Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
உண்மையான பகுத்தறிவுவாதி - Thiru Quran Malar

உண்மையான பகுத்தறிவுவாதி

Share this Article

தனது அறிவுக்கும் புலன்களுக்கும்  எட்டாதவற்றையும் தான் அறியாதவற்றையும் அவை இல்லவே இல்லை என்று அப்பட்டமாக மறுப்பவர்கள் இன்று தங்களைத் தாங்களே பகுத்தறிவாளர்கள் என்று பட்டம் சூட்டிக் கொள்வதை கண்டு வருகிறோம்.

பகுத்தறிவு என்றாலே கடவுளே இல்லை என்று கண்மூடித்தனமாக மறுப்பது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதைப் பரப்பியும் வருகிறார்கள். உண்மையில் நமது புலன்களுக்கு எட்டுபவற்றை (sensible data) வைத்து எட்டாதவற்றைப் பகுத்து அறிவதே பகுத்தறிவு எனப்படும். பிரபஞ்சத்தின் ஒப்பற்ற படைப்பு, அறிவார்ந்த திட்டமிட்ட இயக்கம், குறைகளில்லா பரிபாலனம் என அனைத்தையுமே செய்து வரும் இறைவனை தங்கள் கண்களுக்குப் புலப்படவில்லை அல்லது தங்கள் புலன்களுக்குத் தட்டுப்படவில்லை என்று காரணம் கூறி மறுக்கிறார்கள் அவர்கள். 

இதுவா பகுத்தறிவுக்குப் பொருள்? புலன்களுக்குத் தட்டுப்படுபவற்றை மட்டும்தான் ஏற்றுக்கொள்வோம் என்பவர்களுக்கு பகுத்தறிவின் தேவையே இல்லையே! ஐந்தறிவே போதுமானதல்லவா?. மிருகங்கள் அதைத்தானே செய்கின்றன.

இன்னும் சொல்லப் போனால் அவைகூட பகுத்தறிவைப் பயன்படுத்துவதைக் காணலாம். உதாரணமாக, வாசனையை வைத்து உணவிருக்கும் இடத்தைப் பகுத்து அறிகின்றன, இயற்கையின் அடையாளங்களை வைத்து ஆபத்துகளை உணர்கின்றன.

விவேகமான பகுத்தறிவுவாதி இப்ராஹீம் 

ஒரு கோவில் பூசாரியின் மகனாகப் பிறந்து பகுத்தறிவை முறைப்படி பயன்படுத்தி வாழ்வில் வெற்றி கண்ட ஒரு மனிதரைப் பற்றி திருக்குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது. மதத்தின் பெயரால் நடக்கும் அட்டூழியங்களையும் மோசடிகளையம் மூடப் பழக்கவழக்கங்களையும் அவர் கண்டு உணர்ச்சிவசப்பட்டார், கொதித்தெழுந்தார். 

ஆனால் அவர் நிதானத்தை இழக்கவில்லை. கோபம் அவரது கண்களை மறைக்கவில்லை. யதார்த்தங்களை மறுக்காமல் விவேகமான முறையில் செயல்பட்டார். சமூக சீர்திருத்தம், புரட்சி என்பதற்காக  இம்மை மற்றும் மறுமைப் பேறுகளைத் தொலைத்துவிட்டு நிற்கவில்லை அவர்.  

செய்பவைச் செவ்வனச் செய்து வெற்றி கண்டார். அவர் அடைந்தது ஈருலக வெற்றி! அவர்தான் இறைத்தூதர் இப்ராஹிம்(அலை) அவர்கள்.  சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் ஒரு கோவில் பூசாரியின் மகனாகப் பிறந்தார். அவர் சிந்திக்கும் வயது வந்தபோது அவரும் அவரது சமூகத்தவரும் செய்துவரும் மூடப்பழக்க வழக்கங்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. அவர் கேள்விகள் எழுப்பினார்.  

இதோ திருக்குர்ஆன் அவரைப்பற்றி கூறுகிறது:

26:69. இன்னும், நீர் இவர்களுக்கு இப்றாஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக!

