இஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்
சமீபத்தில் பியூ ஆய்வு மையம் (www.pewresearch.org) வெளிப்படுத்தும் தகவல்கள்:
= 2015 – 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் இருமடங்காகி விடும். உலக கிருஸ்துவர் எண்ணிக்கையை அது முந்தி விடும்.
= வரக்கூடிய ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 32% என்ற விகிதத்தில் உயரும்போது இஸ்லாமியர் எண்ணிக்கை 70% அதிகரிக்கும். – அதாவது 2015 இல் 1.8 பில்லியன் ஆக உள்ள இஸ்லாமியர் எண்ணிக்கை 2060 இல் சுமார் 3 பில்லியனாக உயரும். 2015 இல் இஸ்லாமியர் மொத்த உலக மக்கள் தொகையில் 24.1% இருந்தார்கள். 45 ஆண்டுகளுக்குப்பின் அது 31.1% ஆக உயரும்.
https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2 FaskMuslim%2Fvideos%2F2165441727024324%2F &show_text=0&width=560
வளர்ச்சிக்கான காரணங்களாக சொல்லப்படுபவை:
உலகில் இன்றைய இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் 2.9. இஸ்லாம் அல்லாத ஏனையவர்களின் பிறப்பு விகிதம் 2.2 ஆக உள்ளது இதில் கிறிஸ்தவர்களின் பிறப்பு விகிதம் மட்டும் தற்போது 2.6 ஆக உள்ளது.
(ஒரு இனம் வளர வேண்டுமானால் தேவைப்படும் குறைந்தபட்ச பிறப்பு விகிதம் 2.1) இஸ்லாமியர் அதிகமாக வாழும் நாடுகளில் இஸ்லாமியர்களின் கருவுருந்தன்மை (fertility) மற்றவர்களை அதிகமாக உள்ளது. இஸ்லாமியர்களின் சராசரி வயது (median age) 2015 இல் 24 ஆக இருக்கையில் மற்றவர்களின் சராசரி வயது 32 ஆக உள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் நிலை
= ஐரோப்பாவின் சில பகுதிகளில் இஸ்லாமியர் மக்கள் தொகை 2050 இல் மூன்று மடங்காகும்.
= புலம் பெயர்தலும் உயர்ந்த பிறப்பு விகிதமும் இஸ்லாமியர் மக்கள்தொகை உயர்வுக்கு (சொல்லப்படும்) காரணங்கள்.
= இங்கிலாந்தில் மக்கள்தொகையில் 2016இல் 6.3% ஆக உள்ள இஸ்லாமியர் எண்ணிக்கை 2050 இல் 17.2% ஆக உயரலாம். (தகவல்: http://www.pewresearch.org/fact-tank/2017/04/06)
சமீபத்தில் வெளியான இந்தத் தகவல்கள் பல்வேறு அதிர்வலைகளை உலகில் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக ஆதிக்க சக்திகள் அரண்டு போயுள்ளன. அன்று காலனி ஆதிக்கம் மூலம் நாடுகளைக் கொள்ளையடித்தவர்கள் இன்றும் அந்நாடுகளில் கைக்கூலி அரசர்களையும் ஆட்சியாளர்களையும் நியமித்து அவர்கள் மூலம் அக்கிரமமாக அடக்குமுறைகளை முடுக்கிவிட்டு இன்றும் அவற்றை கொள்ளையடித்து வருகிறார்கள் என்பதே உண்மை.
இஸ்லாம் என்பது அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் சுரண்டலுக்கும் எதிரானது. மக்களை சுயமரியாதையோடு வாழத்தூண்டும் ஒரு மக்கள் இயக்கம் என்பதை ஆதிக்க சக்திகள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். இஸ்லாத்தின் வளர்ச்சி மூலம் மக்கள் எழுச்சி பெற்றுவிட்டால் மக்கள் தங்களின் கைப்பாவை அரசர்கள் அல்லது ஆட்சியாளர்களுக்கு – குறிப்பாக எண்ணெய்வளம் நிறைந்த அரபு நாடுகளில்- எதிராகத் திரும்பினால் தாங்கள் நடத்திவரும் கொள்ளைகள் நின்று போகும் என்று பயப்படுகிறார்கள்.
