Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா? - Thiru Quran Malar

மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?

Share this Article

= ஆடை அணிவதும் அரைகுறையாக அணிவதும் அல்லது அறவே அணியாததும் எங்கள் உரிமை! அதைக்கேட்க நீங்கள் யார்?

= மது அருந்துவதும் அருந்தாததும் எமது உரிமை! குடிக்காதே என்று எங்களைத் தடுக்க நீ யார்?

= திருமணம் செய்துகொள்வதும் செய்யாமலே சேர்ந்து வாழ்வதும் அல்லது விபச்சாரம் செய்வதும் தனிமனித உரிமை, அதில் தலையிட உங்களுக்கு ஏது உரிமை?

= எனக்கு விருப்பமானதைச் செய்யவும் சொல்லவும் எழுதவும் எனக்கு முழு உரிமை உள்ளது, அது தனிமனித சுதந்திரம்! அல்லது பத்திரிகைச் சுதந்திரம்!

அதை மறுக்க நீங்கள் யார்?…. என்றெல்லாம் கேள்விகளும் கோஷங்களும் எழுவதை நாம் காண்கிறோம். இந்த வாதங்களில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது? இதை நாம் ஆராய்ந்தே ஆக வேண்டும். காரணம் நாம் ஒரு சமூகமாக வாழ இது பற்றிய தெளிவு மிகமிக முக்கியம். இது தெளிவாகாத வரை தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் குழப்பமும் அமைதியின்மையும்தான் மிஞ்சும். யாரும் எதுவும் செய்யலாம் அல்லது யாரும் எதையும் பேசலாம் என்ற வரம்பற்ற தனிமனித சுதந்திரம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பது தெளிவு!

ஏனெனில் யாரும் யாரையும் எக்காரணமும் இன்றி கொலையும் செய்யலாம் ஏசவும் செய்யலாம், எதையும் அபகரிக்கலாம் அவற்றில் எந்தக் குற்றமும் இல்லை என்றாகி விடும். அப்படி ஒரு நடைமுறை இருக்குமானால் மனித வாழ்வே சாத்தியமற்றதாக ஆகிவிடும் என்பதை நாம் அறிவோம். தனி மனிதனுக்கு நிச்சயமாக ஒரு சில செயல்பாடுகளில் – அதாவது பிறரை பாதிக்காதவற்றில் – தனி சுதந்திரம் இருப்பது உண்மையே.

ஆனால் மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகள் மற்ற மனிதர்களையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன.எனவே  இந்த தனிமனித சுதந்திரத்தை எதுவரை அனுமதிக்கலாம்? அதை எவ்வாறு நிச்சயிப்பது? யார் நிச்சயிப்பது? …..இதை மனிதர்கள் அவர்களாகவே நிச்சயிக்க முடியுமா? அவரவர் மனோ இச்சைகளுக்கு ஏற்ப இதை நிச்சயித்தால் என்ன ஆகும்? இங்கும் குழப்பமே மிஞ்சும் என்பதை நாம் உணரலாம்.

அடுத்ததாக இதை தீர்மானிக்கும் பொறுப்பை ஒரு குடும்பத்திடமோ அல்லது இனம், மொழி, நிறம், தொழில், மற்றும் இன்னபிற அடிப்படையிலான சங்கங்களிடமோ குழுக்களிடமோ கட்சிகளிடமோ அல்லது ஒரு ஊர் நிர்வாகத்திடமோ அல்லது நாட்டை ஆள்பவர்களிடமோ விட்டால் என்ன ஆகும்? அதன் விளைவும் பயங்கரமானதாக இருக்கும். அன்றாடம் சண்டைகளும் பெரும் போர்களுமே நடைபெற்றுக் கொண்டிருக்கும். இறுதியாக இதற்கு என்னதான் தீர்வு? இங்குதான் நாம் முக்கியமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். தனி மனிதனுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது? அவன் உரிமை உரிமை என்று எதைக் கோர முடியும்? அதை அறிவதற்கு முன்னால் அவனது நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் இவ்வுலகில் அவனுடையது  என்று என்ன இருக்கிறது, மற்றும் அவனது அதிகாரத்தின் பலம் எவ்வளவு  என்பதை அறிந்த பின்னரே அவனது உரிமை அல்லது சுதந்திரம் பற்றி தீர்மானிக்க முடியும். மனிதன் தனது என்று எதை சொல்லிகொண்டாலும் உண்மையில் அவனது உடல், பொருள், ஆவி அல்லது உயிர் என அனைத்துமே அவனுடைய கட்டுப்பாட்டில் உள்ளவை அல்ல என்பதை அறிவோம். அவை யாவும் இவ்வுலகைப் படைத்தவனால் அவனுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டவையே.