26:70.அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி; ”நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது,

26:71. அவர்கள்; ”நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்” என்று கூறினார்கள்.


மூதாதையர் பழக்கங்களை மூடமாக நம்பியிருந்த மக்களின் அறியாமையை அவர் சாடினார். அவர்கள் சிந்தித்து உண்மையை உணரும் வண்ணம் வாதங்களை முன்வைத்தார்.

26:72. (அதற்கு இப்றாஹீம்) கூறினார்; ”நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?

26:73. ”அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது  தீமை செய்கின்றனவா? (எனவும் கேட்டார்)

26:74. (அப்போது அவர்கள்) ”இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.

26:75. அவ்வாறாயின், ”நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார்.

26:76. ”நீங்களும், உங்கள் முந்திய மூதாதையர்களும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).”

தன்னந்தனியனாக மொத்த ஊருக்கும் எதிராக நின்றார் இப்ராஹீம். ஊருடன் ஒத்து வாழ் என்று தத்துவம் பேசி ஒதுங்க மனமில்லை அவருக்கு. நமக்கேன் வம்பு என்று வாளாவிருக்கவுமில்லை அவர். மக்கள் தவறுகளைத் திருத்தியே ஆகவேண்டும் என்று துணிந்தார். தன் நிலைப்பாட்டைத் தெளிவுற மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

  26:77. நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே – அகிலங்களின் இறைவனைத் தவிர (அவனே காப்பவன்).

26:78. அவனே என்னைப் படைத்தான்; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.

26:79. அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்குக் குடிப்பாட்டுகிறான்.

26:80. நான் நோயுற்ற கால்த்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.

26:81. மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான்.

26:82. நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.

மக்கள் அவரது சீர்திருத்தத்திற்கான அழைப்பை அப்பட்டமாகப் புறக்கணித்தனர். இருப்பினும் படைத்த இறைவனை விட்டுவிட்டு உயிரற்ற உணர்வற்ற ஜடப்போருட்களை கண்மூடித்தனமாக வணங்கிவரும்  தம மக்களுக்கு எப்படியாவது பாடம் புகட்டவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் இப்ராஹீம்.

இறுதியில் ஒரு திருவிழாவை ஒட்டி  ஊர் மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக அடுத்த ஊருக்குச்    சென்றிருந்தபோது இப்ராஹீம் தமது  ஊரின்  மிகப்பெரிய கோவிலுக்குள் ஒரு கோடாலியோடு நுழைந்தார். 

பின்னர் அங்கிருந்த எல்லா சிலைகளையும் அடித்து நொறுக்கினார். ஒரு உபாயத்துக்காக அதில் மிகப்பெரிய ஒன்றை மட்டும் விட்டுவிட்டார்,.மக்கள் திருவிழா முடிந்தபின் ஊர் திரும்பினார்கள். அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தங்களுக்குள் விசாரித்துக் கொண்டனர். ஊர் மக்கள் அனைவரும் திரட்டப் பட்டார்கள்.

இப்ராஹீமும் கொண்டுவரப் பட்டார்.இப்ராஹிமும் அதைத்தான் எதிர்பார்த்து இருந்தார். அனைவரையும் சிந்திக்க வைத்துப் பாடம் புகட்டலாமல்லவா? தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளவோ உதவி செய்யவோ இயலாத இச்சிலைகளா மக்களைக் காப்பாற்றப் போகின்றன? அவர்கள் எப்படிப்பட்ட அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் மூழ்கி இருக்கிறார்கள் எனபதை அனைவரையும் இன்று உணர வைக்க வேண்டும் என்பது அவர் திட்டமாக இருந்தது.

21:62 “இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று  கேட்டனர்.

21:63  அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இதுதான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.

ஆம், உயிரும் உணர்வும் அற்ற இந்த சிலைகளின் இயலாமையை மக்கள் அவர்களாகவே உணர்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்தார் இப்ராஹீம். மக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

21:65. பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).

21:66. “(அப்படியாயின்) ஏக இறைவனையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார். 

