Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு? - Thiru Quran Malar

இறைவனை வணங்க இடைத்தரகர் எதற்கு?

Share this Article

இன்றைய அவசர உலகில் அமைதியை இழந்து தவிக்கும் மனிதன் அந்த அமைதியைப் பெற வேண்டி எல்லாக் குறுக்கு வழிகளையும் தேடி அலைவதை நாம் இன்று கண்டு வருகிறோம். மனிதனின் இந்த கண்மூடித்தனமான அலைச்சலை முதலீடாகக் கொண்டு அவர்களது உடமைகளைக் கொள்ளை அடித்து வயிறு வளர்க்க இடைத்தரகர்கள் என்னும் வல்லூறுகள் கூட்டம் எப்போதும் காத்திருக்கிறது.

அக்கயவர்களின் வஞ்சனையால் மீண்டும் மீண்டும் மக்கள் பாதிக்கப் பட்டாலும் அவற்றிலிருந்து அவர்கள் பாடம் பெறாமல் இருப்பதுதான் மிகவும் வேதனைக்குரியது.  அவர்களின் உண்மைக்கு புறம்பான போதனைகளையும் மனித இயற்க்கைக்கு மாறான தத்துவங்களையும் வேத வாக்குகளாக நம்பி மோசம் போகின்றனர்.இந்நிலை மாற வழி உண்டா?

ஆம், நிச்சயமாக உண்டு, மாற விழைவோருக்கு வழி உண்டு! இந்நிலை மாற வேண்டுமானால் மக்கள் சில அடிப்படை உண்மைகளை மனமுரண்டு பிடிக்காமல் ஒப்பு கொண்டேயாக வேண்டும்.

  • முதலாவதாக நம்மையும் நாம் வாழும் உலகத்தையும் படைத்தவன் ஒருவன் உள்ளான்.அவன் மட்டுமே நம் வணக்கத்திற்கு உரிய இறைவன். அவன் அல்லாத அனைத்துமே படைப்பினங்கள். அவற்றுக்கு நம் வணக்கத்தை ஏற்கும் சக்தியோ பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் ஆற்றலோ கிடையாது.
  • இரண்டாவதாக, நாம் அவனால் படைக்கப் பட்டவர்கள். அவனது அடிமைகள்.அவன் போட்ட பிச்சையில் வாழுபவர்கள். நமது பிறப்பும் வாழ்வும் இறப்பும் அவனது ஆதிபத்தியத்துக்கு உட்பட்டவை. நமக்கு வழங்கப்பட்ட உடமைகளும் செல்வங்களும் கூடினாலும் குறைந்தாலும் எந்நிலையிலும் இந்த உண்மையை மறந்து விடக்கூடாது.
  • மூன்றாவதாக, நாம் இன்று வாழும் வாழ்க்கையானது நிலையற்றது. குறுகியது. மரணம் வந்து விட்டால் நம்மோடு இன்று ஒட்டிக் கொண்டிருக்கும் உடலையும்  உடமைகளையும்  உறவுகளையும் விட்டுச் சென்றேயாக வேண்டும். இவை நமக்கு தற்காலிகமாக தரப்படும் அருட்கொடைகள்.. நம் குறுகிய வாழ்நாளில் இவற்றை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்று பரீட்சிப்பதற்க்காக இறைவன் இவற்றைத் தந்துள்ளான்.
  • அடுத்ததாக. இப்பரீட்சையில் வெற்றி அடைய வேண்டுமானால் இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி கூர்ந்து அவனுக்குப் பொருத்தமான காரியங்களைச் செய்ய வேண்டும். அவன் விலக்கிய காரியங்களைச் செய்தால் அது அவனுக்கு செய்யும் நன்றி கேடாகும். அதனால் அவனது கோபத்துக்கும் தண்டனைக்கும் ஆளாக நேரிடும்.

 இவ்வுண்மைகளை வாழ்வின் அடிப்படைகளாக ஏற்று வாழ மனிதன் தயாராகி விட்டால் மீண்டும் மனித வாழ்வு வளம் பெறும். இதை போதிக்கத்தான் எல்லாக் காலங்களிலும் இறைவன் தன தூதர்களையும் வேதங்களையும் அனுப்பினான்.