எனவே பலவிதமான பரப்புரைகளை தங்கள் ஆதிக்கத்திற்குட்பட்ட ஊடகங்கள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் முடுக்கி விட்டுள்ளார்கள்.
= இஸ்லாம் வளர்ந்து விட்டால் பயங்கரவாதமும் அதிகரிக்கும்- அப்பாவிகள் கொலைகள் அதிகரிக்கும்.
= இஸ்லாமியர்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டால் உலக வளங்கள் இஸ்லாமியர் கைகளுக்கு சென்றுவிடும். அவை அழிவுக்காகவே பயன்படுத்தப்படும்.
= இஸ்லாமிய ஆதிக்கம் வளரவளர பொழுது போக்குகளும் போதைப்பொருட்களும் விபச்சார விடுதிகளும் தடைசெய்யப்படும். பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பன போன்ற பல பரப்புரைகளும் உலா வருகின்றன.
நாம் கவனிக்கவேண்டிய உண்மைகள்
மேலோட்டமாக காணும்போது இந்தப் பரப்புரைகள் உண்மையோ என்று பொதுமக்கள் எண்ணிவிட வாய்ப்புண்டு. கீழ்கண்டவற்றைக் கருத்திற்க் கொள்ளும்போதுதான் உண்மை விளங்கும்:
= இஸ்லாத்தின் வளர்ச்சி என்பது ஒரு இனம் சார்ந்த, இடம் சார்ந்த, நிறம் சார்ந்த, மொழி சார்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்ல. மாறாக, அது ஒரு கொள்கை – ஒழுக்கம் பேணும் வாழ்வியல் கொள்கையை – ஏற்று வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்பதே பொருள்.
= இஸ்லாத்தின் வளர்ச்சி என்பது இன்னொரு இனத்தை அல்லது கூட்டத்தை அழித்து உருவாவது அல்ல. மாறாக இஸ்லாமியர் அல்லாத மக்கள் இந்தக் கொள்கையை ஏற்பதனால் உருவாகும் மாற்றமே.
= மேற்படி தகவல்களில் பிறப்பு மற்றும் புலம்பெயர்தல் மூலம் உண்டாகக்கூடிய பெருக்கம் பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து உலகளாவ இஸ்லாத்தை விரும்பி ஏற்போரின் எண்ணிக்கை பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
= இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் என்பது இயற்கையான ஒன்று. எந்தவித அதிகப்படியான முயற்சியும் அவர்கள் மேற்கொள்வதில்லை. பருவ வயதடைந்தவர்களுக்குத் திருமணம், குடும்ப உறவுகள், குழந்தைப் பிறப்பு என்பவை இயற்கையான முறையில் பேணப்படுகின்றன.
புண்ணியம் வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றன. இஸ்லாமியர் அல்லாதவர்களிடம் அதேபோன்று அவை பேணப்படாததால் பிறப்புவிகிதம் குறைந்திருக்கிறது. ஒப்பீடு அடிப்படையிலேயே இஸ்லாமியர்களின் பிறப்பு விகிதம் உயர்ந்துள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது.
= இங்கு குறிப்பிடப்படும் புலம்பெயர்தல் (emigration) எவ்வாறு உண்டானது என்பதும் கவனிக்கவேண்டிய விடயமே. முற்காலத்தில் எண்ணைவள நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிப்பதற்காக இந்த ஐரோப்பிய நாடுகள் அவற்றைக் காலனி ஆதிக்கத்திற்குக் கீழ்கொண்டுவந்து ஆண்டதன் மூலம் உண்டானவையே.
= ஐரோப்பியர்களிடையே குடும்ப அமைப்பு சீர்குலைவுகள், திருமணம் செய்யாமலே பாலுறவு, குழந்தைப் பிறப்பில் ஆர்வமின்மை, கருக்கொலைகள், சிசுக்கொலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பிறப்பு விகிதம் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதனால் தொழிலாளர் பற்றாக்குறை நலிந்த நாடுகளிலிருந்து இறக்குமதி மூலமே நடைபெறுகிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
இஸ்லாமிய வளர்ச்சி மகிழ்ச்சிக்குரிய விஷயமா?
