Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பயனற்ற கல்வியை நிறுத்துவோம்! - Thiru Quran Malar

பயனற்ற கல்வியை நிறுத்துவோம்!

Share this Article

சமீபத்திய ஒரு நிகழ்வு……70 வயதான பெரியவர் ஒருவர் சென்னைக் கூடுவாஞ்சேரி மெயின் ரோடில் உள்ள காட்டுச் செடிகள் ஓரத்தில் அவருடைய மகன்களால் காரில் கொண்டு வரப்பட்டு அனாதையாக தள்ளப்பட்டார். ஒட்டிய வயிறும், மெலிந்த தேகமும் கொண்ட அவரைக்கண்ட அந்த வழியாகச் சென்ற இரக்கக் குணம் கொண்ட சிலர் தின்பதற்காக தின்பண்டங்களை அவர் அருகில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். 

அதனைக்கூட அவர் எடுக்கக்கூடிய திராணியில்லை. அதனை தெருநாய்கள் சாப்பிட்டன.., அந்த பரிதாப நிலையினைப் பார்த்த சிலர் அருகில் இருந்த காவல் துறையினரை அணுகியும் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை…. ஆகவே மாவட்டக் கலெக்டருக்கு செல்ஃபோனில் தகவல் சென்றது…., அவர் தாசில்தாரை அனுப்பி மருத்துவ மனையில் சேர்த்தார்…. ஆனால் அந்த முதியவர் எவ்வளவோ அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவரை அனாதையாக விட்டுச் சென்ற மகன்கள் பெயர்களைச் சொல்லத் தயாராகவில்லை…….

தான் துன்பப்பட்டாலும் தன்னை நடுத் தெருவில் அனாதையாக விட்ட பிள்ளைகளைக் காட்டிக் கொடுக்க விரும்பவில்லை என்று அறியும் போது அவரது பிள்ளைப்பாசத்தின் அழுத்தம் நமக்கு தெரிகிறதல்லவா? அறிவு வளர்ச்சியின் உச்சக்கட்டம் என்று கருதப்படும் இக்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் அன்றாடம் அதிகரித்து வருவதை நாம் கண்டுவருகிறோம். என்ன காரணம்? சிந்திக்கின்ற எவரும் தெளிவாக பதில் கூறமுடியும்..

அறிவு முறைப்படி புகட்டப் படுவதில்லை என்று!அதிகரித்துவரும் முதியோர் இல்லங்கள் மட்டுமல்ல, கள்ளக்காதல்  கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், கட்டப்பஞ்சாயத்து, வன்முறைகள்  என அனைத்து கொடுமைகளும் அதிகரித்து வருவது நமது கல்வி முறைகள் மாற்றி அமைக்கப் படவேண்டியதன் அவசியத்தையே உணர்த்துகின்றன.

கல்வியின் நோக்கம் ?

= குழந்தைகளுக்குக் கல்வியைக் கற்பிப்பதன் தலையாய நோக்கம் மனிதனை சீர்படுத்தி அவனை பண்புள்ளவனாக ஆக்கவேண்டும் என்பதாக இருக்கவேண்டும். மாறாக  உணவை சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவது இரண்டாவது இடத்தில்தான் இருக்க வேண்டும். உண்மையில் அதற்குக் கல்வி கற்பதன் அவசியமும் இல்லை. காரணம் மனிதனை விட அறிவு குறைந்த விலங்கினங்களும் பறவைகளும் மீன்களும் எல்லாம் தங்களின் உணவை எளிதாகவே அடைவதைப் பார்க்கிறோம். 

மனிதன் தன் பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தவும் அதைக்கொண்டு இவ்வுலகை ஆராயவும் அதன் விளைவாக இவ்வுலக வளங்களை மனிதகுலத்துக்கு பயன்படும் வண்ணம் ஆக்கபூர்வமான செயல்களுக்கு தூண்டுகோலாக பாடத் திட்டங்கள் அமைய வேண்டும். அத்துடன்படைத்த இறைவனைப் பற்றியும் இந்தத் தற்காலிக உலகில் மனித வாழ்வின் நோக்கம் பற்றியும் அறிவூட்டும் கட்டாயப் பாடங்கள் மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வண்ணம் போதிக்கப் படவேண்டும்.

அப்போதுதான் மனிதன் தன் செயல்களுக்கு இறைவனிடம் விசாரணை உண்டு என்பதையும் மரணத்திற்குப் பிறகு தனக்கு சொர்க்கம் அல்லது நரகம் உண்டு என்பதையும்  அறிந்து பொறுப்புணர்வோடு வாழ்வான். அதேவேளையில் நீதிபோதனைகள் என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை போதித்தால் குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கை வளராது. நாத்திகமும் போலி பக்தியும்தான் வளரும். நன்னடத்தை வளராது, சுயநலம்தான் வளரும், நாட்டில் பாவங்கள் மலியும்!

நன்மை- தீமை அறிதல்

= உண்மையான இறையச்சத்தைப் வளர்ப்பதற்கு அடுத்தபடியாக குழந்தைகளுக்கு போதிக்கப் படவேண்டியது நன்மை எது தீமை எது என்பது பற்றிய கல்வியாகும்.. அதாவது இறைவனின் பார்வையில் எது பாவம் எது புண்ணியம் என்பதை அறிந்தால்தான் மனிதனால் இறைவனின் ஏவல் விலக்கல்களை அறிந்து கொண்டு செயல்படமுடியும்.  இப்படிப்பட்ட நீதிபோதனைகளை கட்டாயப் பாடமாக்கி அத்துடன் மற்ற பாடங்களை போதிக்கும்போதுதான் மனிதன் தான் பெற்ற கல்வியை ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துவான்.

