Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
ஞானி லுக்மான் தன் மகனுக்கு செய்த உபதேசம் - Thiru Quran Malar

ஞானி லுக்மான் தன் மகனுக்கு செய்த உபதேசம்

Share this Article

லுக்மான் என்ற ஒரு #இறையச்சம் கொண்ட ஞானி தன் மகனுக்கு செய்த உபதேசத்தை இறைவன் தன் திருமறையில் பெற்றோர்களும் பிள்ளைகளும் பாடம் பெறுவதற்காக வேண்டி எடுத்துரைக்கிறான்:

31:13இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).

(இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைக் குறிக்கும் அரபுச்சொல்  அல்லாஹ் என்பதாகும். ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே #இறைவன் என்பது இதன் பொருளாகும்.)

இவ்வுலகைப் படைத்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்று மக்களுக்கு போதிப்பது பெற்றோரின் முதலாவதும் முக்கியமானதும் ஆன கடமையாகும். படைப்பினங்களைக் காட்டி அவற்றைப் படைத்தவனை பகுத்தறிவு பூர்வமாக அறிமுகப்படுத்தி அவனோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்துவது ஓர் அறிவார்ந்த செயலாகும்.

அந்த #இறைவன் நமக்கு வழங்கிவரும் அருட்கொடைகளை நினைவூட்டி அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதி உள்ளவனும் நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவனும் ஆவான் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக வளர இந்த போதனை மிகவும் அவசியமானதாகும்.

மாறாக முன்னோர்கள் நமக்குக் கற்பித்துவிட்டுச் சென்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக இறைவன் அல்லாதவற்றைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று கற்பிப்பதும் அவற்றை வணங்க அவர்களை நிர்பந்திப்பதும் பற்பல குழப்பங்களுக்கு வித்திடும் செயலாகும்.சர்வ ஞானமும் சர்வவல்லமையும் கொண்ட இறைவனுக்கு ஒப்பாக அவன் அல்லாத பொருட்களை சித்தரிப்பதால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத இச்செயல் குழந்தைகளை நாளடைவில் நாத்திகத்திற்குக் கொண்டு செல்கிறது.

மேலும் அதனால் இறைவனைப் பற்றிய மரியாதை உணர்வு (seriousness) அகன்றுபோய் குழந்தைகள் உள்ளங்களில் இறையச்சமே இல்லாமல் போய் விடுகிறது. அதன் காரணமாக பாவங்கள் செய்தால் தட்டிக் கேட்கவோ தண்டிக்கவோ யாருமில்லை என்ற உணர்வு குழந்தைகளை ஆட்கொள்கிறது. தனிநபர் வாழ்விலும் சமூகத்திலும் பாவங்கள் மலிந்து பெருக இதுவே மூலகாரணம் ஆகும்.

ஆளுக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளை வெவ்வேறு விதமாக சித்தரித்து அவற்றை வணங்கும்போது  மனித குலத்திற்கு உள்ளும் பல பிரிவுகள் உண்டாகி ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் நிலையும் இன்ன பிற குழப்பங்களும் உருவாகின்றன. #இடைத்தரகர்கள் மூட நம்பிக்கைகளைப் புகுத்தி கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டவும் இச்செயல் காரணமாகிறது.

#இறையச்சம் என்ற பொறுப்புணர்வு ஊட்டப்படாத பிள்ளைகள் இரவுபகல் பாராமல் உழைத்து தங்களை வளர்த்த பெற்றோர்களை நாளை சற்றும் மதிக்காத அவல நிலை உண்டாகிறது. வயதுக்கு வந்ததும் அந்நியர்களோடு ஓடிப்போவதையும், இவர்களது வயதான காலத்தில் இவர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லங்களில் சேர்ப்பதையும், (வட இந்தியாவில்) காசியில் கொண்டுபோய் விட்டு விடுவதையும், கருணைக் கொலை என்ற பெயரில் கொன்று விடுவதையும் அன்றாட நிகழ்வுகளாகக் கண்டு வருகிறோம்.

இறைவனைப்பற்றியும் #மறுமையைப் பற்றியும் முறைப்படி இவர்களை கற்பிக்காமல் வளர்த்ததே இவற்றுக்கெல்லாம் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.எனவேதான் இறைவன் மேற்படி வசனத்தில் “நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்” என்று கூறுகிறான். பூமியில் அதர்மம் பரவுவதற்குக் காரணமான இப்பாவத்திற்கான தண்டனை பற்றி பிறிதொரு வசனத்தில் இவ்வாறு எச்சரிக்கிறான்:

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.
அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு மனிதனும் பேணவேண்டிய முக்கிய கடமை தன் பெற்றோருக்கு நன்றி செலுத்துவதாகும். அவர்களுக்குக் கீழ்படிதலும் அவர்களின் நலன் பேணுவதும் மக்களின் பொறுப்பாகும்.

31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

ஆனால் அதே நேரத்தில் அவர்கள் #இறைவன் அல்லாத பொருட்களை வணங்கும் செயலை அவர்களுக்குக் கட்டுப்படக் கூடாது என்பது இறைவனின் கட்டளையாகும்.இறுதியாக பெற்றோராயினும் சரி பிள்ளைகள் ஆயினும் சரி இந்தத் தற்காலிக உலக வாழ்வு எனும் பரீட்சையை முடித்துக்கொண்டு இறுதித்தீர்ப்புக்காக அவனிடமே திரும்ப வேண்டியுள்ளது என்பதை நினைவூட்டுகிறான் இறைவன்:

31:15ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.”

Share this Article

Add a Comment

Your email address will not be published.