அவமானத்தால் கூனிக் குறுகி நின்ற மக்களிடம் இனியாவது படைத்த இறைவனை வணங்குங்கள் என்ற அழைப்பு விடுத்தார் இப்ராஹீம். ஆனால் மக்கள் கேட்பவர்களாக இருக்கவில்லை.உண்மை ஒளிர்ந்த போது, போலி தெய்வங்களின் இயலாமையும் மக்களது அறியாமையும் முட்டாள்தனமும் வெட்டவெளிச்சமானது.

ஆனால் தாங்கள் தோற்கடிக்கப்பட்ட ஆத்திரத்தில் மக்கள் இப்ராஹீமை பலவந்தமாகத் தண்டிக்க முற்பட்டனர். சாதாரண தண்டனை அல்ல அது!மிகப்பெரும் அளவில் விறகு சேகரிக்கப்பட்டது .மிகப்பெரிய கிடங்கு தோண்டப்பட்டு பெரும் தீக்குண்டம் ஒன்று வளர்க்கப் பட்டது. எப்படியாவது அவை தீர்த்துக் கட்டிட வேண்டும்- இதுதான் அம்மக்களின் இறுதி முடிவாக இருந்தது.

சத்தியத்திற்கு எதிராக ஊரும் அதிகார வர்க்கமும் ஓரணியில் திரண்டாலும் அசைந்து கொடுக்கவில்லை அந்த மாபெரும் சீர்திருத்தவாதி! தனக்குத் துணையாக ஒரு நபர் கூட இல்லை!  உலக சரித்திரத்திலேயே எங்காவது இப்படியொரு மனிதனைப் பார்க்க முடியுமா?தன்னை தண்டிப்பதற்காக பலநாள் வளர்த்துப் பெருக்கிய தீக்குண்டம்! தனக்கு எதிராக தன் குடும்பம் உட்பட ஊரும் ஆதிக்க வர்க்கமும்! இப்ராஹீமின் நிலையை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தீக்குண்டத்தில் எறியப்படும் போது இப்ராஹிம் என்ன செய்தார் தெரியுமா? ஒரு துளியளவுகூட தைரியத்தை இழக்கவில்லை. ஏன் இழக்க வேண்டும்? இவ்வுலகைப் படைத்துப் பரிபாலிப்பவனுடைய கண்முன்புதானே இவை அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது? அவனது பூமியல்லவா இது? அவனைப் பற்றிய சத்தியத்தையல்லவா நான் மக்கள் முன் நிலைநாட்டுகிறேன்?  அவனது ஆட்சிக்கு உட்பட்டதல்லவா  அண்டசராசரங்களும்  அணுத்துகள்களும் ! அவன் எனக்குத் துணை நிற்கும்போது யார் என்னை என்ன செய்து விட முடியும்?

நெருப்பில் அவரை மக்கள் எறிந்தபோது அவர் கூறினார் : “அல்லாஹ் எனக்குப் போதுமானவன். காரியங்களை கைகாரியம் செய்வதில் மிகச் சிறந்தவன் அவனே!”அகிலத்தின் இறைவன் அவரைக் கைவிடவில்லை! எந்த இறைவன் நெருப்புக்கு சுடும் தன்மையைக் கொடுத்தானோ அதே இறைவன் இப்ராஹீமுக்காக குளிரச் சொன்னான்.

அவனைப் பொறுத்தவரை ஒரு காரியத்தை ஆகு சொல்வதுதான் தாமதம் உடனே அது ஆகிவிட வேண்டுமல்லவா? ஆம் நெருப்பு குளிர்ந்தது. பெரும் நெருப்புக் கிடங்கினாலும் முழு ஊரினாலும் இப்ராஹீமை ஒன்றுமே செய்ய இயலவில்லை!

  21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.

பகுத்தறிவுவாதிகளுக்கும் சீர்திருத்தவாதிகளுக்கும் தந்தை இப்ராஹீம் ஓர் சிறந்த முன்மாதிரி. படைத்த இறைவன் மேல் இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை அவரைத் தனிநபராக மூட நம்பிக்கையில் ஊறிக்கிடந்த சமூகத்தை எதிர்த்துப் போராட வைத்தது.

Share this Article

Add a Comment

Your email address will not be published.