Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
எண்ணித் துணிவது எவ்வாறு?- இஸ்திகாரா - Thiru Quran Malar

எண்ணித் துணிவது எவ்வாறு?- இஸ்திகாரா

Share this Article

எண்ணித்துணிக கருமம்- துணிந்தபின் எண்ணுவதென்பது இழுக்கு ….. என்ற வள்ளுவர்  சொல்லை அறிவோம். நாம் ஒரு குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை  இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையாள வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு  செய்வதற்கு முற்படலாம்.

இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாற வாய்ப்புகள் உண்டு. அவை நமது  அழிவுக்கும் இழப்புக்கும் காரணமாவதும் உண்டு. 

நமக்கு எவ்வளவுதான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தாலும், நம்மைப் படைத்த இறைவனைச் சார்ந்தே இருக்கிறோம் என்பதை நாம் ஒரு கணமும் மறந்துவிடக்கூடாது.

நாம் செய்ய முற்படும் ஏதேனும் ஒரு காரியத்தை எவ்வழியில் செய்வது என்று முடிவெடுப்பதில் நமக்கு தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை எந்த வழியில் எப்படிச்   செய்தால் நம் குறிக்கோளை அடைய முடியும்? நமக்கு முன் தேர்வுகளும் வாய்ப்புகளும் ஒன்றுக்கு மேற்பட்டவை இருக்குமானால் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பே.!  

குறிப்பாக திருமணம், தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் போன்ற அன்றாட விடயங்களில் நாம் எடுக்கப்போகும் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய அராபிய வழக்கம் இஸ்லாம் வருவதற்கு முன்  இவ்வாறான நிலைமைகளில் அரேபியர்கள் இக்குழப்பத்தில் இருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள்.  

அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் “செய்” என்றும் மற்றதில் “செய்யாதே” என்றும் மற்றொன்றில்  “ஒன்றும் இருக்காது”! இவற்றில் “செய்”என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். “செய்யாதே” என்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள். “ஒன்றும் இல்லாத” சீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து  சீட்டுகளை போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

நபிகளார் கற்றுத்த்தந்த இஸ்திகாரா தொழுகை இவ்வாறான நிலைமைகளில் இருந்து இறைவிசுவாசிகளை இறைவன் இஸ்லாத்தின் மூலம் பாதுகாத்தான். குறிபார்ப்பது ஜோதிடம் போன்ற மோசடிகளில் இருந்தும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் அவர்களை தடுத்து செலவில்லாத எளிய முறையை தன் தூதர் மூலம் கற்றுக்கொடுத்தான்.

“நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்” (அல்குர்-ஆன் 5:3)

நபித்தோழர் ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:“நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு அத்தியாயத்தைக் கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகையைக் கற்றுதருபவராக இருந்தார்கள்”

இஸ்திகாரா  தொழுகையை தொழும் முறை: கடமையான தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை (சுற்றுக்களை) இஸ்திகாரா தொழுகை என்ற எண்ணத்தோடு  தொழ வேண்டும். 

அதன் பிறகு கீழ்கண்ட பிரார்த்தனையை பொருள் விளங்கி ஓதவேண்டும். அல்லாஹும்ம இன்னீ அஸ்தகீருக பி(B)இல்மிக, வ அஸ்தக்திருக பி(B)குத்ரதிக வ அஸ்அலுக மின் ப(F)ள்கல் அளீம். ப(F)இன்னக தக்திரு வலா அக்திரு வ தஃலமு வலா அஃலமு வ அன்த அல்லாமுல் குயூப்(B) அல்லாஹும்ம இன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர கைருன் லீ பீ(F) தீனீ வ மஆஷீ வ ஆகிப(B)தி அம்ரீ வ ஆஜிஹி ப(F)க்துர்ஹு லீ வயஸ்ஸிர்ஹு லீ, ஸும்ம பா(B)ரிக் லீ பீ(F)ஹி வஇன் குன்த தஃலமு அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீ(F) தீனீ, வமஆஷீ வஆகிப(B)தி அம்ரீ வ ஆஜிஹி ப(F)ஸ்ரிப்(F)ஹு அன்னீ வஸ்ரிப்(F)னீ அன்ஹு வக்துர் யல் கைர ஹைஸு கான ஸும்ம அர்ளினீ பி(B)ஹி.

இதன் பொருள் : இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.

இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத்(அருள்வளம்) செய்!

இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடுவாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக!

ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

இவ்வாறு இறைவனிடம் ஆத்மார்த்தமாக பிரார்த்தித்து விட்டு இறைவிசுவாசியான ஒரு சகோதரனிடம் கலந்தாலோசித்து காரியங்களில் ஈடுபட்டால் அது ஒரு விசுவாசிக்கு திருப்தி உள்ளதாகவே அமையும். காரியத்தின் முடிவு தன் விருப்பத்துக்கு மாறாக அமைந்தாலும் அதுவும் நன்மைக்கே என்று அமைதியுறுவான் விசுவாசி!

Share this Article

Add a Comment

Your email address will not be published.