புகழை விரும்பாத இயேசுவும் முஹம்மது நபிகளாரும்!
இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது காலத்தில் அவரது ஆண்குழந்தை இப்ராஹீம் மரணம் அடைந்த அதே நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையொட்டி மக்கள் இப்ராஹீமின் இறப்புக்காகத்தான் கிரகணம் ஏற்பட்டது” என்று பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், “சூரியனும் சந்திரனும் இறைவனின் சான்றுகள் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை.எனவே, அவற்றை நீங்கள் கண்டால் இறைவனிடம் பிரார்த்தியுங்கள்;தொழுங்கள்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: நபித்தோழர் முஃகீரா பின் ஷுஅபா (ரலி), நூல்: புகாரி 1043
நபியவர்களின் மகன் மரணித்த நேரமும், கிரகணம் தோன்றிய நேரமும் ஒன்றாக இருந்ததினால் மக்கள் நபியின் மகனின் மரணத்திற்குத்தான் கிரகணம் தோன்றியது என கூறிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது நபியவர்கள் தனது ஆழ்ந்த துக்க வேளையிலும் அதைப் பொருட்படுத்தாது மக்களிடம் வந்து ‘கிரகணம் என்பது யாருடைய மரணத்துக்காகவும்நிகழ்வதில்லை, அது இறைவனின் ஏற்பாடு’ என்பதை உணர்த்தி அவர்களின் மூடநம்பிக்கையை துடைந்தெறிந்தார்கள்.
இன்று கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள் பலர், இயற்கை நிகழ்வுகளைக் கூடத் தங்கள் அற்புதம் என்று சொந்தம் கொண்டாடுவதைப் பார்க்கிறோம்.
“நபியின் மகன் இறந்து விட்டான்; அதனால் கிரகணம் பிடித்து விட்டது” என்று மக்களேபேசிக் கொள்ளும்போது அதைக்கண்டு பெருமிதம் கொள்ளவோ தன புகழை உயர்த்திக்கொள்ளவோ செய்யவில்லை நபிகளார்.
இதை அற்புதம் என்று வாதிடுவதற்கு எல்லாவாய்ப்புகளும் இருந்தும், மக்களே இதை அற்புதம் என்று சொன்ன போதும் நபியவர்கள் உண்மையான இறைத் தூதர் என்பதால் அவ்வாறு போலியான தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
அவ்வாறுதான் இறைத்தூதர்கள் யாருமே இயற்கையாக நிகழும் அற்புதங்களாயினும் சரி, இறைவனின் அனுமதி கொண்டு அவர்களே நிகழ்த்தும் அற்புதங்களாயினும் சரி, அவற்றைக் காட்டி தங்களுக்கு தெய்வீகத் தன்மை உள்ளதாக வாதிடவில்லை. இவற்றை நிகழ்த்துபவன் இறைவனே என்று கூறி அவனுக்கு நன்றி கூறி அவனுக்கு கட்டுப்பட்டு வாழுமாறு மக்களை அழைத்தார்கள். அவ்வாறு கட்டுப்பட்டு வாழுதலுக்கு அரபு மொழியில் ‘இஸ்லாம்’ என்று வழங்கப்படுகிறது.
நபிகளாருக்கு முன்னர் வந்த இறைத்தூதரான இயேசு நாதரும் (அவர்மீது இறைசாந்தி உண்டாவதாக) தன் வாழ்நாளில் பல அற்புதங்களை செய்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது:
இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (இயேசுவை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) ‘நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது’ (என்று கூறினார்). (அல்-குர்ஆன் 3:49)
இயேசு அவர்களின் பிறப்பும் இவ்வுலகிலிருந்து அவரது மறைவும் எல்லாம் அற்புதமே! ஆயினும் ஒருபோதும் தனக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகவோ தன்னை வணங்கச் சொல்லியோ இயேசு மக்களுக்குக் கூறவில்லை என்பதை ஆராய்வோர் அறியலாம்!
=================
இஸ்லாம் என்றால் என்ன?
https://www.quranmalar.com/2012/10/blog-post_25.html