Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
ஊடகங்களின் இரட்டை நிலை ஏன்? - Thiru Quran Malar

ஊடகங்களின் இரட்டை நிலை ஏன்?

Share this Article

லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லரும் ஹிரோஷிமா நாகசாகி மீது அணுகுண்டு வீசி கோடிக்கணக்கான மக்களை அழித்தும் அங்கஹீனர்களாக்கவும் செய்த அமெரிக்காவும்…..

போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலும் அன்று கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும்….

நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik… etc etc..

FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதல்களை நடத்தியது முஸ்லிம் அல்லாதவர்களேஇப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையையோ மதத்தையோ நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை.


ஆனால் தங்கள் சொந்த நாட்டை ஆக்கிரமித்து மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் ஆப்கானிய, ஈராக்கிய மக்களையும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடும் பாலஸ்தீன மக்களையும் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கூறிவருவதைக் காண்கிறீர்கள்.

தீவிரவாதம் என்ற விஷயம் நாடு, இனம், மதம், மொழி என எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது’ என மனித உரிமை ஆர்வலர்கள் பலமுறை சொன்னாலும் அது ஏன் பெரும்பாலானவர்கள் காதுகளில் விழுவதில்லை? 

இவ்வாறு உலகம் முழுக்க திரும்ப திரும்பக் கட்டவிழ்க்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான பொய்களுக்கு என்ன காரணம்?அப்படியொரு வெறுப்பு ஏன் உலகெங்கும் உண்டாக்கப்படுகிறது?அதற்கு முக்கியமான காரணம் உள்ளது…. அது என்ன?

அநியாயங்களுக்கு எதிரி இஸ்லாம்! இன, நிற, மொழி, நாடு, போன்ற வரம்புகளைக் கடந்து இஸ்லாம் மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் படுவதால் உலகெங்கும் இக்கொள்கை அதிவேகமாக பரவுகிறது என்பதோடு அதர்மத்துக்கும் அநியாயங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான இஸ்லாத்தின் உறுதியான நிலைபாடே இதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.

அதைப் புரிந்து கொள்ள இஸ்லாம் என்ற இந்த சீர்திருத்தக் கொள்கையின் அடிப்படைகளை அறிந்தாக வேண்டும்.


இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல்
என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமை வாழ்க்கையிலும் அமைதி பெறலாம் என்பது இம்மார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.


அதாவது இறைவன் எதை எல்லாம் செய்யவேண்டும் என்று நமக்கு
கட்டளை இடுகிறானோ அதை செய்ய வேண்டும். அதற்குப்
பெயர்தான் நன்மை அல்லது புண்ணியம் அல்லது தர்மம் என்பது.


எதையெல்லாம் செய்யக் கூடாது என்று தடுக்கிறானோ அவற்றைச்
செய்யக்கூடாது. அதற்குப் பெயர்தான் தீமை அல்லது பாவம்
அல்லது அதர்மம் என்பது.

யார் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அதன்படி வாழ்கிறாரோ அவருக்குப் பெயர்தான் அரபு மொழியில்
முஸ்லிம் (கீழ்படிபவன்) என்று வழங்கப்படும்.

இக்கோட்பாட்டை யார் வேண்டுமானாலும் ஏற்றுக் கொண்டு அதன்படி வாழலாம். இது ஒரு தனிப்பட்ட குலத்துக்கோ,  நாட்டுக்கோ இனத்துக்கோ சொந்தமானது அல்ல. இது புதிய ஒரு மார்க்கமும் அல்ல.

எல்லாக் காலத்திலும் இப்பூமியில் பல்வேறு பாகங்களுக்கு
அனுப்பப்பட்ட இறைவனின் தூதர்கள் இக்கொட்பாட்டைத்தான்
மக்களுக்கு போதித்தார்கள். அதே கோட்பாடுதான் இன்று இறுதி
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) மூலம் இஸ்லாம் என்ற பெயரில்
மறு அறிமுகம் செய்யப் பட்டது.

யாரெல்லாம் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு – அதாவது
நன்மைகளைச் செய்து தீமைகளில் இருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்கள் மறுமை வாழ்வில் சொர்க்கத்தை அடைகிறார்கள்.

யார் இறைவனையும் அவன் அளித்த வாழ்க்கைக் கோட்பாட்டையும்
உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் நரகத்தை அடைகிறார்கள்.

