Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்? - Thiru Quran Malar

இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்?

Share this Article

 ‘இறைவன்  இவ்வுலக வாழ்வை ஒரு பரீட்சைக்களமாக அமைத்திருக்கிறான்.  இந்தப் பரீட்சையில் யார் அவனுக்குக் கீழ்படிந்து தங்கள் ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்தி வாழ்கின்றார்களோ அவர்களுக்குப் பரிசாக சொர்க்கத்தை அவன் வழங்க உள்ளான். 

யார் கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கின்றார்களோ அவர்களுக்கு நரகத்தை தண்டனையாக வழங்கவுள்ளான்.’ என்றெல்லாம் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் போதிப்பதை அறிவோம். இதை கேள்விப்படும்போது கீழ்கண்ட சந்தேகங்கள் மனிதர்களிடம் எழுவது இயல்பு:

நாமே சற்று சிந்தித்தால் இக்கேள்விகளுக்கான விடைகள் நாமே பெறலாம்.

கேள்வி:  இறைவன் ஏன் பரீட்சிக்க வேண்டும்? அவன்தான் அனைத்தையும் அறிபவனாயிற்றே… – குறிப்பாக முக்காலத்தையும் – அறியக்கூடிய அவன்  நேரடியாகவே இன்ன மனிதன் பரீட்சையில் ஜெயிப்பானா அல்லது தோற்பானா என்பதை முன்கூட்டியே அறிய முடியுமே…. அந்த அடிப்படையில் அந்த மனிதனை சொர்கத்திலோ அல்லது நரகத்திலோ போடலாமே?

பதில்: அதற்கு இறைவனுக்கு எந்த அடிப்படையும் தேவை இல்லை. அவன் விரும்பியதை செய்துகொள்ள யார் தயவும் தேவைப்படாதவன். அவன் அப்படி உங்களை சொர்க்கத்திலோ நரகத்திலோ போட்டாலும் நீங்கள் திருப்பிக் கேட்கவும்  முடியாது என்பதே உண்மை.

உதாரணமாக உங்களை அப்படி நரகத்தில் நேரடியாகப் போட்டால் என்ன செய்வீர்கள்? எதற்காக என்னை தண்டிக்கிறாய்? நான் என்ன செய்தேன் என்று கேட்பீர்களா இல்லையா?

கேள்வி: சரி, எதற்கு நரகம்? நாம் கஷ்டப்படுவதைப் பார்த்து ரசிப்பது அவன் விருப்பமா? 

பதில்: அப்படிப்பட்டவனாக இருந்தால் அவன் அனைவரையும் நேரடியாக  நரகத்துக்கு அனுப்பி இருப்பானே? அப்போதும் அவனை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.

கேள்வி: சரி, நேரடியாக சொர்க்கத்தில் போட்டால் இறைவனுக்கு என்ன நஷ்டம்?

பதில்: அவன் நம்மை நரகத்தில் போட்டாலும் சொர்க்கத்தில் போட்டாலும் அவனைத் திருப்பிக் கேட்க முடியாது. நமக்கு விளக்கம் சொல்லிகொண்டிருக்க வேண்டிய அவசியமும் அவனுக்குக் கிடையாது.ஆனால் இறைவன் மிகக் கருணையாளன். நம்மை- அதாவது முதல் மனிதரையும் அவரது மனைவியையும் – படைத்ததன் பின்னர் அவர்களை சொர்க்கத்தில்தான் குடியமர்த்தினான் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். பைபிளும் குர்ஆனும் அவ்வாறுதான் சொல்கின்றன.

ஆனால் சொர்க்கத்தின் அருமையை அதன் விலைமதிப்பை உணராத அவர்கள் சில தவறுகளை செய்தார்கள். அதன் காரணமாக இறைவன் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினான். இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய விடயம் இதுதான்…

பசித்தவனுக்குத்தான் உணவின் அருமையும் தாகம் உள்ளவனுக்குத்தான் நீரின் அருமையும் தெரியும். வெயிலில் சென்று வந்தவனுக்குத் தான் நிழலின் அருமை தெரியும். எனவே சொர்க்கத்தை இலவசமாகக் கொடுக்காமல் அதை சிறிது கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பொருளாக அவன் ஆக்கிவிட்டான்.

 சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நமது ஆதி தந்தையும் தாயும் நாம் இன்று வாழும் பூமிக்கு அனுப்பப் பட்டார்கள். இந்த நிகழ்வு பற்றி திருக்குர்ஆனில் இறைவன் கூறுவதை சுருக்கமாகக் காண்போம்: சொர்க்கத்தில் இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினர். இறுதி இறைவேதம் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

 7:24-25 ‘(இங்கிருந்து) இறங்கி விடுங்கள்! உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவர்களாவீர். உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன’ என்று கூறினான். ‘அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள்’ என்றும் கூறினான்.

2:38. ‘இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ என்று கூறினோம்.

2:39. ‘(நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்’ (என்றும் கூறினோம்.) 

இதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான வரலாறு! ஸ்ரீ  இங்கு நேர்வழி என்பது இறைவனின் தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் நமக்கு வருகிறது. இந்த பரீட்சைக்களத்தில் வெறும் நேர்வழி  மட்டும்   இருந்து  அதற்கு  எதிரான  ஒன்று இல்லாவிட்டால் அந்தப் பரீட்சையில் அர்த்தம் இருக்காது. அதனால்தான் ஷைத்தான் என்ற ஒரு தீய சக்திக்கு இறைவன் அனுமதி கொடுத்து அவனுக்கு சில ஆற்றல்களையும் வழங்கி மனிதனை வழிகெடுக்க அனுமதியும் கொடுத்துள்ளான்.

யார் அவனைப் பின்பற்றுகிறார்களோ அவன் தூண்டும் சஞ்சலங்களுக்கு இரையாகின்றார்களோ அவர்கள் இந்தப் பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். மறுமையில் நரகத்தை அடைகிறார்கள்.  ஆக, இந்த பரீட்சைக் களத்தில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பரீட்சையை முடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட கெடு நிச்சயிக்கப் பட்டுள்ளது. அநீதி, அக்கிரமங்கள் நடப்பதற்கும் இதுதான் இடம். அவற்றை எதிர்த்துப் போராட வாய்ப்பளிப்பதற்கும் இதுதான் இடம்!

இங்கு இறைவன் அதர்மத்தை சிலவேளைகளில் நல்லோர்களின் கரங்கள் கொண்டு அழிக்கிறான். சிலவேளைகளில் தனது தண்டனைகளான இயற்கை சீற்றங்களைக் கொண்டு அழிக்கிறான். எதை எப்போது எப்படி அழிப்பது என்பது அவன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 16:61)

Share this Article

Add a Comment

Your email address will not be published.