Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
ஏன் விமர்சிக்கிறார்கள் இந்த மாமனிதரை? - Thiru Quran Malar

ஏன் விமர்சிக்கிறார்கள் இந்த மாமனிதரை?

Share this Article

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பாலைவனப் பெருவெளியில் நின்று கொண்டு பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகப் போராடிய அந்த மனிதரைக் கண்டு இன்று அதர்மவாதிகளும் ஆதிக்கசக்திகளும் பயப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டி வாழும் இடைத்தரகர்களும் போலி ஆன்மீகவாதிகளும் அமைதி இழக்கிறார்கள். வல்லரசுகள் வலிமையை இழக்கின்றன. உலக சரித்திரம் மாற்றி எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது.

அவர் போதித்த அறிவார்ந்த கொள்கையின் தாக்கம் உலகெங்கும் பரவப் பரவ அதன் காரணமாக இந்த மண்ணில் தங்களுக்கு பறிபோன மனித உரிமைகளைக் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்கள். அதுகாறும் தங்களை மதத்தின் பெயராலும் மூடநம்பிக்கைகளின் பெயராலும் வீண்சடங்குகளின் பெயராலும் பிணைத்து வைத்திருந்த  அடிமைத்தளைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள ஆதிக்க சக்திகளின் அநியாயங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இப்புரட்சியின் விளைவாக தங்கள் ஆதிக்கம் பறிபோவதை உணரும் சுயநல சக்திகள் தங்களைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்வது என்று வழியறியாது திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை பாமரர்களையும் உலகத்தின் நலிந்த நாடுகளின் செல்வங்களையும் கொள்ளை அடித்துக்கொண்டு சுகம் கண்டிருந்த இந்தக் சுயநலக் கூட்டத்தால் இந்தப் பேரிடியைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

அப்படி என்னதான் போதித்தார் இம்மாமனிதர்?

அதை சற்று அறிவோம் வாருங்கள்:

அவர் போதித்த கொள்கை அல்லது கோட்பாட்டின் பெயர்தான் இஸ்லாம் என்பது. இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இக்கோட்பாடு முன்வைக்கும் தத்துவம் ஆகும்.அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது.

எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச் செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம் அல்லது அதர்மம் என்பது. யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிராரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில் முஸ்லிம் (தமிழில் கீழ்படிபவன்) என்று வழங்கப்படும். 

இது அனைவருக்கும் பொதுவான ஓர் கொள்கை!.

இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ, நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல. எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கோட்பாட்டைத்தான் மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப்பட்டது.

தலைசிறந்த வாழ்க்கை இலட்சியம்  

யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு – அதாவது நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்கள் மறுமை வாழ்வில்  சொர்க்கத்தை அடைகிறார்கள். யார் இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும் உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.

சுயமரியாதை இயக்கம் 

இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன். அவனால்லாத எவரையும் – அவர்கள்  மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி, ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி – அவர்களைக் கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது. இறந்துபோன மனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை நேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கவேண்டும்.

மனிதகுல ஒற்றுமையும் சகோதரத்துவமும்   

இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியாவர்களே. மனிதர்கள் அனைவரும் – அவர்கள் எந்த மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே. எனவே அனைவரும் சமமே! அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக் கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது இஸ்லாம்.

நன்மையை எவுதலும் தீமையைத் தடுப்பதும்

இக்கொட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள் இவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல் நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.இப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற இக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்றும் ஏன் இந்த மாமனிதரை இவர்கள் கடுமையாக அவதூறுகள் கூறி விமர்சிக்கிறார்கள் என்றும்! 

தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் வெகுண்டெழுகிறார்கள். விபச்சாரம், கொலை, கொள்ளை, வட்டி, இலஞ்சம், ஊழல் பேர்வழிகளுக்கு தங்கள் தொழிலைத் தொடர்வதற்கு இது இடையூறாகிறது.

இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள் உணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது! மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக் கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்காது!

நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.

மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத் தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.இவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக்  கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள். நாடெங்கும் உலகெங்கும் தங்களால் எப்படியெல்லாம் தரக்குறைவாக விமர்சிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் விமர்சிக்கிறார்கள்ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:

‘தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால் இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.’அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் – இறைவனுக்கு இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.) (அல்-குர்ஆன் 9:32,33)

இந்த இறைவாக்குகள் சந்தேகத்திற்கு இடமின்றி புலர்ந்தது வருவதை நாம் அனைவரும் கண்டு வருகிறோம்.அந்த இறைத்தூதரிடம் பாடம் பயின்றவர்கள் பூமியில் வாழும் வரை அதர்மவாதிகளால் மக்களை ஏய்த்துப் பிழைக்க முடியாது, தங்கள் சுயநல சுரண்டல் திட்டங்களை செயல்படுத்த முடியாது. அந்த உத்தமர் அன்று கற்றுக் கொடுத்த கல்வி தலைமுறை தலைமுறையாகத் தன் விழிப்புணர்வுப் பணியைத் தொடருமானால் சகிக்க முடியுமா இவர்களால்? 

