திருக்குர்ஆன் இறங்கிய வரலாறு
முஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள்.
அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.
ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள்.
கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூட நம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள்.
பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெறி, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது தன்னைச் சுற்றி இவையெல்லாம் நடந்துகொண்டிருக்க நபிகள் நாயகம் இந்த நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன? இவற்றின் முடிவு என்ன? நாம் ஏன் வாழ்கிறோம்? நாம் எங்கே போகிறோம்? …. என்பன பற்றியெல்லாம் சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள்.
இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலை நாடியவர்களாக மக்காவின் அருகே ஹிரா என்ற மலையில் ஒரு குகைக்குள் தனிமையில் தங்குகிறார்கள்.
இவ்வாறு இருக்கையில் ஒருநாள் ஜிப்ரீல் என்ற வானவர் அங்கு இறைவனிடமிருந்து வேத வசனங்களைத் தாங்கி வருகிறார்… ஆம் அன்றுதான் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்! முதன் முதலாக இறைவன் புறத்திலிருந்து இறங்கிய வசனங்கள் இவையே:
(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான். (திருக்குர்ஆன் 96:1-5)
இவற்றைத் தொடர்ந்து வந்த இறைக் கட்டளைகளின் அடிப்படையில் நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்றுமக்களிடையே பிரகடனம் செய்தார்கள்.
இறைவன் புறத்திலிருந்து தான் பெறும் செய்திகளையும் எச்சரிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின.
முஹம்மது நபியவர்கள் 40-ஆவது வயதில் இறைத்தூதராக ஆனது முதல் 63-ஆவது வயதில் மரணமடையும் வரை அவருக்கு அவ்வப்போது சிறிது சிறிதாக ஒலிவடிவில் அருளப்பட்ட வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் ஆகும்.
திருக்குர்ஆன் பாதுகாக்கப்படும் விதம்: இறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் (வானவர்) இவ்வசனங்களை கொண்டு வந்து நபிகளாருக்கு ஓதிக் காட்டுவார்கள். நபிகளாரோ எழுதவோ படிக்கவோ அறியாதவர். தனக்கு முன் ஓதப்படும் வசனங்களை மனப்பாடம் செய்து கொள்வார் நபிகளார். அது இறைவனுடைய ஏற்பாடு.
தொடர்ந்து ஜிப்ரீலிடம் (வானவர்) தான் செவியுற்ற வசனங்களை தனது தோழர்கள் முன் ஓதிக் காட்டுவார்கள். அவற்றை தோல்களிலும் எலும்புகளிலும் எழுதி வைத்துக் கொண்டனர் நபித்தோழர்கள்.
அது மட்டுமல்ல அவ்வசனங்களின் கவர்ச்சியில் தங்களைப் பறிகொடுத்த தோழர்கள் அவற்றை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேயும் அடிக்கடி ஓதும் பழக்கமுடையோரானார்கள். அதாவது ஒலி வடிவிலேயே திருக்குர்ஆன் வசனங்கள் பிரபலமாகின.
இதைப் புரிந்துக்கொள்ள ஒரு சிறு உதாரணத்தைக் கூறுவோம். தமிழில் பழைய திரைப்படப் பாடல்கள் எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள். ‘பாலும் பழமும் கைகளிலேந்தி…….” அல்லது“நான் ஆணையிட்டால்…” போன்ற பாடல்களை நீங்கள் அறிவீர்கள். அவை இயற்றப்பட்டு வருடங்கள் நாற்பதுக்கு மேலாகியும் அவை இன்றும் அவ்வாறே பாடப்படுவதைக் காண்கிறோமல்லவா? ஒலிவடிவிலேயே அவை மக்களிடையே பிரபலாமானதுதான் அதற்குக்காரணம்.
அவ்வாறுதான் திருக்குர்ஆன் வசனங்களும் முஸ்லிம்களிடையே பிரபலமாகின. புண்ணியம் கருதியும் தொடர்ந்த ஓதலின் காரணமாகவும் பலரும் குர்ஆன் வசனங்களை மனப்பாடம் செய்தனர்.
