Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
தற்கொலை இறைவனின் முடிவுப் படியா? - Thiru Quran Malar

தற்கொலை இறைவனின் முடிவுப் படியா?

Share this Article

இறைவனின் நாட்டமின்றி எதுவும் நடக்காது என்று சொல்லும்போது ஒரு சிலர் தற்கொலையும் இறைவனின் முடிவுபடிதான் நடக்கிறதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இங்கு நாம் விதி பற்றிய ஓரு சிறு விளக்கத்தைத் தெரிந்து கொண்டால் நலம்.

உதாரணமாக ஒரு விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அது பூமியில் விதைக்கப்பட்ட உடன் அது மண்ணோடும் நீரோடும் காற்றோடும் சேரும்போது அதற்கு மீண்டும் உயிரூட்டப்பட்டு அதில் இருந்து முளை, இலை, காம்புகள் தண்டுகள் என உருவாகி ஒரு முழு தாவரமாக உருவாகி அதிலிருந்து மீண்டும் தானியங்களோ பழங்களோ உருவாகும் அற்புதத்தை நீங்கள் காண்கிறீர்கள். இது நிகழவேண்டுமானால் என்னென்ன எல்லாம் அங்கு நடக்கவேண்டும் என்பதை இன்றைய அறிவியல் அறிவின் அடிப்படையில் சிந்தித்துப்பாருங்கள்.

இந்த நிகழ்வோடு தொடர்புடைய அனைத்து மூலக் கூறுகளுக்கும் அவற்றின் உட்கூறுகளுக்கும் உரிய இயல்புகளும் நடத்தையும் அவை இயங்குவதற்கான கட்டளைகளும் (உதாரணமாக மென்பொருள் போன்று) எழுதப்பட்டு இருக்க வேண்டும். அந்த தகவல்களின் அடிப்படையில்தான் அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு , காய், பழம் போன்றவற்றின் இயல்புகள், நிறங்கள், வடிவங்கள், மணம், சுவை போன்ற பலவும் அமையும்.

இது ஒரு மிகச்சிறு உதாரணம் மட்டுமே. இவை மட்டுமல்ல,  இன்னும் நம்மால் அறிய இயலாத ஏராளமான தகவல்களையும் கட்டளைகளையும்   – முன்கூட்டியே எழுதியதும் இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்? சந்தேகமின்றி இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவனே என்பதை அறிவோம். நீங்கள் பௌதிக விதிகள், இயற்கை விதிகள், வேதியல் விதிகள் என்று அவற்றைப் பெயரிட்டு அழைத்தாலும் அவை அனைத்தும் எழுதியவன் இறைவனே. அவனையே திருக்குர்ஆன் அரபு மொழியில் அல்லாஹ் என்றழைக்கிறது.

(நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக! அவன் எத்தகையவன் எனில், அவன்தான் படைத்தான்; பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்; மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)

பிரபஞ்ச உதாரணம்:

ஒரு விதையின் கதையே இது என்றால் இந்த மாபெரும் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றி யோசித்துப்பாருங்கள். அதுவும் இல்லாமையில் இருந்து இதன் கரு உருவாகி இந்த மாபெரும் பிரபஞ்சம் உருவாக வேண்டுமென்றால் அதற்குள் எப்படிப்பட்ட தகவல்கள் , கட்டளைகள், மென்பொருள் போன்றவை எழுதப்பட்டு இருக்க வேண்டும்? நம் அற்பமான அனைத்துக் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவனாக வல்ல இறைவன் விளங்குகிறான்.

இதையே இஸ்லாமியர்கள் சுப்ஹானல்லாஹ் (அனைத்து மனித கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டு தூயவனாக அல்லாஹ் விளங்குகிறான்.)என்ற வார்த்தையால் வெளிப்படுத்துகின்றனர். இப்போது ஓரளவுக்கு நாம் விதி என்பதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள இயலும். இந்தப் பிரபஞ்சம் உருவாகி அதன் அழிவை அடையும் வரையும் அதற்கு அப்பாலும் இங்கு நடக்கவுள்ள அனைத்தும் படைத்தவனுக்கு அத்துப்படி. 

படைப்புகளின் விதியை அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு : அம்ரு இப்னு ஆஸ்(ரலி), முஸ்லிம், திர்மதி.

இப்போது இவ்வுலகின் நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். இந்த தற்காலிக வாழ்க்கையை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ள இறைவன் அதற்கேற்றவாறு மனிதனுக்கு செயல்பாடுகளில் விருப்ப உரிமையை வழங்கியுள்ளான். 

அந்த வகையில் ஒரு மனிதன் எதைத் தேர்ந்தெடுப்பான் அவனது  செயல்பாடுகள் என்ன விளைவை ஏறடுத்தும் என்பதெல்லாம் இறைவனின் அறிவில் உள்ளவையே. விதியை இவ்வாறு புரிந்து கொள்ளும்போது நமக்கு குழப்பம் ஏற்படுவதில்லை. விதி பற்றி இறைவன் நமக்கு இவ்வாறு கற்றுத்தருகிறான்:

பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் – அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 57:22, 23)

விதி பற்றிய அறிவு நமது சிற்றறிவின்  எல்லைக்கு அப்பாற்பட்டது. அதில் எந்த அளவுக்குத் தேவையோ அதை மட்டுமே வல்ல இறைவன் தனது வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் அறிவித்துள்ளான். 
இந்தப் பின்னணியில் இருந்து பார்க்கும் போது இவ்வுலகின் நிகழ்வுகள் எதுவானாலும் -தற்கொலையோ, கொலையோ, பிறப்போ இறப்போ  எதுவானாலும் -அவை விதிப் பதிவேடான ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்’இல் பதிவான ஒன்றே என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். 

Share this Article

Add a Comment

Your email address will not be published.