Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறையச்சம் கற்பழிப்பைத் தடுக்குமா? - Thiru Quran Malar

இறையச்சம் கற்பழிப்பைத் தடுக்குமா?

Share this Article

பெண்கள் மீது ஆதிக்கம் படைத்தோர் நடத்தும் கற்பழிப்புகளும் சரி,  குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் கற்பழிப்புகளும் சரி, இரு மன ஒப்புதலோடு நடக்கும் விபச்சாரமும் சரி – சூழ்நிலைகள் முழுமையாக சாதகமானதாக இருக்கும்போது இக்குற்றத்தில் ஈடுபடுவோரைத் தடுப்பது என்பது அசாத்தியமான செயலே!.
நாளொன்றுக்கு நம் நாட்டில் சராசரி  600 பெண்கள் கற்பழிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது வேதனைக்குரிய உண்மை!

கற்பழிப்பு என்பது நடவாமல் தடுப்பதற்கு தீர்வைக் கூற முற்பட்ட சிலர் தன்னைக் கற்பழிக்க முற்படும் ஆணிடம் அண்ணன்- தங்கை உறவை நினைவூட்டி கற்பழிப்பைத் தடுக்க முயற்சிக்கலாம் என்றும் கூறினார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வெளியான வீடியோ துணுக்குகளில் கூட பாதிக்கப் பட்ட பெண், “அண்ணா அடிக்காதீங்கண்ணா, நானே கழட்டறேன்…” என்றுதான் கூறிக் கதறுகிறார்.

ஆனால் அது அவளைக் காப்பாற்ற வில்லை என்றே அறிகிறோம்.குற்றவாளியிடம் திடீர் மனமாற்றத்தை உண்டாக்க எதுவுமே சக்தியுள்ளவை அல்ல என்பதை அறிகிறோம். 

மனமாற்றத்தை உண்டாக்கவல்ல ஒரு வழி 

கற்பழிக்கும் வக்கிரத்தோடு உள்ள ஒருவனை அதிலிருந்து தடுக்க  அவனுக்கு அதிர்ச்சியூட்டக்கூடிய மனமாற்றம் ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே அது சாத்தியம். இறையச்சத்திற்கு மட்டுமே அந்த அதிர்ச்சி வைத்தியத்தை நிகழ்த்தும் ஆற்றல் உள்ளது என்பதைக் கீழ்கண்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.

‘#இறைவன் என்னைக் கண்காணிக்கிறான், அவனிடம் எனது நடவடிக்கைகள் பதிவாகின்றன, என் குற்றத்திற்காக இறைவனால் தண்டிக்கப்படுவேன்’ என்ற பொறுப்புர்ணர்வுக்கே #இறையச்சம் என்று கூறப்படும். இந்த உணர்வு  குற்றவாளிக்கு மேலிட்டால் மட்டுமே அவன் குற்றத்திலிருந்து விலக வாய்ப்புள்ளது.

அவ்வாறு நடந்த சம்பவங்களில் சில கீழே: 

குகையில் சிக்கிக்கொண்ட மூவர்

நபிகளாருக்கு முன் வாழ்ந்த சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை #நபிகளார் விவரித்தார்கள். அதன் ஒரு பகுதி இது:

= மூன்று மனிதர்கள் மழைக்காக ஒரு குகையில் தஞ்சம் புகுந்தபோது அந்த குகை வாசலுக்கு முன் ஒரு பெரிய பாறாங்கல் வந்து விழுந்து அடைத்துக் கொண்டது. அதனால் மூவரும் குகையிலிருந்து வெளியேற முடியாத சூழல் உண்டானது. அப்போது அவர்களில் ஒருவர் கூறினார்:

‘நாம் ஒவ்வொருவரும் கடந்த காலத்தில் செய்த நற்செயல் ஒன்றை சொல்லி இறைவனிடம் பிரார்த்திப்போம். அதனால் #இறைவன் இந்தப் பாறையை அகற்றி நம்மை விடுதலை செய்யக்கூடும்’ என்றார். அப்போது அவர்களில் ஒருவர் கூறியதைப் பாருங்கள்:

“இறைவா! எனக்குச் சிறிய தந்தையின் மகள் இருந்தாள். அவள் எனக்கு மிகப் பிரியமானவளாக இருந்தாள். அவளை தவறாக பயன்படுத்த நான் விரும்பினேன். என் விருப்பத்திற்கு இணங்க மறுத்தவளாக என்னிடமிருந்து விலகி விட்டாள்.

