Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
திருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள் - Thiru Quran Malar

திருக்குர்ஆனை மெய்ப்படுத்தும் அறிவியல் உண்மைகள்

Share this Article
Scientific Facts in The Quran

உண்மையில் நவீன விஞ்ஞானம் கண்டுபிடிக்கும் இறைவனின் படைப்பினங்கள் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்போதுதான் திருக்குர்ஆன் உள்ளடக்கி வைத்திருக்கும் அறிவின் புதையல்களும் நமக்குப் புலப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை உதாரணமாக பாப்போம்:

       தேனின் உற்பத்தி:

தேனைப் பற்றி அது எவ்வாறு உற்பத்தியாகிறது என்று யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். அது பற்றிய போதிய ஞானம் இல்லாதவர்கள் கூறுவார்கள்: தேனீக்கள் பூக்களில் இருந்து ரசத்தை தங்கள் கூடுகளில் சேர்க்கின்றன. அதுதான் தேன் என்பார்கள். ஆனால் நவீன விஞ்ஞானம் பல புதிய உண்மைகளைக் கண்டுபிடித்துக் கூறுகிறது.தேனீக்கள் பூக்களில் இருந்தும் கனிகளிலிருந்தும் ரசத்தை உறிஞ்சிய பின் அது அவற்றின் வயிற்றில் ஜீரணிக்கப் பட்டு அதன் வயிற்றில் இருந்து வெளிவருவதே தேன் என்பதும்  பெண் தேனீக்கள்தான் இந்தக் கிரியையைச் செய்கின்றன என்பதும் இந்த நூற்றாண்டில் கண்டுபிடிக்கப் பட்ட உண்மைகள். கீழ்கண்ட வசனங்கள் இவற்றைத் தாங்கி நிற்பதைப் பாருங்கள்:

”மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!” என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (திருக்குர்ஆன் 16: 68, 69.)

1430 முன் எந்த விதமான விஞ்ஞான ஆராய்ச்சியோ நுண்னோக்கிகளோ (microscopes) தொலைநோக்கிகளோ (telescopes) இல்லாத ஒரு காலகட்டத்தில் எந்த மனிதராவது இப்படி ஆழமான விஞ்ஞான உண்மைகள் அடங்கிய வசனத்தைக் கூறியிருக்க முடியுமா? அதுவும் குறிப்பாக எழுத்தறிவோ படிப்பறிவோ இல்லாதிருந்த பாலைவனத்து மனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க சற்றும் வாய்ப்பே இல்லை. தெளிவாக இது இறைவனின் வசனமே என்பதையல்லவா பறைசாற்றுகிறது?

 இந்த வசனங்களின் அரபு மூலத்தில் ‘அவளுடைய வயிறு’ என்று பொருள்படும் ‘புதூனிஹா’ என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. இது பெண் தேனீக்கள்தான் தேன் சேகரிப்பை நடத்துகின்றன என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வசனங்களின் நடையும் இவ்வளவு துல்லியமான வார்த்தைப் பிரயோகமும் இப்பிராபஞ்சத்தின் படைப்பாளன் சில படைப்பின் இரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறான் என்பதைத்தானே காட்டுகிறது?

இதே போல இன்னும் பல படைப்பின் இரகசியங்கள்…..

அப்படிப்பட்ட மேலும் சில வசனங்களை சுருக்கமாக இங்கு காண்போம்:கீழே ஒருசில நவீன அறிவியல் கண்டு பிடிப்புகளும் அவற்றை உள்ளடக்கிய திருக்குர்ஆன் வசனங்களும் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் திருக்குர்ஆன் என்பது முழுக்கமுழுக்க இவ்வுலகைப் படைத்தவனின் வார்த்தைகளே என்பதைப் பறைசாற்றி நிற்கின்றன. 

       பெருவெடிப்புக் கொள்கை மற்றும் நீரே உயிரினங்களின் மூலம் என்ற உண்மை :

21:30. நிச்சயமாக வானங்களும் பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும் இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் சத்திய மறுப்பாளர்கள்  பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?

        மனித உடலில் வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் தோல்களில்தான் உள்ளன என்ற உண்மை:

 4:56     யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

       இரு கடல்களுக்கிடையே தடுப்பு : கடல்களுக்கு இடையே ஒன்றோடு ஒன்று கலவாத முறையில் தடுப்பு உள்ளது என்ற உண்மை:

25:53    அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்;  ஒன்று மிக்க இனிமையும் சுவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது – இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும் மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.27:61 இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும் அதனிடையே ஆறகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுககிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.

       கோள்களை தடுத்துக் கொண்டிருக்கும் புவி ஈர்ப்பு விசை

35:41   நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின் அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.

       விண்வெளிப் பயணம் சாத்தியமே என்ற உண்மை:

55:33    .’மனு ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால் (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.

       விண்வெளிப் பயணத்தின் போது இதயம் சுருங்குகின்றது என்ற உண்மை

6:125   அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் – யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் – இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.

       ஓரங்களில் குறையும் பூமி

13:41. பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? மேலும் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும் அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

21:44. எனினும் இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும் அவர்களுடைய ஆயட்காலம் வளர்ந்தோங்கும் வரை சகங்களை அனுபவிக்கச்செய்தோம். நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள் ?

       சூரியனும் சந்திரனும் கோள்களும் வட்ட வரைக்குள் கட்டுப்பாட்டோடு இயங்குகின்றன எனும் உண்மை:

35:13    அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான் சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.

36:40. சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

      முளைகளாக மலைகள் :

பூமிக்கடியில் பல்வேறு நில அடுக்குகள் ஒன்றோடு ஒன்று பிடிப்போடு இருக்கச் செய்ய பெரும் முளைகளைப் போல் மலைகள் ஆழமாக இறக்கப் பட்டுள்ளன என்ற உண்மை 

16:15    உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).

31:10. அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான வகை வகையான (மரம் செடி,கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம்.

       கருவளர்ச்சியின் நிலைகள்:

22:5    மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால் (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும்,  உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம்.

அன்றியும் (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்மூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.

23:13-14. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.

       விந்தின் பிறப்பிடம்

86 : 5-7 மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். முதுகந் தண்டிற்கும் விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.

இன்னும் பல வசனங்கள் இதுபோல இருந்தாலும் விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்வோம். ஆக, மேற்கூறப்பட்ட உண்மைகள் எதைப் பறைசாற்றி நிற்கின்றன? இறைவனே கூறுவது போல

32:2 அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது – இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.

என்ற உண்மையைத்தானே? எனவே இந்த இறைவேதம் கடந்த காலத்தில் நடந்ததாகக் கூறும் சம்பவங்களும் நூறு சதவீதம் உண்மை. இனி எதிர்காலத்தில் நடக்கப்போவதாகக் கூறும் சம்பவங்களும் நூறு சதவீதம் நடந்தே தீரும் என்பதும் உண்மை என்றுதானே நமது பகுத்தறிவு நமக்குச் சொல்கிறது!

Share this Article

Add a Comment

Your email address will not be published.