Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
சலீம் – சசி உரையாடல் - Thiru Quran Malar

சலீம் – சசி உரையாடல்

Share this Article

“உலகம் பிறந்தது எனக்காகஓடும் நதிகளும் எனக்காகமலர்கள் மலர்வது எனக்காகஅன்னை மடியை விரித்தாள் எனக்காக……..”

தன்னை மறந்து பாடிக்கொண்டிருந்தான் சசிதரன்.“ஆமாம் எல்லாம் உனக்காகத்தான்.. ஒப்புக்கொள்கிறேன், ஆனால் நீ இருப்பது எதற்காக சசி?” என்று கேட்டவாறே ஹாஸ்டல் அறைக்குள் நுழைந்தான் சலீம்.“ஏதோ பழைய பாடல்…… ரொம்பப்பிடிக்கும்..  பாடிக்கொண்டிருந்தேன்…..”

“ஆனால் அர்த்தமுள்ள பாடல். என் கேள்வியும் அர்த்தமுள்ளதுதான், எல்லாமே உனக்காகத்தான் என்றால் நீ எதற்காக? ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? அதைத்தான் நான் கேட்கிறேன்….”“……………””ஆம், சசி இன்று நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பூமியின் அமைப்பையும் அதனைச் சுற்றி உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்களின் கட்டுக்கோப்பான அமைப்பையும் பார்.

உதாரணமாக, இப்பூமி தனது அச்சில் சுற்றிக் கொண்டு சூரியனில் இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் ஒரு வட்ட வடிவப் பாதையில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவாய்.  இந்த தூரம் சற்று குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா?”“ஆமாம் சலீம், நாம் எல்லாம் தாங்க முடியாத வெப்பத்தினால் சுட்டுப் பொசுக்கப்பட்டு விடுவோம்.”“ தூரம் சற்று கூடினால் என்ன ஆகும்?”

“தெரிந்த விஷயம் தானே ….. நாம் தாங்க முடியாத குளிரில் உறைந்துபோய் மடிந்துவிடுவோம்!”“ அதேபோல் பூமியின் சுழற்சி வேகம் திடீரென்று கூடினால்….?”“நிலநடுக்கமும் சுனாமியும்தான்!… அப்படி ஒன்று நடந்தால் பூமியின் மேல் ஒன்றும் இருக்காது, எல்லாம் தரைமட்டமாகி விடும். ”

“ அதேபோல் இப்பூமியைப் பொதிந்திருக்கும் காற்றுமண்டலத்தின் அழுத்தத்தை எடுத்துக் கொள்…… இதன் அளவு சற்று கூடவோ குறையவோ செய்தால் என்ன ஆகும்?”“தாங்க முடியாத புயல்காற்றினாலும் அலைக்கழிக்கப்படலாம், மனிதன் சுவாசிக்க காற்று இல்லாமையாலும் அலைக்கழிக்கப்படலாம். நீ சொல்ல வருவது புரிகிறது சலீம், ஆக மொத்தம் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி வைக்காவிட்டால் மனித வாழ்வே இங்கு சாத்தியமில்லைதான்!”

“இவை மட்டுமல்ல சசி , இவற்றைப்போல் எத்தனையோ அளவைகளை சமநிலையில் நிலைநிறுத்தி வைத்திருப்பதைப் பார்த்தால் மனித வாழ்வு என்பது சர்க்கஸில் கயிற்றில் நடப்பது போல் உள்ளது. இந்த சமநிலைகளில் எங்காவது ஒரு பிசகு நேர்ந்தாலும் மனித வாழ்க்கை அதோகதிதான்!”

“உண்மைதான்”“மேலும் உனக்குள்ளே நடக்கும் எண்ணற்ற அதிசயங்களைப் பார். உதாரணமாக நீ உண்ணும் உணவு எவ்வளவு எளிதாக சக்தியாகவும், இரத்தமாகவும், வியர்வையாகவும் மாறுகிறது? உன்னை ஆரோக்கியத்தோடு வாழவைக்க எவ்வளவு விஷயங்கள் சமநிலையில் நிறுத்தப் படுகிறது தெரியுமா உனக்கு?”

“நான் அதைப் பற்றி எல்லாம் யோசித்ததில்லை சலீம்”“ஆச்சரியம்தான், நீ பிறந்தது முதல் உனக்குள்ளே அன்றாடம் நடக்கக்கூடிய அற்புதங்களைப் பற்றி யோசிக்காமல் இவ்வளவு வருடங்களைக் கடத்தி வந்திருக்கிறாய்.”“நான் மட்டுமல்ல சலீம், பலரும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். ஏதாவது நோய் வரும்போதுதான் நம் உடலின் அருமையை உணர்கிறோம்.”

“ஆமாம் சசி, டாக்டரிடம் போனால் அவர் நாடி, இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் என பலதையும் பரீட்சிக்கிறார். சர்க்கரை, கொலஸ்ட்ரால் போன்றவற்றை பரிசோதிக்க வைக்கிறார், ஸ்கேனிங், எண்டோஸ்கோபி மூலம் உடலுக்குள்ளே உள்ளவற்றை ஆராய்கிறார். எல்லாம் நார்மல், நார்மல் என்று வரும். ஏதாவது ஒன்று ஒரு குறிப்பிட்ட ரேஞ்சில் இருந்து கூடினாலோ அல்லது குறைந்துவிட்டாலோ அதை வைத்து இன்ன நோய் என்று கண்டுப்பிடிக்கிறார்.