பிறகு பஞ்சம் ஏற்பட்ட ஆண்டுகளில் ஒரு ஆண்டின் போது அவள் என்னிடம் உதவி கேட்டு வந்தாள். நிபந்தனையின் பேரில் அவளிடம் நூற்றி இருபது தீனார்களைக் கொடுத்தேன். அவளும் சம்மதித்தாள். அவளை நான் நெருங்கினேன்.

அப்போது அவள், “அல்லாஹ்வை அஞ்சுவீராக! உரிமையின்றி முத்திரையை நீக்கிவிடாதீர்” என்று கூறினாள். அவள் எனக்கு. மற்றவர்களை விட மிகப் பிரியமானவளாக இருந்தும், நான் அவளை விட்டும் தவறு செய்யாமல் நீங்கிவிட்டேன்.

அவளுக்கு நான் கொடுத்த தங்கக் காசுகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை. இறைவா! உன் திருப்தியை நாடி இதை நான் செய்திருந்தால், இந்தச் சிரமத்தை எங்களை விட்டும் நீக்குவாயாக!” என்று அவர் பிரார்த்தித்தார். அவர்களால் வெளியே வர இயலாத அளவுக்கு பாறை இன்னும் சற்று விலகியது. வெளி காற்றும் உள்ளே வந்தது (நூல்: புகாரி)

மேற்படி நிகழ்வில் கற்பழிக்கப் பட இருந்த பெண் இறைவனை நினைவூட்டி தன்னைத் தற்காத்துக்கொண்டதை நாம் அறியமுடிகிறது.

காமுகனிடம் இருந்து தற்காத்துக் கொண்ட சவுதி சிறுமி

சில வருடங்களுக்கு முன் சவுதி அராபியாவில் நடந்த நிகழ்வு இது. அன்று சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்பட்டது. சவுதி சிறுமி ஒருத்தியை ஒரு இளைஞன் காரில் ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றான். அவளை ஒரு பூட்டப்பட்ட வீட்டிற்குள் வைத்துக் கொண்டு கற்பழிக்க முயன்றான்.

அப்போது திருக்குர்ஆனை நன்கு மனனம் செய்திருந்த அந்த சிறுமி இடைவிடாது திருக்குர்ஆன் வசனங்களை ஓத ஆரம்பித்தாள். பலமுறை அவளை அணுக நினைத்தும் அவனால் மேற்கொண்டு அவளைத் தொடக்கூட முடியவில்லை. இறுதியில் அவளை எங்கிருந்து கடத்தினானோ அதே இடத்துக்குக் கொண்டுவந்து விட்டுச் சென்றான்.

மகளிருக்கு அன்னை மரியாளிடம் இருந்து ஒரு பாடம்

இது மேற்கண்ட சம்பவங்களைப் போல கற்பழிப்பு சம்பவம் அல்ல. ஆனாலும் கற்பழிப்புக்கு ஆளாகக் கூடிய நிலையில் பெண்கள் இந்த வழிமுறையை ஆத்மார்த்தமான பிரார்த்தனையோடு கையாளலாம்.

இறைவன் நாடினால் பலன் கிடைக்கும். .
இயேசுவைக் கருத்தரிப்பதற்கு முன் நடந்த சம்பவங்களை வல்ல இறைவன் தனது இறுதிமறையில் கூறுவதைப் பாருங்கள்:

= இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். (திருக்குர்ஆன் 19: 16-17)
(ரூஹ் – பரிசுத்த ஆவி – ஜிப்ரீல் அல்லது காப்ரியல் என்ற வானவர்)

வந்தவர் வானவர் என்று அறியாததால் கற்புக்கரசியாகத் திகழ்ந்த மரியாளுக்கு அது ஓர் அதிர்ச்சி தரும் சம்பவமாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இறைவனிடமே புகலிடம் தேடுகிறார்.

=”நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று (மர்யம்) கூறினார். (திருக்குர்ஆன் 19:18)

இப்படிப்பட்ட எதிர்பாராத ஆபத்துகள் அல்லது பயமூட்டும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் வரலாம். தற்காப்புக்காக மரியாள் கையாளும் உத்தி இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயமாகும். தன்னந்தனிமையில் தன் எதிரே நிற்கும் ஆடவனுக்கு இறைவனைப் பற்றி நினைவூட்டி இறைவனிடமே தனக்குப் பாதுகாப்பும் தேடுகிறார். அந்த வல்லோனை மீறி என்னதான் சம்பவித்து விடமுடியும்?

Share this Article

Add a Comment

Your email address will not be published.