இல்லையேல் அது அழிவுக்குத்தான் பயன்படும். அதைத்தான் இன்று வல்லரசுநாடுகளின் செயல்பாட்டில் காண்கிறோம். அவை இன்று அணுஆயுத தளவாடங்களைக் காட்டி உலகநாடுகளின் வளங்களைக் கொள்ளையடித்து வருவதும் உலகில் பயங்கரவாதத்தை கருவியாக பயன்படுத்தி மனித உயிர்களை மிக மலிவாகக் கருதி மாய்த்து வருவதும் தீய கல்வியின் பயன்பாடுகளே!

பொறுப்புணர்வை வளர்! 

= குழந்தைகள் தங்கள் வாழ்வின் மிகமுக்கியமான பகுதியை பள்ளிக்கூடங்களில்தான் கழிக்கின்றன. பள்ளிப் பருவம் முடிந்து வெளியேறும்போது வாழ்வின் அனைத்து சவால்களையும் துணிச்சலோடு சந்திக்கக்கூடிய மனோபக்குவத்தையும் மனோதைரியத்தையும் அவர்கள் பெறவேண்டும். அதற்கும் அடிப்படை இறையச்சம்தான். இறையச்சம் மனிதனுக்குள் வந்துவிட்டால் அவனுக்கு வேறு எந்த அச்சமும் வருவதில்லை என்பதே உண்மை!

= தங்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு  தன் வாழ்வாதாரங்களை தேடும் திறமை மட்டும் இருந்தால் போதாது. அவன் தன் குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் சமூகத்தை பாதிக்கக் தீமைகள் குறித்தும் அறிவும் விழிப்புணர்வும் அவனுக்கு மிகமிக அவசியம். மேலும் அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் அறிவும் தேவை அப்போதுதான் சமூகத்தில் நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்புணர்வுள்ள குடிமக்கள் உருவாகுவார்கள்.

பயனற்றவை தவிர்!

= இப்படிப்பட்ட சீர்திருத்தப் பாடங்களுக்கு எங்கே நேரம்? என்ற கேள்வி எழலாம். ஆனால் ஆக்கபூர்வமான பயனுள்ள கல்வி வேண்டுமானால் இதற்கு முக்கியத்துவம் கொடுத்தேயாக வேண்டும். மேலும் குழந்தைகளுக்கும் சிறார்களுக்கும் எந்த வகையிலும் பயனளிக்காத பல பாடங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய தருணம் இது. சரித்திரம் என்ற பெயரிலும் இலக்கியம் அல்லது  கவிதை என்ற பெயரிலும் அந்தக் காலத்து அரசர்களின் புகழ்பாடியும் இந்தக்காலத்து மந்திரிகளின் புகழ்பாடியும் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் முயற்சியை அரசியல்வாதிகள் கைவிட வேண்டும்.

தேவையற்ற சரித்திரங்களையும் இலக்கியங்களையும் கவிதைகளையும் போதிப்பதர்க்கும் பறைசாற்றுவதர்க்கும் தொலைக்காட்சிகளும் பொதுமேடைகளும் அதற்கென தவம் கிடக்கும் ரசிகர் கூட்டங்களும் பள்ளிக்கு வெளியே காத்திருக்கின்றன. தயவுசெய்து இனிவரும் இளைய தலைமுறையினரை விட்டுவிடுங்கள். அவர்களுக்கு இனி அதற்கு நேரமில்லை!

ஆண் – பெண் வேறுபாடு   

= ஒரு ஆரோக்கியமான சமூகம் அமையவேண்டுமானால் அதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவரவர் உடல் இயற்கைக்கும் சக்திக்கும் ஏற்றவாறு கடமைகளும் உரிமைகளும் வேறு வேறு என்பதை நாம் இனியாவது உணர்ந்து திருந்த வேண்டும். இறைவன் எவற்றை ஆண்களுக்கு கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை ஆண்களுக்கும் எவற்றை பெண்களுக்குக் கடமையாக்கி இருக்கிறானோ அதற்கேற்ற படிப்பை பெண்களுக்கும் புகட்ட வேண்டும்.

இன்று பள்ளிகளில் நாம் கண்டுவரும் அவலங்கள் – அதாவது கர்ப்பிணிக் குழந்தைகளும் கள்ளக்காதல்களும் கொலைக் கலாசாரமும் – ஒழிய வேண்டுமானால் இனிமேலாவது இறைவன் நமக்கு விதித்த வரம்புகளை மீறக்கூடாது. பத்து வயதுக்கு மேறப்பட்ட ஆண்களும் பெண்களும் தனித்தனி பள்ளிகளில்தான் பயிற்றுவிக்கப் படவேண்டும். சிரமங்கள் பல இருந்தாலும் இதை மேற்கொண்டால் சமூகமும் நாடும் சமூகச் சீர்கேடுகளில் இருந்தும் இன்னபிற நாசங்களிலிருந்தும் இறைவனின் தண்டனைகளில் இருந்தும் காப்பாற்றப் படும்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.