Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
சொர்க்கம் செல்ல எளிய வழிகள் - Thiru Quran Malar

சொர்க்கம் செல்ல எளிய வழிகள்

Share this Article

நீண்ட ஒரு நடைபயணத்தை மேற்கொண்ட ஒரு பயணி வழியில் ஒரு மரத்தடியின் நிழலில் சற்று இளைப்பாறுவதற்க்காகத் தங்குகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மரத்தடியில் இளைப்பாறுதல் எவ்வளவுதான் இன்பகரமாக இருந்தாலும் அதைத் துறந்து விட்டு பயணத்தைத் தொடர வேண்டியவனே அப்பயணி. அந்த மரத்தடி நிழல் போன்றதே இந்தத் தற்காலிக உலகம்.   இல்லாமையில் இருந்தும் பிறகு இந்திரியத் துளியில் இருந்தும் உருவாகி இன்று இப்பூவலகில் மனிதர்களாக நடமாடிக்கொண்டிருக்கும் நாம் இதையும் கடந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளோம் என்பதை  நம்மில் பலரும் எளிதாக மறந்து விடுகிறோம்.

இவ்வுலகத்தில் நாம் எவ்வளவுதான் சொத்துக்களையும் சுகங்களையும் புகழையும் ஈட்டினாலும் உறவுகளை வளர்த்துக் கொண்டாலும் இமாலயப் பதவிகளை எட்டினாலும் அனைத்தையுமே ஒரு நொடியில் இழக்க வேண்டியவர்கள்தான் நாம் அனைவருமே. வெறுங்கையுடன் வந்த நாம் வெறுங்கையோடுதான் திரும்பிச் செல்ல உள்ளோம்.

ஆனால் நம்மோடு தொடர்ந்து வரக்கூடியவை நமது செயல்களின் பதிவு மட்டுமே. நம்மைப் படைத்த இறைவன் நமக்களித்து வரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறியவர்களாக அவன் நமக்கு ஏவிய கட்டளைகளுக்கேற்ப செய்யும் செயல்கள் மட்டுமே நமக்கு மறுமையில் பயன் தரும். அவை நமக்கு நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தைப் பரிசாகப் பெற்றுத்தரும்.

29:58  எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, ஸாலிஹான (நல்) அமல்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது.

47:15 பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள சுவர்க்கத்தின் உதாரணமாவது: அதில் மாறுபடாத தெளிந்த நீரைக் கொண்ட ஆறுகளும், தன் சுவை மாறாத பாலாறுகளும், அருந்துவோருக்கு இன்பமளிக்கும் மது ரச ஆறுகளும், தெளிவான தேன் ஆறுகளும் இருக்கின்றன; இன்னும், அதில் அவர்களுக்கு எல்லா விதமான கனிவகைகளும், தங்கள் இறைவனின் மன்னிப்பும் உண்டு. (இத்தகையோர்) நரகத்தில் எவன் என்றென்றுமே தங்கியிருந்து, கொதிக்கும் நீர் புகட்டப்பட்டு (அதனால்) குடல்களெல்லாம் துண்டு துண்டாகிவிடுமோ அவனுக்கு ஒப்பாவாரா?

ஆம், மறுமை வாழ்வில் நமது இருப்பிடம் சொர்கத்திலோ அல்லது நரகத்திலோதான் அமைய உள்ளது. அந்த இரண்டுக்கும் இடைப்பட்ட எதுவும் அங்கு இல்லை. உதாரணமாக நீங்கள் பணி ஒய்வு பெற்றபின் உங்கள்  கம்பெனி நிர்வாகம் ஒரு வீட்டு மனை வழங்க உள்ளது என்று அறிவித்தால் எவ்வளவு தீவிரமாக உழைப்பீர்கள்? ஒரு தற்காலிக சுகத்தை அடைவதற்கே அவ்வாறு என்றால் அழியாத இன்பங்களை அடைவதற்காக நாம் சிறிதேனும் உழைக்க வேண்டாமா? 

உங்கள் அழியாத நிரந்தரமான இருப்பிடம் திகட்டாத சொர்க்கச் சோலைகளின் நடுவே அமைய வேண்டுமானால் நீங்கள் அவ்வளவு கடினமாக ஒன்றும் உழைக்கவேண்டியதில்லை! நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இறைவன் தனது இறுதி வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் காற்றுத்தரும்  மிக எளிமையான ஒரு சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது மட்டுமே!.சொர்க்கம் செல்வதற்கான முதல்படி தூய இறைநம்பிக்கை.

