Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
ஏழையின் சிரிப்பில் இறைதிருப்தி காண்போம்! - Thiru Quran Malar

ஏழையின் சிரிப்பில் இறைதிருப்தி காண்போம்!

Share this Article

“அண்டை வீட்டுக் காரன் பசியோடு உறங்கும் போது தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவன் முஸ்லீம் அல்ல” என்ற நபிமொழியை நினைவூட்டிய வண்ணம் விடிந்தது ஆகஸ்ட் பதினைந்து!
ஆம், நேற்று விடியற்காலை 2மணியில் இருந்து 5.30 வரை பெய்த கனமழையில் மாடிவீடுகளுக்குள்ளேயே மழை வெள்ளம் புகுந்திருக்கும் போது அருகாமையில் உள்ள குடிசை வாசிகளின் நிலை என்ன? ஆராயப் புறப்பட்டது எங்கள் ஹவுஸ் ஆப் பீஸ் (House of Peace, Bangalore) சகோதரர்களின் படை.

எதிர்பார்த்த மாதிரியே வெள்ளம் புகுந்த குடிசைகள். ஒழுகும் கூரைகள். வெளியேயும் வெள்ளம் உள்ளேயும் வெள்ளம். உறங்க முடியுமா?
சொகுசு வீடுகளில் சுகம் காணும் இறைவிசுவாசிகள் இவற்றை நேரில் கண்டால்தான் நாம் அனுபவித்து வரும் இறை அருட்கொடைகளின் அருமையை உணர்வோம். குடிசைகளுக்குள் உங்களை ஒருகணம் கற்பனை செய்து பாருங்கள்.தொடர்ந்து நடந்த ஆலோசனையில் இக்குடிசை வாசிகளுக்கு நம்மால் ஆன உதவி என்ற அடிப்படையில் மதிய உணவை சமைத்து வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

(சில காலங்களுக்கு முன் இவர்களுக்கு மேற்கூரைக்காக பிளாஸ்டிக் தார்ப்பாய்களையும் உடைகளையும் கூட வழங்கியுள்ளோம், எல்லாப் புகழும் இறைவனுக்கே)
வாட்ஸாப்பில் மேற்படி ஆலோசனை வெளியிடப்பட அதற்கான பொருளாதாரம் ஏற்பாடானது.மதியம் உணவு பொட்டலங்களை அந்தக் குடிசை மக்களுக்கு விநியோகம் செய்யும் காட்சிகளைத்தான் இங்கு படங்களில் காண்கிறீர்கள்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார்கள் சிலர். அவர்கள் கண்டார்களோ இல்லையோ ஆனால் எங்களுக்கு அந்த ஏழைகளின் முகமலர்ச்சி ஒரு இறைகட்டளையை நிறைவேற்றிய மகிழ்ச்சியைத் தந்தது.

= (நபியே!) ‘அகபா’ என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்? (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
உறவினனான ஓர் அநாதைக்கோ, அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).

(திருக்குர்ஆன் 90:12- 16)

= மேலும், (சொர்க்கம் செல்ல இருப்போர்) அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், இறைவனின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).
(திருக்குர்ஆன் 76:8-9)

நரகவாசிகளைப் பற்றி இறைவன் கூறும்போது, “அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”(திருக்குர்ஆன் 69:34.)

ஊரெங்கும் மழை வெள்ளத்தால் சேறாகிப் போன மண்ணில் எப்படி மார்ச் பாஸ்ட் செய்வது, எப்படி கொடியேற்றுவது என்ற கவலையில் மூழ்கியிருந்தது. கொடியற்றமும் கோஷங்களும் ஆடல்களும் பாடல்களும் கற்பனை உருவங்கள் சமைத்து அவற்றை வழிபடுவதும் எல்லாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்துவதற்கான செயல்கள் என்று மக்களை நம்பவைத்துள்ளனர் அரசியல்வாதிகளும் ஊடகங்களும்.

ஆனால் நாட்டில் வாழும் மக்களைப் பற்றிப் பற்றி அவர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை..
ஆனால் உண்மையில் நாடு என்பது அதன் மண்ணோ எல்லைக்கோடுகளோ அல்ல, மாறாக அங்கு வாழும் மக்களே என்பதை எப்போதுதான் இவர்கள் உணருவார்களோ?

மக்களை இனம், ஜாதி, மதம், நிறம் போன்ற பாகுபாடுகள் கடந்து நேசிப்பதும் அவர்களுடைய நலனுக்காக வேண்டிய சேவைகள் செய்வதும், அவர்களுக்கு ஆபத்துகள் வரும்போது காப்பாற்றுவதும் அவர்களின் துயர் துடைப்பதும்தான் உண்மையான நாட்டுப்பற்று என்பதை எந்த அரசியல்வாதிகளும் மறந்தும் கூடப் பேசுவதில்லை.

இன்னும் சிலர் வந்தேமாதரம் பாடாதவன் தேசதுரோகி என்று சொல்லிக் கொண்டு அதை நாட்டுப்பற்றுக்கு அளவுகோலாகக் கொண்டுள்ளார்கள். அரசியல் ஆதாயமும் தேடிக் கொள்கிறார்கள்.எது எப்படியோ, இதையெல்லாம் நினைக்கும்போது நாங்கள் செய்தது மிகச் சிறிய ஒரு செயலானாலும் உண்மையான நாட்டுப்பற்றின் ஒரு அம்சம் என்பதை நினைக்கும்போது மகிழ்வு கொள்ளாமல் இருக்க முடிவதில்லை.

மேலும் இந்த மாதிரி சேவைகளை செய்யும் வாய்ப்புகள் ஆகஸ்ட் பதினைந்து அன்று மட்டும் வருவதில்லை. எப்போது வேண்டுமானாலும் வாய்ப்புகள் நம்மை அழைக்கலாம். அந்த வகையில் வருடமெல்லாம் நமக்கு நாட்டுப் பற்றுக்கான நாட்களே. இறைவனின் உவப்பைப் பெறுவதற்கான நாட்களே…

இதை இங்கு பகிர்வதன் நோக்கம் எங்களைப்பற்றி விளம்பர படுத்திக் கொள்வதற்காக அல்ல. மாறாக இன்று அடக்குமுறைக்கும் வீண் பழிகளுக்கும் ஆளாகியுள்ள இஸ்லாமிய சமூகம் இதுபோன்று தங்களாலான எளிய மக்கள் சேவைகளை மேற்கொண்டு இறைப் பொருத்தத்தைத் தேடக்கூடும் என்ற எதிர்பார்ப்பில்தான் இது பகிரப்படுகிறது.

நாங்கள் ஒரு சிறு அமைப்புதான். பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு இப்பணிகளை மேற்கொள்ளும்போது இன்னும் சிறப்பாகவும் எளிதாகவும் செய்யமுடியும் இறைவன் நாடினால்…= மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்’என்பதும் ‘மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்’என்பதும் நீங்கள் அறிந்த நபிமொழிகளே!

Share this Article

Add a Comment

Your email address will not be published.