சுயமரியாதையை நிலைநாட்டிச் சென்ற மகான்!
இறுதித் தூதரான நபிகள் நாயகத்துக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர்.
இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள் படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம்.சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலை மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம்.
கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம் தொடர்வதை நாம் காண்கிறோம். இச்செயல் பகுத்தறிவுக்கு எதிரானது என்று தெரிந்தும் அவர்களில் யாரும் இதைக் கண்டிப்பதையும் நம்மால் காண முடிவதில்லை!ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ பார்த்திருக்கிறீர்களா?
இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.? அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது?
படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத்தானே காட்டுகிறது!.அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள்.
ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்” என்று எச்சரித்தார்.இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.
அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல தனக்காக பிறர் எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள். “யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார்.