அதாவது படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன், அவனைத்தவிர யாரையும் நான் இனி வணங்கமாட்டேன்  என்றும் அவன் அனுப்பிய தூதரை – அதாவது முஹம்மது நபி (ஸல்) – அவர்களை  எனது வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டேன் என்ற ஒரு உறுதிமொழியை மனதார ஏற்று வாயால் மொழியவேண்டும்.

அஷ்ஹது அன் லா இலாஹ இல்லால்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு (பொருள்: வணக்கத்துக்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமே இல்லை என்றும் முஹம்மது நபி அவர்கள் இறைவனின் அடிமையும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்) –

இதுதான் அந்த உறுதி மொழி. இந்த சத்தியப் பிரமாணத்தை மொழிய எந்த ஒரு வழிபாட்டுத்தலத்துக்கோ அல்லது ஒரு மதகுருவிடமோ செல்லவேண்டியதில்லை. நீங்களாகவே தனிமையில் படைத்த இறைவனை முன்னிறுத்திக் கொண்டு கூறினால் போதுமானது. அதை ஆத்மார்த்தமாக மொழிந்த பின் அதில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும்.

10:9 நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் ஈமான் கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.

இந்த இறைநம்பிக்கை கொண்டபின் இறைவன் கூறும் ஏவல் விலக்கல்களைப் பேணி அவனது பொருத்ததிற்கேற்ப நாம் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் வழிபாடாகவே கருதப்படும்.இறைநம்பிக்கை கொண்டபின் அதன் செயல்வடிவம்தான் அடுத்த கடமைகள். அவற்றில் முக்கியமானது ஐவேளைத் தொழுகையும் ஜகாத் எனப்படும் கடமையான தான தர்மமும். நாம் ஏற்றுக் கொண்ட கொள்கையில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தான் என்ற மறைமுமான சக்தி நம்மில் ஊசலாட்டங்களை உண்டாகி நம்மை திசைதிருப்பி விடக்கூடாது.

நம்மில் சதா இறைவனைப் பற்றிய அச்சமும் அன்பும் தொடர்ந்து இருக்கவேண்டும்.. அதற்காக இறைவன் வகுத்தளிக்கும் திட்டமே ஐவேளைத் தொழுகை என்பது.பொருளாசையும் நம்மை திசை திருப்பி விடக்கூடாது. செல்வம் என்பது உண்மையில் நமதல்ல. அதன் உரிமையாளன் இறைவன் மட்டுமே. அவன் நம்மைப் பரீட்சிப்பதற்காக தற்காலிகமாக நம் பொறுப்பில் விட்டு வைப்பதே செல்வம் என்பது.

அதை நாம் நமது தேவைகளுக்காக பயன்படுத்தும் அதேவேளையில் நம்மைச் சுற்றி வாழும் ஏழை எளியவர்க்கும் அதில்  பங்குண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. அந்தப் பங்குதான் ஜகாத் என்பது.நபிகள் நாயகம் தனது சத்தியப் பிரசாரத்தை மக்களிடம் செய்து கொண்டிருந்தபோது மக்கள் அவரிடம் ஆர்வத்தோடு வந்து சொர்க்கம் செல்லும் வழிகள் பற்றிக் கேட்டறிந்து சென்றனர்.

 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “செயல்படுத்தினால் என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கக் கூடிய ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஜகாத்தைச் செலுத்த வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்” என்று கூறினார்கள்.

அவர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “இவருக்குக் கட்டளையிடப் பட்டவற்றைக் கடைப்பிடித்தால் நிச்சயம் சொர்க்கம் சென்று விடுவார்” என்று கூறினார்கள்.


அறிவிப்பாளர் : அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி).

கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கத்தில் நுழைவதற்கான ஒரு நற்செயலை எனக்குக் காட்டித் தாருங்கள். அதைச் செயல் படுத்தி நான் சொர்க்கம் செல்ல வேண்டும்” என்று வேண்டினார். நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்” என்று கூறினார்கள்.

அதற்கு அந்த மனிதர், “என் உயிரைக் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! ஒருபோதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்ய மாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்க மாட்டேன்” என்று கூறினார்.

அவர் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்த்து மகிழ விரும்புபவர் இவரைப் பார்த்துக் கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

Share this Article

Add a Comment

Your email address will not be published.