கற்பனைக் கடவுளர்களை வணங்குவோரின் நிலை!
இவ்வுலகைப் படைத்து பரிபாலித்துவரும் இறைவன் எவனோ அவன் மட்டுமே நமது வணக்கத்துக்கு உரியவன்.
அவனைத் தவிர அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவையே. படைத்தவனை நேரடியாக எளிமையாக, ஆரவாரங்கள் இன்றி, வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி வணங்குவதற்குத்தான் இறைவனின் தூதர்களும் இறைவனால் அனுப்பபட்ட வேதங்களும் கற்பித்தன, ஆனால் இறைத்தூதர்களின் மறைவுக்குப் பின்னால் நுழைந்த சில இடைததரகர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காகவும் மக்களை கடவுளின் பெயரால் சுரண்டுவதற்காகவும் கடவுளுக்கு உருவங்களையும் வீண் சடங்கு சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கைகளையும் புகுத்தினார்கள்.
சிந்திக்காத மக்கள் தங்கள் அறியாமையாலும் வீண் அச்சத்தினாலும் இவர்களுக்கு இரையாகின்றனர். இவ்வாறு சர்வவல்லமை வாய்ந்த இறைவனுக்கு பதிலாக உயிரற்ற உணர்வற்ற பொருட்களை வணங்கும்போது மனிதனிடத்தில் இறையச்சம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது.
அதனால் பாவங்கள் சமூகத்தில் மலிந்து விடுகின்றன. குற்றம் செய்ய அஞ்சாத தலைமுறைகள் உருவாகி சமூக அமைதி சீர்கெடுகிறது. மேலும் ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கோட்பாடு அடிபட்டு மனித குலம் அவரவர்கள் வணங்கும் கற்பனைக் கடவுள்களின் அடிப்படையில் மனிதகுலம் பிளவுண்டு ஜாதிகளாகவும் குலங்களாகவும் பிரிகிறது.
இது பல கலவரங்களுக்கும் இழப்புகளுக்கும் காரணமாகிறது. இந்தப் பாவம் இறைவனால் மன்னிக்கப்படாத பாவமாகும். இப்பாவம் செய்பவர்களுக்கு மறுமை வாழ்வில் நரக தண்டனை உண்டும் என்று திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான். இறுதித்தீர்ப்பு நாளின்போது இவர்களின் நிலை பற்றி திருக்குர்ஆன் எடுத்துக் கூறுகிறது.
26:88. ”அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
26:89. ”எவரொருவர் பரிசுத்த இருதயத்தை இறைவனிடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).”
26:90. ”பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும்.”
26:91. ”வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும்.”
26:92. ”இன்னும், அவர்களிடம் கூறப்படும்; ”நீங்கள் வணங்கி வழி பட்டவை எங்ககே?” என்று.
26:93. ”அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா? அல்லது தங்களுக்குத் தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா,”
(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்” என்று பொருள்)
26:94.பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும் – அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும் –
26:95. ”இப்லீஸின் சேனைகளும் – ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப்படுவார்கள்).”
(இப்லீஸ் என்பது ஷைத்தானைக் குறிக்கும்) யாரெல்லாம் இக்குற்றத்திற்கு தூண்டினார்களோ அல்லது துணை நின்றார்களோ அவர்களும் இக்குற்றங்களைச் செய்தவர்களும் அந்த நாளில் நொந்து கொள்வார்கள்…..
26:96. அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்;
26:97. ”அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.”
26:98. ”உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவனாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே (அப்போது);
26:99. இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள்.
26:100. ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசவோர் (இன்று) எவருமில்லை.
26:101. அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.
26:102. நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் இறைவிசுவாசிகளாகி விடுவோமே! (என்றும் கூறுவார்கள்.)
மறுமை நாளில் நடக்கும் உரையாடலை இறைவன் இன்றே தனது வேதம் மூலம் எடுத்துரைத்து விட்டான். இதை இன்றே உணர்ந்து திருத்திக் கொள்வோர்தான் புத்திசாலிகள்.
26:103. நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது – எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.