எம்மதமும் சம்மதமா?
சிலருக்கு முன்னோர்கள் எம்மார்க்கமோ அம்மார்க்கமே நேர்மார்க்கம்!…. சிலருக்கு பெரும்பான்மை எம்மார்க்கமே அம்மார்க்கமே நேர்மார்க்கம்!….. சிலருக்கு காதலியின் அல்லது காதலனின் மார்க்கம்… எஜமானனின் மார்க்கம்…… அல்லது எங்கு செல்வம் சேருமோ அம்மார்க்கம்… என பலவாறு தங்கள் மதத்தை அல்லது மார்க்கத்தை முடிவு செய்கின்றார்கள். இன்னும் சிலர் எதற்கு இந்த வம்பு? என்று கருதி எதையுமே பின்பற்றாதவர்களாகவும் உள்ளனர், இன்னும் சிலரோ கடவுளின் பெயரால் நடைபெறும் மோசடிகளையும் குழப்பங்களையும் கண்டு வெறுத்து நாத்திகத்தின்பால் ஒதுங்குகின்றனர்.
இவற்றில் எது சரி? எது தவறு? ஒன்றுக்கொன்று முரண்பட்ட இவை எல்லாமே சரியாகுமா? எல்லா நதிகளும் கடலில்தானே கலக்கின்றன….. அதுபோல எல்லாவற்றுக்கும் முடிவு ஒன்றுதான்…. எனவே எம்மதமும் சம்மதமே என்றும் சிலர் தத்துவம் பேசுவார்கள். சாக்கடைகளும் கடலில் தானே சென்று கலக்கின்றன… எனவே சாக்கடைகளும் நதிகளும் ஒன்றாகுமா? என்று இவர்களிடம் கேட்டால் பதிலில்லை!
அனைத்தும் – அதாவது நல்லதும் தீயதும் அல்லது ஆத்திகமும் நாத்திகமும் அல்லது நீதியும் அநீதியும் – ஒன்றாகுமா? ஆம் என்பது போன்றது இவர்களின் கூற்று. இந்த பொறுப்புணர்வற்ற போக்கு பூமியில் தர்மத்தை நிலைநாட்டும் பணிக்கு தடையாக நிற்கிறது. குழப்பங்கள் உருவாகக் காரணம் ஆகிறது என்பதை இவர்கள் உணரவேண்டும்.
சரியான மார்க்கம் எது?
ஆக, எதுதான் சரியான மார்க்கம்? எப்படி இதைத் தேர்ந்தெடுப்பது? இவ்வுலகின் சொந்தக்காரன் இதைப்பற்றி என்ன சொல்கிறான்?
= ஆகவே நீர் உம்முகத்தை தூய மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எதில் இறைவன் (அல்லாஹ்) மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய இயற்கை மார்க்கமாகும்;. இறைவனின் படைத்தலில் மாற்றம் இல்லை. அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். (திருக்குர்ஆன் 30:30)
(இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று வழங்கப்படுகிறது. வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்பது இவ்வார்த்தையின் பொருள். அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் கடவுள் என்றோ விளங்கிக் கொள்ளாதீர்கள்)
ஆம், இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவன் எதை மார்க்கமாகக் கற்பிக்கிறானோ அதுவே அவன் ஒப்புக்கொள்ளும் மார்க்கமும் ஆகும். அதாவது அவனது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழும் வாழ்க்கை நெறிதான் நேர்மார்க்கமாகும்.
இஸ்லாம் என்றால் என்ன?
இயற்கையில் நாம் காணும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மரம, செடி, கோடி, விலங்கினங்கள், பறவைகள், மீனகள் என அனைத்துமே இறைவன் விதித்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றன. அதுதான் இயற்கை மார்க்கமாகும்.
மனிதனும் பிறக்கும்போது இறைவனுக்குக் கீழ்படியும் நிலையில்தான் பிறக்கிறான். அவன் வளரவளர சிந்தனை விரியும்போதுதான் அதிலிருந்து மாறுபடுகிறான். தன் மார்க்கத்தைத் தேர்வு செய்கிறான். நபிகள் நாயகம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.:
“ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே எல்லாக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டும் திருப்பி) யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.”
(நூல்: புகாரி எண் 4775)
அந்த கீழ்படியும் நிலைதான் இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்வது மூலம் உண்டாகும் அமைதியின் பெயரே இஸ்லாம். அதுதான் இயற்கை மார்க்கமும் ஆகும்.
அலட்சியம் காட்டலாமா?
இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்து அதில் நமக்கு ஒரு தற்காலிக வாழவைக் கொடுத்து முடிவில் மறுமையில் நம் நன்னடத்தைக்குப் பரிசாக சொர்க்கத்தையும் தீய நடத்தைக்கு தண்டனையாக நரகத்தையும் வழங்க இருக்கிறான் நம் இறைவன். இந்நிலையில் நமது வாழ்க்கை நெறியைத் தேர்ந்தெடுப்பதில் அலட்சியம் காட்ட முடியுமா?
