நபித்தோழர்களை அரவணைத்த கிருஸ்துவ மன்னர்!
மக்கா நகரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சத்தியப் பிரச்சாரத்தை மேற்கொண்டு மக்களை இறைமார்க்கத்தின் பால் அழைத்துக்கொண்டு இருந்தார்கள். சத்தியத்தை ஏற்ற நலிந்தவர்களும் ஏழைகளும் ஆதிக்க வர்க்கத்தின் பயங்கரமான தாக்குதலுக்கு ஆளானார்கள்.
சித்திரவதைகளும் கொலைகளும் தொடர்ந்து நடக்க நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் நஜ்ஜாஷி என்ற கிருஸ்துவ மன்னர் ஆண்டு கொண்டிருந்த அபிசீனியா என்ற ஊரில் அடைக்கலம் தேடும் பொருட்டு ஒரு குழுவை ஜஃபர் பின் அபீதாலிபு என்ற நபித்தோழரின் தலைமையில் அனுப்பி வைத்தார்கள்.
அபீசீனியாவிற்கு நபித்தோழர்கள் அடைக்கலம் சென்றதும், மக்கத்து சத்தியமறுப்பாளர்கள் அபீசீனியாவிற்கும் அப்துல்லாஹ் பின் அபீ ரபீஆ இப்னுல் முகீரா அல்மக்ஸும்மிய்யி என்பவரையும், அம்ருப்னுல் ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மிய்யி என்பவரையும் தூதுக்குழுவாக அனுப்பி வைக்கிறார்கள்.
மக்காவில் அவர்களைத் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் அபிசீனியா வரை சென்று அங்கும் தொந்தரவு கொடுக்கத் துணிந்தனர் இந்த சத்தியமறுப்பாளர்கள்.
தங்களுக்கு சாதகமாக அரசவையில் மன்னரிடம் பேச கீழுள்ள அதிகாரிகளுக்கு காணிக்கைகளை கொடுத்து சரிக்கட்டி வைத்துக் கொண்டனர் மக்கத்து சத்தியமறுப்பாளர்கள்.
பிறகு நஜ்ஜாஷி மன்னரிடம் பேசினார்கள் : “மன்னரே! எங்களது ஊரிலிருந்து சில முட்டாள் சிறுவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் எங்களது சமூக மார்க்கத்தையும் விட்டு விட்டார்கள். உங்களது மார்க்கத்திலும் சேராமல் இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு பிரிவினர் உங்களது ஊருக்கு வந்திருக்கிறார்கள்”
“இவர்கள் புதிதாக ஒரு மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். அதனை நாங்களும் அறியவில்லை. உங்களுக்கும் அது தெரியாது. இவர்கள் நம்மைக் கெடுக்க வந்திருக்கிறார்கள்”
“அரசே! நாங்கள் இவர்களின் சித்தப்பாக்களும் பெரியப்பாக்களும் குடும்பத்தைச் சார்ந்தவர்களும்தான் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். மற்றபடி அந்நியர்கள் அல்ல. வெறுத்துப் போய் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்” என்று கூறி முடித்தனர்.
அங்கு சபையிலிருந்த அதிகாரிகளும் அப்படியே மொழிந்தனர்.
மன்னர் நபித்தோழர்களை அழைத்து விசாரித்தார்.
ஜஃபர் பின் அபீதாலிபு கூறினார்: “மன்னரே! நாங்கள் எதையும் அறியாத மக்களாக இருந்தோம். சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தோம். செத்த பிணங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம், அசிங்கமான மானக்கேடான காரியங்களைச் செய்துகொண்டிருந்தோம்.
சொந்த பந்தங்களான உறவுகளைப் பகைத்துக் கொண்டிருந்தோம், அண்டை வீட்டார்களுக்குத் தொந்தரவு செய்து வந்தோம், பலமானவர்கள் பலவீனமானவர்களைச் சுரண்டி வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் எங்களுக்கு ஒரு தூதரை இறைவன் அனுப்பினான். அவரது பாரம்பரியத்தை நாங்கள் அறிவோம். அவரது உண்மையையும் நாங்கள் அறிவோம்.