இக்கோட்பாட்டின் முக்கியமான அடிப்படை என்னவென்றால்
இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனாகிய இறைவன் மட்டுமே
வணக்கத்திற்கு உரியவன்.

அவனால்லாத எவரையும் – அது மிகப்பெரிய மனிதர்கள் ஆனாலும் சரி, அரசர்கள் ஆனாலும் சரி, ஆன்மீகத் தலைவர்கள் அனாலும் சரி – அவர்களைக் கடவுள் என்று சொல்வதோ வணங்குவதோ அறவே கூடாது.

இறந்துபோன மனிதர்களின் சமாதிகளையோ அல்லது உருவச்சிலைகளையோ கற்களையோ மரங்களையோ மனிதன் வணங்கக் கூடாது. இறைவனை நேரடியாக எந்த இடைத் தரகர்களும் இன்றி நேரடியாக வணங்கவேண்டும்.

இக்கோட்பாட்டின் இன்னொரு அடிப்படை மனிதர்கள் அனைவரும்
ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப்
பெருகியவர்களே.

மனிதர்கள் அனைவரும் – அவர்கள் எந்த மதத்தவர் ஆனாலும் எந்த நாட்டைச்சேர்ந்தவர்கள் ஆனாலும், எந்த மொழியைப் பேசினாலும், எந்த நிறத்தவர் ஆனாலும் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே.

எனவே அனைவரும் சமமே! அவர்களுக்கிடையே நாடு, இனம், மொழி, குலம், ஜாதி போன்றவற்றின் அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வுகளும் கற்பிக்கக் கூடாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் உயர முடியும் என்கிறது இஸ்லாம்.

இக்கொட்பாட்டின்படி இதனை ஏற்றுக்கொண்டவர்கள்
இவ்வுலகில் இறைநம்பிக்கை கொள்வதோடு மட்டுமல்லாமல்
நன்மையை செய்யவும் ஏவவும் வேண்டும் தீமைகளிலிருந்து
விலகியிருக்கவும் வேண்டும், தீமைகளைக் கண்டால் எவ்வாறு
இயலுமோ அவ்வாறெல்லாம் தடுக்கவும் வேண்டும்.

இப்போது நீங்களே புரிந்து கொள்ளலாம். ஏன் இஸ்லாம் என்ற
இக்கொள்கை எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்று!

தர்மம் பரவும்போது அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள்
வெகுண்டெழுகிறார்கள்.

இறைவனை நேரடியாக அணுக முடியும் என்று மக்கள்
உணரும்போது இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது!


மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி அவற்றைக்
கொண்டு காலாகாலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு
இக்கொள்கை பரவுவது பிடிக்காது!

நிறத்தின் இனத்தின் மொழியின் ஜாதியின் மேன்மைகளைக் கூறி
மற்ற மக்களை அடிமைகளாக பாவித்து ஆதிக்கம் செய்து
வாழ்வோருக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.

மனிதனை இக்கொள்கை சுயமரியாதை உணர்வோடு வாழத்
தூண்டுவதால் அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள்.

அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.

இவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு
இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான்
அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக்
கொண்டு செயல்படுகிறார்கள்.

ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ இம்மார்க்கம் அகில உலக
மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும்
தடுக்க முடியாது என்கிறான் தனது திருமறையில்:


‘தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)
அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால்
இறைமறுப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவனின் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.’ (அல்-குர்ஆன் 9:32)


 ஆனால் இதன் வளர்ச்சி கண்டு யாரும் கவலை கொள்ள
வேண்டியதில்லை. இது ஒரு இனத்தையோ நாட்டையோ ஒழிக்கவோ
அல்லது உயர்த்தவோ வந்ததல்ல.

மாறாக உலகெங்கும் தர்மத்தையும் நீதியையும் நிலைநாட்டி அமைதியைப் பரப்ப வந்த ஒன்று எனபதை உணர்ந்துவிட்டால் எதிர்ப்புகள் மறையும்.

இன்றைய எதிரிகள் நாளை இம்மார்க்கத்தின் காவலர்களாக மாறுவார்கள். அதைத்தான் இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இம்மார்க்கத்தின் வளர்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

Share this Article

Add a Comment

Your email address will not be published.