யார் அந்த இறைத் தூதர்களையும் இறைவேதங்களையும் விட்டு விட்டு ஆன்மீக வேடமிட்டு வரும் போலியான இடைத்தரகர்களையும்  மனித கற்பனைகளையும் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு அமைதி இன்மையும் ஏமாற்றமும் மட்டுமல்ல, அத்துடன் இவ்வாழ்க்கைப் பரீட்சையில் தோல்வியுமே மிஞ்சும்.இத்தோல்வி சாதாரணமானது அல்ல!

அது மறுமையில் நம்மை கொழுந்து விட்டு எரியும் நரகத்தீயில் தள்ளிவிடும் என்பதை நாம் உணர வேண்டும்.
ஆனால் அன்பர்களே, இறைமார்க்கம் என்பது எளிதானது. கோணல்கள் அற்றது. மனித இயற்கையோடு இயைந்தது. படைத்த இறைவனோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்வது. 

இங்கு இடைத்தரகளுக்கோ, வீணான சடங்கு சம்பிரதாயங்களுக்கோ செலவுகளுக்கோ இடமில்லை. மூடநம்பிக்கைகளுக்கோ சுரண்டல்களுக்கோ வாய்ப்புகள் கொடாது உண்மை இறைமார்க்கம்.ஆம், பகுத்தறிவு கொண்டு இறைவனை அறியச் சொல்கிறது திருக்குரான். இறைவன் எப்படிப்பட்டவன்? அவனது தன்மைகள் என்ன?இதோ திருமறை தெளிவு படுத்துகிறது.

” (நபியே!) நீர் சொல்வீராக! அவனே அல்லாஹ், ஒரே ஒருவன். அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் யாரையும் பெறவும் இல்லை, அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அவனைப்போல் எவரும்,எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112:1-4)  

(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்)

அப்படிப்பட்ட தன்னிகரற்ற இறைவனை நேரடியாக வணங்குங்கள், உங்களுக்கும் இறைவனுக்கும் இடையே எந்த இடைத்தரகர்களும் தேவை இல்லை, சடங்கு சம்பிரதாயங்களும் தேவை இல்லை. இந்த அடிப்படைப் பாடத்தை மக்களுக்கு கற்பிக்கத்தான் எல்லாக் காலங்களிலும் எல்லா சமூகங்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்.

அவர்கள் அனைவரும் இறைவனை எளிமையாக, நேரடியாக வணங்குவது எப்படி என்பதை தத்தமது மக்களுக்கு கற்பித்துக் கொடுத்தார்கள். அந்த வரிசையில் இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்.திருக்குர்ஆனில் இறைவன் கூறுகின்றான்:

* நாம் மனிதனைப் படைத்தோம். அவனது உள்ளத்தில் எழுகின்ற ஊசலாட்டங்களைக்கூட நாம் அறிகின்றோம். அவனது பிடரி நரம்பைவிடவும் அதிகமாக நாம் அவனிடம் நெருக்கமாயிருக்கின்றோம”  (திருக்குர்ஆன்   50:16)*

(நபியே!) என்னுடைய அடிமைகள் என்னைக் குறித்து உம்மிடம் கேட்பார்களானால், “”நிச்சயமாக நான் (அவர்களுக்கு) அருகிலேயே இருக்கின்றேன். என்னை எவரேனும் அழைத்தால், அவ்வாறு அழைப்பவனுடைய அழைப்புக்கு மறுமொழி சொல்கின்றேன்”  (திருக்குர்ஆன் 2:186)

ஆம், இறைவனை நெருங்குவதற்கு இடைத்தரகர்கள் தேவை இல்லை என்பதைத் தெளிவு படுத்த வேறு எந்த ஆதாரம் வேண்டும்?இறைவனை நெருங்குவதற்குரிய எளிய வழி இதோ:

“எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும். அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணையாக்காதிருக்கட்டும்!” (திருக்குர்ஆன் 18:110)

இறைவனிடம் இவ்வாறு இறைஞ்சுமாறு அவனே கற்றுக் கொடுக்கிறான் :
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ தான் எல்லாவற்றையும் செவியேற்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய். உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம்” (திருக்குர்ஆன்  2: 127; 1:4)

Share this Article

Add a Comment

Your email address will not be published.