அவரது நேர்மையும் பரிசுத்தமான வாழ்க்கையும் எங்களுக்குத் தெரியும். அவர் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என எங்களுக்குச் சொன்னார். மற்றவைகளை விடச் சொன்னார். மரம் செடி கொடிகள் சிலைகள் போன்ற எதையும் வணங்கக் கூடாது என்று சொன்னார். உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று ஏவினார்.அவர் அமானிதத்தைக் காப்பாற்றச் சொன்னார். சொந்தபந்தகளைச் சேர்த்து வாழவேண்டும் என்றார்.
அண்டை வீட்டாருடன் நெருக்கத்தை ஏற்படுத்த ஏவினார். இறைவனால் தடை செய்யப்பட்டதைத் தவிர்க்கச் சொன்னார். உயிரைக் கொலை செய்யக் கூடாது என்றார். அசிங்கமான காரியத்தைத் தடுத்தார். பொய் சொல்லக் கூடாது என்றார். அனாதையின் சொத்தைச் சாப்பிடக் கூடாது என்றார். பெண்கள் மீது அவதூறு சொல்லக் கூடாது என்று எங்களுக்கு ஏவினார். தொழச் சொன்னார். ஜகாத் கொடுக்கச் சொன்னார். நோன்பு வைக்கச் சொன்னார்……” என்று அப்படியே பட்டியல் போட்டு பேசினார்.
தொடர்ந்தார் நபித்தோழர், “இதையெல்லாம் நாங்கள் நம்பியதாலும், செயல்படுத்தியதாலும் எங்களை இந்த சத்தியமறுப்பாளர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கி விட்டனர். அதனால்தான் நாங்கள் எங்கள் ஊரிலிருந்து உங்கள் நாட்டுக்கு வந்துவிட்டோம். உங்களைத் தேர்ந்தெடுத்து விட்டோம். உங்களது அடைக்கலத்திற்குத்தான் நாங்கள் ஆசைப்படுகிறோம்.
மன்னரே! உங்களது ஆட்சியில் எங்களுக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.அனைத்தையும் செவியுற்ற நஜ்ஜாஷி, “மக்காவிலிருந்து வந்தவர்களிடம் நான் விசாரித்து விட்டுத்தான் நான் எதையும் சொல்ல முடியும்” என்றார்.
சத்திய மறுப்பாளர்களுக்கு செய்தி எட்டியது. மறுநாள் மன்னரிடம் வந்தார்கள். “நீங்கள் நம்பும் ஈஸா(ஏசு)வைப் பற்றி இவர்களிடம் விசாரியுங்கள் அரசே!” என்று கேட்டுக் கொள்கிறார்கள். “ஈஸாவைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று மன்னர் நஜ்ஜாஷி நபித்தோழர்களிடம் கேட்டார். “ஈஸா என்பவர் இறைவனின் தூதர், இறைவனின் மகனாக அவர் இல்லை, இறைவன் வார்த்தையினால் உருவானவர், அவர் இறைவனின் மார்க்கத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இன்றைக்கு நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் அன்றும் அவர் சொன்னார்” என்று பதில் கூறினார்கள்.
நஜ்ஜாஷி மன்னர், “உங்கள் நபி முஹம்மதுக்கு இறைவனிடமிருந்து வேதம் வருவதாகச் சொன்னீர்களே, அதை வாசித்துக் காட்ட முடியுமா?” என்று கேட்கிறார்.அப்போது, திருக்குர்ஆனின் ‘மர்யம்’ என்ற அத்தியாயத்தின் வசனங்களை ஓதிக் காட்டினார் ஜஃபர் பின் அபீதாலிப்.அதைக் கேட்டதும் மன்னர் நஜ்ஜாஷி உண்மையைப் புரிந்து கொண்டார்.
“இது மூஸா(மோசே) நபிக்கு யாரிடமிருந்து வந்ததோ அவரிடமிருந்தே இவருக்கும் வந்ததைப் போன்றுள்ளது என்று” கூறிவிடுகிறார்.“மேலும் நீங்கள் எங்களது நாட்டில் அடைக்கலம் பெற்று விட்டீர்கள். உங்களது மார்க்கத்தின் பிரகாரம் இங்கே நடந்து கொள்ளலாம்” என்று அனுமதியளித்து விடுகிறார் மன்னர் நஜ்ஜாஷி!எல்லாப்புகழும் இறைவனுக்கே!. (ஆதாரம்: முஸ்னத் அஹமத்)