ஆம், நிச்சயமாக மகிழ்வுக்குரிய விடயமே. எப்போது?
வெறும் சில அரபு மொழிப் பெயர்களைக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட பாணியில் உடை உடுத்துபவர்களின் அல்லது பர்தா போன்ற ஆடை அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிலோ அல்லது தொப்பியும் தாடியும் வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலோ எந்தவித மாற்றமும் சமூகத்தில் நிகழப் போவது இல்லை.
உண்மையாக இஸ்லாம் என்ற கொள்கையைப் புரிந்துகொண்டு அதன்படி வாழும் மக்கள் உருவானால் மட்டுமே இஸ்லாத்தின் வளர்ச்சி மகிழ்ச்சியைக் கொண்டு வரும்.இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். அதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் என்பதாகும்.
அதாவது இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டு நல்லோழுக்கத்தோடு வாழும் போது தனி நபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூகத்திலும் அமைதிக்குப் பெயரே இஸ்லாம். அதிகமதிகம் மக்கள் இக்கொள்கையை ஏற்று வாழும்போது உலகில் பல மாற்றங்களும் புரட்சிகளும் ஏற்படும் என்பதில் ஐயமில்லையல்லவா? அவை உலக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியூட்டுபவையாக இருக்கும். உதாரணமாக ஒரு சிலவற்றை மட்டும் காண்போம்.
இஸ்லாம் உலகில் உண்மையாக மலரும்போது…
= மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் முறையான நம்பிக்கை விதைக்கப் படுவதால் பாவங்கள் விலகும். மனிதனை சுயக்கட்டுப்பாடு மிக்கவனாக கடமை உணர்வு மிக்கவனாக அது வார்த்தெடுக்கும். அநீதியும்,அக்கிரமங்களும் மோசடிகளும் அழிந்து அங்கே தர்மங்களும், நல்லறங்களும் நீதியும் நேர்மையும் பரஸ்பரம் விட்டுக்கொடுக்கும் பண்பும் நாட்டுவளங்களை நெறியோடு பங்கிட்டுக் கொள்ளும் மனப்பாங்கும் மக்களிடையே வளர்ந்து வரும்.
= மனித உள்ளங்களில் உண்மையான இறை உணர்வும் பக்தியும் மறுமை உணர்வும் விதைக்கப் படுவதாலும் அவனோடு நேரடித் தொடர்பு ஏற்படுவதாலும் தனி நபர் வாழ்வில் தன்னம்பிக்கை, சுயமரியாதை உணர்வு, வீரம், பாவங்களில் இருந்து விலகியிருத்தல், தியாகமனப்பான்மை, பொறுமை, பிற உயிர்களிடம் அன்பு, பணிவு போன்ற நற்பண்புகள் மக்களின் வாழ்வில் தழைக்கும்.
= பொய்க் கடவுளர்களும் போலி தெய்வங்களும் இடைத்தரகர்களும் ஒழிவதால் கடவுளின் பெயரால் சுரண்டப்படுதலும் கொள்ளைகளும் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கவழக்கங்களும் வீண்சடங்குகளும் ஒழியும். பொருட்செலவின்றி நேரடியாக இறைவனை வழிபடுவார்கள். இந்த நிமிடம் வரையும் அயராமல் நடைபெறும் பகல் கொள்ளைகள் முடிவுக்கு வரும். தொடர்ந்து நாட்டில் செல்வ வளம் செழித்தோங்கும், ஆக்கபூர்வமான வழிகளில் நாட்டின் செல்வம் செலவிடப்படும்.
= ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை மேலோங்க ஜாதிகளும் தீண்டாமையும் ஏற்றதாழ்வுகளும் இனவெறியும் நிறவெறியும் ஒழியும். இனத்துக்கு ஒரு நீதி, நாட்டுக்கு ஒரு நீதி மாநிலத்துக்கு ஒரு நீதி என்னும் நிலைமாறி அனைத்து மக்களுக்கும் ஒரே நீதி என்பது நடைமுறைக்கு வரும். மனித சமத்துவமும் சகோதரத்துவமும் சுயமரியாதையும் பரஸ்பர அன்பும் மலரும்.
= சுரண்டலுக்கும் பதுக்கலுக்கும் இலஞ்சம் ஊழல் போன்றவற்றுக்கும் வாய்ப்பு அளிக்காத பொருளாதார திட்டங்கள் நடைமுறைக்கு வரும். நாட்டின் செல்வம் செல்வந்தர்களுக்கு இடையில் மட்டுமல்லாமல் அனைவரிடையேயும் புழங்கும் வண்ணம் பொருளாதாரம் சீரமைக்கப்படும்.
= செல்வந்தர்களிடம் நீதமான முறையில் ஜகாத்(ஏழைவரி) தவறாமல் வசூலிக்கப்படும். அது ஏழைகளைத் தேடிக் கண்டறிந்து அவர்களுக்கே விநியோகம் செய்யப்படும். இன்று நாட்டில் நிலவிலுள்ள 40% வருமான வரி விதிப்பின் விளைவாக உண்டாகும் கருப்புப்பணம், சுவிஸ் வங்கிகளில் பதுக்குதல் போன்றவை ஒழிந்து உள்நாட்டிலேயே அந்த பணம் புழங்க வழிவகை உண்டாகும். (செல்வந்தர்கள் இறைப் பொருத்ததிற்காக தானாகவே முன்வந்து ஜகாத்தை வழங்குவார்கள் என்பது வேறு விஷயம்) .
= வட்டியில்லா பொருளாதாரம் நடைமுறைக்கு வரும். வெற்றுப்பணம் குட்டிபோடுவதும் வங்கிகள் வெற்றுக்காகிதங்களை புழக்கத்தில் விட்டு லாபம் சம்பாதிப்பதும் நிற்கும். அதனால் பணத்துக்கு உண்மையான மதிப்பு உண்டாகி, பணவீக்கம், ஊக வாணிபம், மோசடிகள் ஒழிக்கப்படும். பணக்காரர்களை மேலும் பெரிய பணமுதலைகளாகவும் ஏழைகளை பரம ஏழைகளாகவும் மாற்றும் இன்றைய பொருளாதார அமைப்பு மாறி முனைவோர் அனைவருக்கும் தக்க வாய்ப்பளிக்கும் திட்டங்கள் அமுலுக்கு வரும்.
= பகுத்தறியும் பண்பு தூண்டப்படுவதால் அங்கு அறியாமை அகன்று மனிதகுலத்துக்கு பயனுள்ள கல்வியும் அறிவியலும் வளரும். இறையச்சத்துடன் இணைந்து கற்கப்படும் கல்வியும் அறிவியலும் மனித இனத்தை அழிக்கவோ அதன்மேல் ஆதிக்கம் செலுத்தவோ பயன்படுத்தப்பட மாட்டாது. மாறாக ஆக்கபூர்வமான வழிகளில் பயன்படுத்தப்படும். இறைவனின் வல்லமையையும் மறுமையின் உள்ளமையையும் உணரவும் இறையச்சத்தை வளர்க்கவும் பயன்படும்.
= பகைமைகளும் மோசடிகளும் அகன்று போவதால் பாதுகாப்பும் அமைதியும் சூழ ஒரு புத்துலகு பூத்து வரும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கோட்பாடு உண்மையாகப் பின்பற்றப்படும். நாடுகளைப் பிரித்து நிற்கும் எல்லைகள் மறையும், நாடுகளின் மூன்றில் ஒரு பங்கு பொருளாதாரத்தை விழுங்கி நிற்கும் இராணுவங்கள் மறையும்.
= இறை நேசத்துக்காகவும் மறுமை இன்பங்களுக்காகவும் வேண்டி எதையும் தியாகம் செய்யும் தன்னலமில்லாத சான்றோர்களால் அவ்வுலகு நிறைந்திருக்கும்!