அந்த இறைவன் அவன் நாடும்போது இவற்றைக் கொடுக்கவும் பறிக்கவும் செய்கிறான் என்பதுதான் உண்மை. எனவே மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் இவ்வுலகுக்கும் அதில் உள்ளவற்றுக்கும் உண்மையான சொந்தக்காரன் எவனோ அவன் மட்டுமே இதைத் தீர்மானிக்க முடியும். எனவே மனிதன் தானாக தன் சுதந்திரத்தை தீர்மானிக்க முடியாது என்பது தெளிவாகிறது. அடுத்ததாக, இறைவன் மட்டுமே அவனது படைப்பினங்களையும் அவர்களின் தேவைகளையும் பரிபூரணமாகவும் மிகமிக நுணுக்கமாகவும் அறிந்தவன்.

முக்காலத்தையும் முழுமையாக உணர்ந்தவன். யாருக்கு எவ்வளவு உரிமைகளைக் கொடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் முழு ஞானம் அவனுக்கு மட்டுமே உள்ளது,

= அடுத்ததாக, இந்தத் தற்காலிக உலகம் என்பது ஒருநாள் அழியும் என்பதும் இதில் ஒவ்வொரு மனிதனும் அவனுக்கு விதிக்கப்பட்ட ஒரு குறுகிய தவணையில் இங்கு வந்து போகிறான் என்பதும் அனைவரும் புரிந்துகொண்ட ஓர் உண்மை. அதாவது இவ்வுலகை ஒரு பரீட்சைக் களமாகப் படைத்துள்ளான் இறைவன். மறுமையில் இறுதித் தீர்ப்புநாள் அன்று அவரவர்க்கு வழங்கப்பட்ட உரிமைகளைப் பற்றியும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமைகளைப் பற்றியும் அவன் முழுமையாக விசாரிக்கவும் உள்ளான்.

அவற்றைப் பேணி நடப்போருக்கு  வெகுமதியாக சொர்க்க வாழ்வையும் பேணாமல் தான்தோன்றிகளாக நடப்போருக்கு தண்டனையாக நரகத்தையும் அவன் வழங்கவுள்ளான். எனவே அந்த இறைவன் தரும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தனிமனித உரிமைகளைத் தீர்மானிப்பதே அனைவருக்கும் சிறந்தது என்பதை நாம் அறியலாம். அந்த இறைவனின் கட்டளையும் அதுவே. இதோ தனது இறுதி வேதமாம் திருக்குஆனில் அவன் கூறுவதைப் பாருங்கள்:

4:1. மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து,  அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;.  ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;.  அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்;. மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.

அவ்வாறு மனித உரிமைகளை நியாயமான முறையில் பக்குவமாகப் பங்கிடக்கூடியவன் படைத்த இறைவன் மட்டுமே என்பதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகில் அமைதியைக் காண முடியும், மேலும் மறுமையிலும் நாம் அமைதியான வாழ்வை அதாவது சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். மாறாக தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் நமது மனோ இச்சைகளைப் பின்பற்றி இறைவன் விதித்த வரம்புகளுக்கு மாறாக நடந்தால் இவ்வுலகின் உரிமையாளன் நிச்சயமாக தண்டிப்பான். 

Share this Article

Add a Comment

Your email address will not be published.