சிந்தனைப் புரட்சியைத் தூண்டிய திருக்குர்ஆன்
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த பாலைவன மக்களிடம் எப்படிப்பட்ட சிந்தனை இருந்திருக்கும் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் கவலையெல்லாம் உணவைப் பற்றியும் அதை சம்பாதிப்பதைப் பற்றியும் மட்டுமே இருந்திருக்கும்! ஆனால் அங்குதான் இன்றைய அறிவியலுக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்த விஞ்ஞானிகள் உருவானார்கள். ஐரோப்பா அன்று இருண்ட காலத்தில் வாழ்ந்தபோது அரபுமண்ணில் இருந்துதான் அறிவியலின் அடிப்படைகள் உருவாகி வளர்ந்தன. பிற்காலங்களில் சிலுவை யுத்தங்களுக்குப் பிறகு அவை ஐரோப்பியர்களால் கைப்பற்றப்பட்டு அவர்கள்தான் அறிவியலின் முன்னோடிகள் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டது என்ற உண்மை இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பது வேறு விடயம். அல்ஜிப்ரா, ஆல்கஹால், அல்கெமியா போன்ற அறிவியல் பதங்களே அரபு முஸ்லிம்களிடம் இருந்து அறிவியல் அடிப்படைகள் உருவாகின என்பதற்கு சாட்சி பகர்ந்து கொண்டு இருக்கின்றன.
இந்த சிந்தனைப் புரட்சி துளிர்விடக் காரணம் அந்தப் பாலைவன மணலில் திருக்குர்ஆன் தூவிய விதைகளே! ஆம், அந்தப் பாலைவன வாசிகளைத் திருக்குர்ஆன் வானத்தையும், பூமியையும் மலைகளையும் விலங்கினங்களையும் பற்றி சிந்திக்கத் தூண்டியது. நம்ப முடியவில்லையா? இதோ நீங்களே படித்துப் பாருங்கள்:
88:17 .(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:18 .மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:19 .இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
3:190 .நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
10:5. அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான் ; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.
16:10. அவனே வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்கிறான்; அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது; அதிலிருந்து (உங்கள் கால்நடைகளை) மேய்ப்பதற்கான மரங்கள் (மற்றும் புற்பூண்டுகளும் உண்டாகி) அதில் இருக்கின்றன.
16:11 .அதனைக் கொண்டே, (விவசாயப்) பயிர்களையும், ஒலிவன்(ஜைத்தூன்) மரத்தையும், பேரீத்த மரங்களையும், திராட்சைக் கொடிகளையும், இன்னும் எல்லாவகைக் கனிவர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான் – நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சி இருக்கிறது.
16:12 .இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன – நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.
16:13 .இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது.
16:14. நீங்கள் கடலிலிருந்து நய(மும், சவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான்.
16:15 .உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்). இவைபோன்ற இயற்கையை ஆராயத் தூண்டும் வசனங்களே பாலைவனத்துப் பாமரனையும் அறிவியலின் முன்னோடிகளாக ஆக்கின. அவர்கள் வகுத்த அடிப்படைகளே பிற்காலத்தில் உலகெங்கும் பரந்து பயன்பாடுகளை ஈந்தன. எல்லாப்புகழும் இறைவனுக்கே!