேட்டார். “இவர் அக்கூட்டத்தாரில் மிகவும் கெட்டவர்’ எனக் கூறிய நபிகள், அவர் உள்ளே வர அனுமதி கொடுத்தார். அவர் வீட்டினுள் வந்து உட்கார்ந்தபோது, அவரிடம் நபியவர்கள் முக மலர்ச்சியுடனும், கனிவுடனும் நடந்து கொண்டார். அந்த மனிதர் புறப்பட்டுச் சென்றபின் நபி அவர்களிடம் துணைவியார் ஆயிஷா அவர்கள், ”இறைத் தூதர் அவர்களே! இந்த மனிதர் இப்படிப்பட்டவர் எனத் தெரிந்தும் அவரிடம் முக மலர்ச்சியுடனும், கனிவுடனும் நடந்து கொண்டீர்களே’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள்,  ”ஆயிஷாவே! நான் யாரிடமும் கடுமையாக நடந்து கொண்டதை எப்போதேனும் நீ கண்டதுண்டா?” என்று மொழிந்தார்.

= நபி(ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனஸ் பின் மாலிக் என்பவர், “அண்ணலார் என்னை ஒரு போதும் திட்டியதோ, கடிந்து பேசியதோ கிடையாது’ எனச் சான்று பகர்கிறார்.

நம்பிக்கைக்கு உரியவர்

= மாற்றுச் சமுதாயத்தவர்கள்கூட தங்களின் பொருட்களை அண்ணலாரிடம் அடைக்கலமாகக் கொடுத்திருந்தனர். மக்காவைத் துறந்து மதீனாவிற்கு குடியேறிய போது தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த அடைக்கலப் பொருட்களை உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் பொறுப்பை தனது மருமகன் அலி (ரலி) அவர்களிடம் கொடுத்துவிட்டுத்தான் சென்றார்கள் நபிகளார்.

விரோதிகளாலும் குறைகூற முடியாத செம்மல்

= நபி அவர்கள் பொய் சொல்வதை மிகவும் கடுமையாக வெறுத்தார். அவரின் கொடிய விரோதி அபு ஜஹ்ல் கூட, ”நான் உம்மைப் “பொய்யர்’ என்று கூறமாட்டேன். நீர் கொண்டு வந்த மார்க்கத்தைத்தான் மிகவும் வெறுக்கிறேன்” என்றான்.

இறைவனின் நற்சான்றிதழ் பெற்ற மகான்= ”நபியே! நிச்சயமாக நீர் உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (திருக்குர்ஆன் 68:4)

= ”இறைவன் மீதும், இறுதி நாளின் மீதும், ஆதரவு வைத்து இறைவனை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.” (திருக்குர்ஆன் 33:21)

Share this Article

Add a Comment

Your email address will not be published.