இங்கு யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் டாக்டர் பரிசோதனைக்கு உட்படுத்திய விஷயங்களும் உட்படுத்தாத எண்ணற்ற விஷயங்களும் சமநிலையில் நிறுத்தப் படுவதால்தான் நீ இன்று உயிரோடு உள்ளாய், என்பதுதான்!”“உண்மைதான் சலீம், கண்டிப்பாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.

நீ சொல்ல வருவது புரிகிறது. இந்த உலகம் இயங்குவதும் எனக்காகத்தான் என் உடல் இயங்குவதும் எனக்காகத்தான், அப்படித்தானே?”“ அத்துடன் முடியவில்லை. அதற்குமேல்தான் நீ சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளாய்.”

“ஒரு விஷயம் எனக்குப் புரிய வருகிறது. அதாவது நம்மை மீறிய ஒரு அபாரமான சக்தி ஒன்று இவற்றையெல்லாம் சமநிலையில் இயக்கி வருகிறது. அவனைத்தான்  கடவுள் என்கிறோம், இல்லையா சலீம்?”

“நிச்சயமாக, மிகச் சரியாகச் சொன்னாய் சசி. அவன் உன் மீது எவ்வளவு அக்கறை கொண்டவன் எனபதை யோசித்துப் பார்த்திருக்கிறாயா?”“என் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் என் பெற்றோர்கள் என்றுதான் நான் அறிவேன். அதிலும் குறிப்பாக என் தாய் என் மீது உயிரையே வைத்துள்ளாள்”“சரி சசி, உன் தாய் உன்னை என்று முதல் கவனிக்கத் தொடங்கினார்? சொல் ““ நான் பிறந்த நாள் முதல்.”

“அதற்கு முன் யார் உன்னை கவனித்துக் கொண்டிருந்தது? நீ உன் தாய் வயிற்றினுள்  பத்து மாதங்களாக குடியிருந்தபோது எந்தக் கவலைகளும் அறியாமலே இருந்தாய். உனக்கு அவ்வளவு பக்குவமாக மெத்தை அமைத்து, உணவூட்டி, சீராட்டி கண்ணும் கருத்துமாக வளர்த்தது யார்?”“ஒப்புக்கொள்கிறேன் அது கடவுள்தான்”

“நீ பிறந்து வந்தபோது அழுவதைத் தவிர உனக்கு வேறு எதையுமே சுயமாகச் செய்யத் தெரியாது. அப்படிப்பட்ட பலவீனமான நிலையில் இருந்த உன்னை வரவேற்று உபசரித்து கவனித்துக் கொள்வதற்கு தாயையும் தந்தையையும் ஏற்பாடு செய்தவன் யார்? தாய்ப்பாலைச் சுரக்க வைத்தவன் யார்?”“ உண்மைதான் சலீம், கடவுள் தான்.”

“ உன்  தாயின் உள்ளத்தில் பாசம் என்பது மட்டும் கடவுள் விதைத்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் தெரியுமா?”“சரிதான் சலீம், நான் பத்து மாதம் தாய் வயிற்றினுள் இருந்து அவளுக்குக் கொடுத்த சித்திரவதைகளில் இருந்து விடுதலை என்று சொல்லி என்னைக் குப்பைத்தொட்டியில் எறிந்துவிட்டு போயிருப்பாள் என் தாய்!”

“உனது தாயின் உள்ளத்தில் தாய்ப்பாசம் எனபதை ஏன் கடவுள் விதைத்தான் தெரியுமா? அவன் உன்னை நேசிக்கிறான் என்பதால்தான்.”“கடவுளைப் பற்றி சொல்லும்போது அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  என்று  நீ அடிக்கடி சொல்வாயே. அது இப்போதுதான் புரிகிறது சலீம்.”

“நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள், ”இறைவன் தனது கருணையை நூறு பாகங்களாகப் பிரித்தான். அதில் ஒரு பாகத்தை மட்டுமே இப்பூமியின் உள்ளோர் மீது விதைத்தான். இங்கு நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதும் அதனால்தான். ஒரு தாய்ப் பறவை தன் குஞ்சின்மீது காட்டும் பாசமும் அதன் காரணமாகத்தான், எந்த அளவுக்கேன்றால், தன் குஞ்சின்மீது பட்டுவிடக்கூடாது என்பதற்காக தன் காலைத் தூக்கிக் கொள்கிறது தாய்ப் பறவை.”என்று.”

“அப்படியா சலீம்?”“ஆமாம் சசி,  யோசித்துப்பார்…  மீதம் உள்ள 99 பாகங்களை அவன் வசமே வைத்துள்ளான் என்தாறுனே அர்த்தம்? அப்படியென்றால் அவன் நம் மீது காட்டும் அன்பும் பாசமும் கற்பனையால் கூட அளந்து பார்க்க முடியுமா? அப்படிப்பட்டவன் தான் நம் இறைவன்!” “கேட்ககேட்க மிக ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது சலீம்.”

‘ஆம் சசி, இதை உணர்ந்து வாழ்வதில்தான் வாழ்கையின் வெற்றியே உள்ளது”“சரி சலீம் .அந்தக் கருணையுள்ள இறைவன் எதற்காக நம்மைப் படைத்துள்ளான்?”“மீணடும் நாம் பேச்சைத் தொடர்ந்தால் நேரமாகிவிடும். நாளை மீணடும் தொடர்வோம் இன்ஷாஅல்லாஹ் – அதாவது இறைவன் நாடினால்……, அது வரை ஒன்று செய் ரவி, உன் கேள்விக்கான பதிலைப் பற்றி நீயும் யோசி. அதற்குத்தானே இறைவன் பகுத்தறிவைத் தந்திருக்கிறான்”
(இன்ஷாஅல்லாஹ் தொடரும்)

Share this Article

Add a Comment

Your email address will not be published.