Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
சுவனத்தின் நுழைவாயில் பெற்றோர்கள்! - Thiru Quran Malar

சுவனத்தின் நுழைவாயில் பெற்றோர்கள்!

Share this Article

# ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்று திரும்பிய தாயை கொரோனா காரணம் காட்டி ஏற்க மறுத்த மகன்கள்…

# சொத்தை எழுதித் தராததால் சொந்த வீட்டை விட்டு தந்தையைத் துரத்திய பிள்ளைகள்.. 

# முதியோர் இல்லம், கருணைக் கொலை, அடிமையாக நடத்துதல்

இவை போன்ற பற்பல கொடுமைகள் பெற்று வளர்த்த தாய் தந்தையருக்கு எதிராக நிகழ்ந்தவண்ணம் இருப்பதை அறிவோம். ஆனால் இக்கொடுமைகளை யாரும் தட்டிக்கேட்க ஆளில்லை என்ற படியால் நாளுக்கு நாள் இவை அதிகரித்து வருகின்றன. இந்நிலைமை மாற மக்களிடம் இறையச்சத்தை முறைப்படி ஊட்டுவது ஒன்றே வழி…அதாவது நம்மைப் படைத்த இறைவனிடம் நமது ஒவ்வொரு செயல்களுக்கும் மறுமையில் விசாரணை உண்டு, அதற்கேற்ப சொர்க்கமோ அல்லது நரகமோ உள்ளது என்ற விஷயத்தை பகுத்தறிவு பூர்வமாக விதைத்தால்தான் இந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வு உண்டாகும்.

 படைத்தவனின் எச்சரிக்கைகள்: 

நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி இதுதான் உண்மை.. நீங்கள் உங்கள் பெற்றோரோடு எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை இறைவன் இந்த வாழ்க்கைப் பரீட்சையின் பாகமாக அமைத்துள்ளான். பெற்றோரைப் பேணி வாழ்ந்தீர்களானால் நாளை மறுமையில் சொர்க்கம். இல்லையேல் நரகமே. அவை இரண்டில் ஒன்றில்தான் நீங்கள் நிரந்தரமாக வாழ உள்ளீர்கள்.. இது நிச்சயம்! உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் தனது இறுதி வேதம் திருக்குர்ஆன் மூலமாகவும் அவனது இறுதித் தூதர் மூலமாகவும் உங்கள் பெற்றோர் விஷயமாக கீழ்கண்டவாறு உங்களுக்கு அறிவுரையும் எச்சரிக்கையும் வழங்குகிறான்:

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்  அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம்  இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்குர்ஆன் 17:23)

தண்டனை தள்ளிவைக்கப்படுவதில்லை!

“பெற்றோரைக் கொடுமைபடுத்தியதற்காகத் தரப்படும் தண்டனை மரணத்திற்குமுன் இவ்வுலகிலேயே துரிதமாகத் தரப்பட்டுவிடும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) நூல்: பைஹகீ

பெற்றோருக்காக பிரார்த்தனை

= இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17:24)

= நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வலியுறுத்தியுள்ளோம்; அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே ‘நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக. என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.’ (அல்குர்ஆன் 31:14)

பெற்றோரின் திருப்தி

“பெற்றோரில் ஒருவர் கோபமடைந்தாலும் அவர்கள் திருப்தி அடையும்வரை இறைவன் திருப்தியடைய மாட்டான்” என்று நபி “கூறியதும் அந்தப் பெற்றோர் அநீதம் செய்தாலுமா?” என்று கேட்கப்பட்டதற்கு, “ஆம்! அவர்கள் அநீதம் செய்தாலும்தான்” என்று நபி பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), முப்ரத் அல் புகாரி

தாயின் காலடியில் சொர்க்கம்!

= ஜாஹிமா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “இறைத்தூதர் அவர்களே! நான் போரில் கலந்து கொள்ள நாடுகிறேன்” என்று கூறினார். “உனக்கு தாய் உண்டா?” என்று கேட்டதும் ஆம் என்றார். அவளை (கவனிப்பதை) தேர்ந்தெடுத்துக்கொள். “அவளின் இரு கால்களின் அடியில் தான் சொர்க்கம் உள்ளது” என்று நபி அவர்கள் கூறினார்கள். (முஆவியா இப்னு ஜாஹிமா(ரழி) அஹ்மத், நஸயீ, ஹாகிம், தப்ரானீ)

பெற்றோரைப் பேணாதோர் மீது சாபம்:

 = ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்! அவன் இழிவடையட்டும்!’ என்று கூறினார்கள். மக்கள் வினவினார்கள், ‘இறைவனின் தூதரே (இழிவடையட்டும் என்றீர்களே) யார்?’ ‘முதுமை பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்’ என்று பதலளித்தார்கள்.    அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) முஸ்லிம்.

அன்னையைப் போலொரு செல்வமுண்டோ?

= ஒரு மனிதர் இறைத்தூதரிடம் வந்து,இறைவனின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்?’ எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் ‘உம்முடைய தாய்’ என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைத்தூதர் அவர்கள் உம்முடைய தாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

மேற்கண்ட அறிவுரைகளை மனதில் நிறுத்தி பெற்றோருக்குப் பணிவிடை செய்து இறைவனின் பொருத்தத்தை பெறுவோமாக! நாளை நம் பெற்றோர், உற்றார் சூழ சொர்க்கம் செல்வோமாக!

Share this Article

Add a Comment

Your email address will not be published.