Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இளம் மனங்களில் இறையச்சம் விதை! - Thiru Quran Malar

இளம் மனங்களில் இறையச்சம் விதை!

Share this Article

மனிதன் பண்புள்ளவனாக வளர்வதற்கு தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வும் அவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் என்ற உணர்வும் மிகமிக அவசியம். அதுவே இறையச்சம் எனப்படும்.. இன்று கற்கும் கல்வி மனிதனுக்கும் மனிதகுலத்துக்கும் பயனுள்ளதாகவும் தீங்கு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டுமானால் மாணவ இதயங்களில் இறையச்சம் கட்டாயமாக விதைக்கப் பட வேண்டும். அதுதான் அவர்களை கல்வி கற்கும்போதும் கற்ற பின்னும் நெறிமிக்கவர்களாக வார்த்தெடுக்கும். இறையச்சம் மனதில் நுழைந்து விட்டால் அம்மனிதனை மற்ற எந்த அச்சமும் தீண்டுவதில்லை. அதனால் அவனுக்கு சமூகத்தில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் துணிவு வந்துவிடுகிறது.

இறையச்சத்தை இளமனங்களில் எவ்வாறு விதைப்பது?

கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத  தெளிவான கொள்கை போதிக்கப்பட்டால்  மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு இறைமார்க்கத்தில்  ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது. 

கடவுளும் மறுமையும் கண்ணால் கண்டு நம்பவேண்டிய விஷயங்கள் அல்ல. அவற்றைப் பகுத்துதான் அறிய வேண்டும். படைத்தவனின் உள்ளமையைப் பற்றியும் அவனது ஆற்றல்களையும் பற்றி விளங்க வைக்க   அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கின்ற அன்றாட இயற்கை  நிகழ்வுகளின் பக்கம் நம் பிள்ளைகளின் கவனத்தைத்  சற்று  திருப்பினாலே  போதும்.  அவ்வாறுதான் ஆராயத் தூண்டுகிறது இறைவனின் வேதம்.

 2:164நிச்சயமாக வானங்களையும், பூமியையும்  படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (இறைவனுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.

(இவ்வுலகைப் படத்துப் பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று கூறப்படும். ‘வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன்’ என்பது இவ்வார்த்தையின் பொருள். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது)

42:11வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்

16:12இன்னும் அவனே இரவையும், பகலையும்,  சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன – நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.

இறைவனின் உள்ளமையை உணரச் செய்தபின் இறைவன் எப்படிப்பட்டவன் என்பதையும் அவனது வல்லமைகளையும் போதிக்க வேண்டும்.திருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றிக் கூறுகிறான் :

112:1-4 நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” 

அதாவது இறைவன் என்பவன் படைப்பினங்களைப் போன்றவன் அல்ல, அவன் ஒரே ஒருவன்தான், அவன் தனித்தவன், இணை துணையோ தாய் தந்தையரோ பிள்ளைகளோ இல்லாதவன்,. ஆதியும் அந்தமும் இல்லாதவன் எப்போதும் உள்ளவன். சர்வவல்லமையும் சர்வஞானமும் கொண்டவன் மற்றும் தன்னிகரில்லாதவன் என்ற உண்மையை பிஞ்சு மனங்களுக்குள் ஆழமாக விதைத்தபின் அப்படிப்பட்ட இறைவனை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வணங்கக் கற்பிக்க வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் இறைவன் அல்லாதவற்றை கடவுள் என்று பாவிப்பதோ உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று அழைப்பதோ கூடாது என்பதை கட்டாயமாக வலியுறுத்த வேண்டும்.முன்னோர்களின் வழக்கம் அல்லது நாட்டுநடப்பு என்றெல்லாம் சொல்லி இறைவனுக்கு இணைவைக்கும் செயலை அனுமதித்தால் அது மனித மனங்களில் இருந்து இறையச்சத்தையே துடைத்து எறிந்துவிடும்.

உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுளாக பாவித்து வணங்கிக் கொண்டிருக்கும் மக்களிடம் இறைவனைப் பற்றிய அச்சமே துளியும் உண்டாவதில்லை. அதன் விளைவாக எப்பாவத்தையும் துணிந்து செய்து விடுகிறார்கள்.குழந்தைகளும் பாமரர்களும் கடவுளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சிலைகளையும் உருவங்களையும் கற்பிக்கிறோம் என்பார் சிலர். ஆனால் திருக்குர்ஆன் மிக எளிதாக இந்தப் பிரச்சினையைத்  தீர்க்க வழிகாட்டுகிறது:

43:9(நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும்,  பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.

 எந்த ஒரு மனிதனிடமும் இக்கேள்வியைக் கேட்டால் அவனிடமிருந்து இயற்கையாகவே வரக்கூடிய பதில் இது. அவரவர் மொழிகளில் அந்த உண்மை இறைவனை  என்ன பெயரில்  குறிப்பிடுவார்களோ அதைத்தான் அவர்கள் பதிலாகச் சொல்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்:

43:87மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?

மறுமை நம்பிக்கை

இறையச்சம் முழுமையாக விதைக்கப்பட வேண்டுமானால் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் மறுமை நம்பிக்கையும் போதிக்கப்பட வேண்டும் அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப் பட்டு பிறகு மீணடும் அனைத்து மனிதர்களும் இறுதித் தீர்ப்புநாள் அன்று எழுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர்.

அன்று முதல்தான் நமது நிரந்தர வாழ்வு ஆரம்பமாகிறது. பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும் என்ற இந்த உண்மையையும் கண்மூடிக் கொண்டு நம்பாமல் பகுத்தறிவு கொண்டு சிந்தித்து உணருமாறு தூண்டுகிறது திருமறை. மறுமை நம்பிக்கையை மக்களுக்கு போதிக்க இறைவனின் வசனங்களுக்கு இணையான ஒன்று இவ்வுலகில் இல்லை.

3:185     ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

23:115“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”  

21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

மறுமையில் மீண்டும் உயிர்பிக்கப்பட்டு மனிதன் சொர்க்கத்திற்கோ அல்லது நரகத்திற்கோ அனுப்பப் படுவான் எனும் உண்மையை மருப்போரைப் பார்த்து இறைவன் திருக்குர்ஆனில் பின்வருமாறு கேட்கிறான்:

46:33வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

மீணடும் நாம் விசாரணைக்காக எழுப்பபடுவோம் எனபதை நம்பாதவர்களைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:

36:77-82.. மனிதனை விந்திலிருந்து படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவனோ பகிரங்கமாக எதிர் வாதம் புரிகிறான். அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான். ”எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்? என்று கேட்கிறான் ”முதல் தடவை இதை யார் படைத்தானோ அவன் இதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்’ என்று கூறுவீராக!. அவன் பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை ஏற்படுத்தினான். அதிலிருந்து நீங்கள் தீ மூட்டுகிறீர்கள்.  வானங்களையும்  பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களைப் படைக்க சக்தி பெற்றவன் இல்லையா? ஆம்! அவன் மிகப் பெரிய படைப்பாளன்; அறிந்தவன். ஏதேனும் ஒரு பொருளை அவன் நாடும் போது ‘ஆகு’ என்று கூறுவதே அவனது நிலை. உடனே அது ஆகி விடும்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.