குர்ஆன் என்ற வார்த்தையின் பொருளே ‘ஓதப்படுவது’ என்பதே!ஆம், அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஒதிவருவது உலகெங்கும் முஸ்லிம்களின் பழக்கமாக உள்ளது. உலகிலேயே மிக மிக அதிகமாக மூல மொழியில் ஓதப்பட்ட மற்றும் ஓதப்படும் நூல் திருக்குர்ஆன் மட்டுமே!
குறிப்பாக ரமலான் மாதம் பகலில் விரதமிருந்து இரவில் நின்று தொழுவது இஸ்லாமிய கடமை என்பதை கேட்டிருப்பீர்கள். இரவில் நீண்ட நேர தொழுகைகளில் இமாமாக நிற்பவர் 30 நாட்களில் முழு குர்ஆனையும் ஓதி முடிப்பது வழக்கம். அந்த அளவுக்கு இமாம்கள் முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்திருப்பார்கள்.
அவ்வாறு முழு குர்ஆனையும் மனப்பாடம் செய்தவர்கள் ஆயிரக்கணக்கில் அன்றும் இருந்தார்கள். இலட்சக் கணக்கில் இன்றும் இருக்கிறார்கள். கோடிக் கணக்கில் நாளையும் இருப்பார்கள், (இன்ஷாஅல்லாஹ்)! இவ்வாறு முழு குர்ஆனும் ஒலி வடிவில் உலகெங்கும் உலா வருகிறது.
மனித மனங்களிலேயே பாதுகாக்கவும் படுகிறது. இதைப் பற்றி இறைவனும் குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
“நிச்சயமாக நாமே இந்த நினைவூட்டலை (குர்ஆனை) இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதைப் பாதுகாப்போம்” (திருக்குர்ஆன் 15:9)
இப்படியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்- இன்று உலகில் காணும் குர்ஆன்,பைபிள, பகவத்கீதை, உள்ளிட்ட எல்லா வேதபுத்தகங்களையும் மற்ற புத்தகங்களையும் குறுந்தகடுகளையும் எல்லாம் திரட்டி ஒரு மூலையில் இட்டு தீக்கிரையாக்கினாலும்,மறுபடியும் திரும்ப எழுதப் படக்கூடிய ஒரே புத்தகம் திருக்குர்ஆன் மட்டுமே!
காரணம் உலகெங்கும் உள்ள இலட்சக் கணக்கான மக்கள் மனங்களில் அது ஒரே போல பதிவாகி இருப்பதேயாகும்! மேற்படி இறைவனின் வாக்குறுதி புலர்ந்து வருவது புலப்படுகிறது அல்லவா?
முந்தைய வேதங்கள் ஏன் பாதுக்காக்கப்படவில்லை?
இப்போது உங்கள் மனங்களில் எழும் ஒரு சந்தேகத்தையும் ஆராய்வோம்.
முந்தைய இறைவேதங்களும் இறைவனால் அருளப் பட்டவைதானே, அவை ஏன் பாதுகாக்கப்படவில்லை?அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்காக குறிப்பிட்ட மக்களுக்காக அனுப்பப்பட்டவையாக இருந்தன என்பதே அதற்குக் காரணம்.
உதாரணமாக ஒரு நாட்டின் அரசியல் சாசனம் புதுப்பிக்கப் படும்போது பழையது காலாவதியாகி மதிப்பற்றவையாகி விடுகிறதல்லாவா?அதேபோலத்தான் முந்தைய வேதங்கள் காலாவதியாகிப் போனதனால் அவை பாதுகாக்கப் படவில்லை.
மாறாக திருக்குர்ஆன் ஏன் பாதுகாக்கப் படுகிறது? இது இறைவனின் இறுதிவேதம். இறுதிநாள் வரை இனி வரப்போகும் மக்களுக்கு இதுதான் இறை வழிகாட்டுதல். இதன் அடிப்படையிலேயே மறுமை நாளில் நம் பாவபுண்ணியங்கள் தீர்மானிக்கப்படும்