காலம்காலமாக இவர்களால் வழிகேடுக்கப் பட்ட மக்கள் இவரது உபதேசத்தைக் கேட்டபின் சத்தியத்தை உணர்ந்து இவர்களைக் கைவிட்டுவிட்டால் எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்ள முடியும்? 

இந்த உயர்ந்த போதனைகள் தங்களின் ஆதிக்கத்தில் உள்ள மக்களை வந்தடைந்தால் நம்மையும் மக்கள் தூக்கி எறிந்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை வெகுவாக கவ்விக்கொண்டுள்ளது. எனவே தங்களிடம் எஞ்சியுள்ள ஆதிக்க பலத்தினால இந்தப் புரட்சியை எப்படித் தடுப்பது என்று இரவுபகலாக யோசிக்கிறார்கள்.

சதித்திட்டங்கள் தீட்டுகிறார்கள். அவற்றின் வெளிப்பாடுதான் இன்று நாம் காணும் நபிகளாரைப் பற்றிய இழிவான விமர்சனங்களும் தவறான சித்தரிப்புகளும்!
 நபிகளார் கொண்டுவந்த இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்திற்கும் உறுதியான சித்தாந்தத்திற்கும் ஒரு மாற்று இருந்தால் அதை முன்வைத்து வாதாடி இந்த மக்களை தடுத்திடலாம்.

அவ்வாறு ஒரு மாற்றுத் திட்டம் எதுவும் தங்கள் கைவசம் இல்லாத நிலையில் இவர்களிடம் உள்ள ஒரே ஆயுதம் இதுதான்! கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள திராணியற்றவர்களிடம் உள்ள ஒரே குறுக்கு வழி வசைபாடுவதும் கேலி செய்வதும் அவதூறு கூறுவதும்தான்!

உலகெங்கும் கோடானுகோடி மக்கள் முன்மாதிரியாகப் பின்பற்றும் அளவுக்கு அப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந்த அவரை காமவெறியன் என்றும் அயோக்கியன் என்றும்  வாய்கூசாமல் வசை பாடுகிறார்கள். அவரை ஆபாசத் திரைப்படம் மூலமும் கார்டூன்கள் மூலமும் சித்தரித்து தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இணையதளம், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, இன்னபிற ஊடகங்கள் மூலமாகவும் எப்படியெல்லாம் அவரை தவறாக இட்டுக்கட்டி சித்தரிக்க முடியமோ அவ்வாறெல்லாம் சித்தரித்தும் இவர்களின் வெறி அடங்குவதில்லை!

ஆனால் இவர்களின் இந்த சதித்திட்டங்கள் மக்களிடம் எடுபடுவதில்லை என்பதையே உலகம் நமக்குப் பாடமாக போதிக்கிறது. இந்த மாமனிதர் மறைந்து நூற்றாண்டுகள் பதினான்கு கடந்து விட்டன. இவர் போதித்த மார்க்கத்தின் வளர்ச்சி என்றும் எறுமுகத்தையே கண்டு வருகிறது, உலக மக்கள் தொகையின் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியை இன்றுவரை ஈர்த்துள்ளது எனும் உண்மையே அதற்கு சான்றாக நிற்கிறது! தொடர்ந்து இது உலகின் எந்த ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளுக்கும் அடங்காமல் அபரிமிதமான வேகத்தில் வளர்ந்து வருவதை நாம் கண்டுவருகிறோம். காரணம் இது இவ்வுலகின் உரிமையாளனும் பரிபாலகனும் ஆகிய இறைவனின் மார்க்கம்!

ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ அல்லது உயர்த்தவோ வந்ததல்ல. மாறாக தர்மத்தை நிலைநாட்டி பூமியில் அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும். இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மலர்ந்து வரும் மாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் அதேவேளையில் பரிகாச செயல்கள் கண்டு துவண்டு விடக்கூடாது, ஏனெனில் தர்மத்தை நிலைநாட்டும் போராட்டத்தில் இது வழமையானது. இப்பரீட்சையை ஏற்படுத்திய இறைவன் நபிகளாரைப் பார்த்து கூறுவதை கவனியுங்கள்:

நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். எனினும் அவர்களிடம் எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இ(வ் விஷமத்)தைப் புகுத்தி வடுகிறோம்.. (திருக்குர்ஆன் 15:10-12)

Share this Article

Add a Comment

Your email address will not be published.