அவன் படைத்த பூமியில் வாழ்ந்து கொண்டு அவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்வது முறையா? அவன் தன் தூதர்கள் மூலமாக காலாகாலமாக அனுப்பி வரும் மார்க்கத்தை புறக்கணித்துவிட்டு முன்னோர்களின் வழக்கங்களையும் இன்னபிற மார்க்கங்களையும் பின்பற்றினால் என்ன நடக்கும்? இதோ, அவனே தன் திருமறையில் தெளிவு படுத்துகிறான்:
=“நிச்சயமாக இறைவனிடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்…” (அல்குர்ஆன் 3:19)
= “இஸ்லாமைத் தவிர்த்து (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்” (அல்குர்ஆன் 3:85)
மறுமையில் நஷ்டம் என்றால் என்ன? நரகம் அல்லாமல் வேறு என்ன
நம்மைப் படைத்து நமக்கு நம் வழியைத் தேர்ந்தெடுக்கும் விருப்ப உரிமையையும் தந்த இறைவன் நமக்கு வழங்கும் அறிவுரை இதுதான்:
= நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (திருக்குர்ஆன் 30:31)
அவன் தன் தூதர்கள் மூலமாகக் கற்றுத்தரும் வாழ்க்கை நெறியைப் பின்பற்றி வாழுங்கள். படைத்தவனை விட்டுவிட்டு படைப்பினங்களை வணங்கும் போக்கைக் கைவிடுங்கள்
= எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (திருக்குர்ஆன் 30:32)
இறைத்தூதரகள் அனைவரும் இறைவனுக்குக் கீழ்படிதல் (அரபு மொழியில் இஸ்லாம்) என்ற தூய்மையான மார்க்கத்தையே போதித்து வந்தார்கள். இறைத்தூதர்களின் மறைவுக்குப் பிறகு ஷைத்தானின் தூண்டுதலின் காரணமாக இடைத்தரகர்கள் அவர்கள் விட்டுச்சென்ற தூய்மையான மார்க்கத்தில் இணைவைப்பையும் மூடநம்பிக்கைகளையும் புகுத்தினார்கள். அதைத் திருத்தி மீண்டும் அதே தூய்மையான மார்கத்தை மக்களுக்கு போதிக்கவே மீண்டும்மீண்டும் புதிய இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டார்கள்.
அந்த இறைத்தூதர்களின் பரம்பரையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக இன்று இஸ்லாம் மீண்டும் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் நிருவனரே முஹம்மது நபி(ஸல்) என்ற கூற்றும் தவறானது என்பதையும் நீங்கள் கவனிக்கவேண்டும்.
எனவே இன்று நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற மார்க்கம் என்பதற்காக அவற்றையெல்லாம் ‘கடவுளை அடையும் வழி’ என்றோ ‘மோட்சத்திற்கு உரிய மார்க்கம்’ என்றோ நம்பி ஏமாந்து விடாதீர்கள். பகுத்தறிவைப் பயன்படுத்தி உண்மையான மார்க்கத்தைத் தேர்வு செய்து பின்பற்றுங்கள்.
உங்கள் இறைவன் யார் என்று எவ்வாறு அறிவது?
உங்கள் இறைவன் யார் என்று அறிவதில் குழப்பமா? உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு இக்கட்டான துன்பம் வந்தால் யாரை உதவிக்கு அழைப்பீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக நீங்கள் கடலிலோ, வானிலோ, பாலைவனத்திலோ பயணம் மேற்கொள்ளும்போது திடீரென ஒரு ஆபத்து வந்தால் நீங்கள் உங்கள் வீடுகளிலோ ஊரிலோ வணங்கி வந்த உங்கள் இஷ்ட தெய்வங்களையோ குலதெய்வங்களையோ அழைக்க மாட்டீர்கள்தானே!
இக்கட்டான சூழலில் உங்கள் பார்வை வானை நோக்கியல்லவா உயர்கிறது? படைத்தவன் மட்டுமே இப்போது காப்பாற்ற முடியும் என்பதை உணர்கிறீர்கள் அல்லவா? அந்த உண்மை இறைவனையே எப்போதும் வணங்கி வாருங்கள்! அது மட்டுமே உங்களுக்கு பயன் அளிக்கும்.
= மனிதர்களுக்கு சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து அருளை சுவைக்கச் செய்தால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர். (திருக்குர்ஆன் 30:33)
நன்றி கொன்றவர்களுக்கு தண்டனை:
இறைவன் உங்கள் பிரார்த்தனையை ஏற்று உங்களை ஆபத்திலிருந்து காப்பாற்றிவிட்டால் அவனுக்கு நன்றிக்கடனாக அவனுக்குக் கீழ்படியும் போக்கைக் கைக்கொள்ளுங்கள். உங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கோருங்கள். மாறாக செய்நன்றி மறந்து மீண்டும் போலி தெய்வங்களை வணங்க தலைப்பட்டீர்களானால் அதற்குரிய தண்டனை இம்மையிலும் உங்களை அடையலாம் மறுமையிலும் அடையலாம்!
= நாம் அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி செலுத்தாமல்) அவர்களை நிராகரித்துக் கொண்டிருக்கட்டும்; நீங்கள் சகமனுபவித்துக் கொண்டிருங்கள்; விரைவில் (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (திருக்குர்ஆன் 30:34)
இதோ மீண்டும் இறைவன் கேட்கிறான்:
= இறைவனின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (திருக்குர்ஆன் 3:83)