கொள்ளை நோயின்போது இறை வழிகாட்டுதல்
இந்த வாழ்க்கைப் பரீட்சையின் ஒரு அங்கமாக நோயையும் படைத்துள்ள இறைவன் அந்த சோதனையின்போது எவ்வாறு இறை விசுவாசிகள் நடந்து கொள்ளவேண்டும் என்பதைப் பற்றிய வழிகாட்டுதல்களை தனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவுறுத்தி உள்ளான்.
நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்:
= “ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள் ‘ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பு: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) – புகாரி)
= “வியாதி பீடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்”
(அறிவிப்பு: அபூ ஹுரைரா (ரலி) – புகாரி)
இரவில் பாத்திரங்களை மூடிவைத்தல்
= இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடி வையுங்கள். ஏனெனில் ஆண்டின் ஓர் இரவில் கொள்ளை நோய் இறங்குகிறது. மூடி இல்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடி வைக்காத தண்ணீர் பையையும் கடந்துசெல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை. (அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் நூல்: முஸ்லிம்
இரவு தொழுகை
= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . “இரவுத் தொழுகையை தொழுது வாருங்கள், அவ்வாறு தொழுவது உங்களுக்கு முன்வாழ்ந்த நல்லடியார்களின் பண்பாகும். மேலும் இரவில் நின்று வணங்குவது அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத் தரக்கூடியதாகவும், பாவங்களை விட்டு விலக்கக் கூடியதாகவும், தவறுகளுக்கு பரிகாரமாகவும் மற்றும் உடலிலிருந்து நோயை அகற்றக் கூடியதாகவும் இருக்கின்றது. (அறிவிப்பு: பிலால் (ரலி) – நூல் திர்மீதி)
தொற்றுநோய் வரும் முன் பிரார்த்தனை
= நபி ஸல் அவர்கள் கூறினார்கள் “யார் மூன்று முறை
பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷையுன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாயி வஹுவஸ் ஸமீஉல் அலீம் என்று கூறுகிறாரோ அவர் காலைபொழுதை அடையும் வரை தீடீரென்று பிடிக்கக்கூடிய எந்த தொற்றும் அவரை தீண்டாது . இவ்வாறே காலையில் கூறுவாரேனில் மாலைவரை அவரை தீடீரென்று பிடிக்கக்கூடிய எந்த தொற்றும் நெருங்காது. (அபூ தாவூது)
(பொருள்: யாருடைய திருநாமம் கூறி செய்யப்படும் எந்தச் செயலுக்கும் வானம் பூமியிலுள்ள எதுவும் இடையூறு செய்யாதோ அந்த அல்லாஹ்வுடைய திருநாமத்தின் பொருட்டால் (காவல் தேடுகின்றேன்) )
நபிகளார் கற்றுத் தந்த இன்னொரு பிரார்த்தனை
= அஊதுபிகல்லாஹும்ம மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுதாமி வமின் ஸய்யியில் அஸ்காம்
(பொருள்: வெங்குஷ்டம்,பைத்தியம், தொழு நோய், மற்றும் பிற கொடிய நோய்கள் அனைத்தை விட்டும்-யா அல்லாஹ் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். (நூல்: ஸஹீஹுல் ஜாமிஃ)
தாங்க முடியாத கடுமையான சோதனையிலிருந்து பாதுகாப்பு கோருவது
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
“நீங்கள் அல்லாஹ்விடத்தில் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தேடிவாருங்கள்” (அறிவிப்பு: அபூஹுரைரா ரலி) ஸஹிஹ் புகாரி)