Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள் - Thiru Quran Malar

இயேசுவின் பிறப்பில் நாம் பெறும் பாடங்கள்

Share this Article

இயேசுவின்  பாட்டியிடம் இருந்தும் தாயான மரியாளிடம் இருந்தும் மனித குலம் பெறும் பாடங்களை முன்னர் கண்டோம். எல்லாப் படைப்பினங்களுக்கும் உணவளிப்பவன் இறைவனே என்ற நம்பிக்கையும்  இயற்கை விதிகளைக் கடந்து தான் நாடுவதை நிறைவேற்றக் கூடியவனே #இறைவன் என்ற நம்பிகையும் நம்மில் வரவேண்டும் என்பதை #இறைவன் மரியாளின் உதாரணம் மூலம் நமக்கு போதிக்கிறான்.

தொடர்ந்து இயேசுவின் அற்புதமான பிறப்பு தொடர்பான பாடங்களை பற்றி திருக்குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம். மரியாள் ஜகரிய்யா என்ற இறைத்தூதரிடம் வளர்கிறார். மிகுந்த ஒழுக்க மாண்புகளுடன் வளரும் மரியாளுக்கு திருமணத்திற்கு முன்பே – எந்த ஆணும் அவரை தீண்டாத நிலையில் – குழந்தை உருவாக வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு.

மிகவும் கட்டுப்பாட்டுடன் வளர்ந்த ஒருவருக்கு இந்த சோதனையை எதிர்கொள்ள முடியுமா? மனம் இடங்கொடுக்குமா? என்பதை நாம் இங்கு சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.கணவன் – மனைவி இணைவதன் வழியாகவே குழந்தை  உருவாக முடியும் என்று அறிந்து வைத்திருந்த ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு ஆணும் தீண்டாமலேயே குழந்தை உருவாகும் என்பதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?

இந்த கேள்விக்கான விடையை #ஜகரிய்யா என்ற இறைத்தூதரின் வாழ்விலிருந்து மரியாள் பெறுகிறார். இயற்கையைக் கடந்த ஒரு அற்புதம் தான் வளரும் வீட்டில் நிகழ்வதை மரியாள் பார்க்கிறார். முதுமையின் எல்லைக்கு சென்ற நிலையில் ஜகரிய்யா அவர்கள் குழந்தைப் பெற்று எடுக்கிறார்கள். இதில் நிறைய பாடங்கள் மரியாளுக்கும் அடங்கி இருந்தன.

மரியாளின் மேன்மை

மரியாளின் மேன்மை பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான். மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவாயாக! ஸஜ்தாச் செய்வாயாக! ருகூவு செய்வோருடன் ருகூவு செய்வாயாக!’ என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன் 3:42-43)

(ஸஜ்தா- சிரம் பணிதல்;, ருகூவு – குனிந்து வணங்குதல்)தொடர்ந்து இயேசுவைக் கருத்தரிப்பதற்கு முன் நடந்த சம்பவங்களை வல்ல இறைவன் தனது இறுதிமறையில் கூறுவதைப் பாருங்கள்:

= இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். (திருக்குர்ஆன் 19:16)

= அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். (திருக்குர்ஆன் 19:17)

(ரூஹ் – பரிசுத்த ஆவி – ஜிப்ரீல் அல்லது காப்ரியல் என்ற வானவர்)

தற்காப்புக்காக மரியாள் கையாளும் உத்தி

வந்தவர் வானவர் என்று அறியாததால் கற்புக்கரசியாகத் திகழ்ந்த மரியாளுக்கு அது ஓர் அதிர்ச்சி தரும் சம்பவமாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இறைவனிடமே புகலிடம் தேடுகிறார்.

=  ‘நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று (மர்யம்) கூறினார். (திருக்குர்ஆன் 19:18) 

இப்படிப்பட்ட எதிர்பாராத ஆபத்துகள் அல்லது பயமூட்டும் நிகழ்வுகள் நம் வாழ்விலும் வரலாம். தற்காப்புக்காக மரியாள் கையாளும் உத்தி இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயமாகும். தன்னந்தனிமையில் தன் எதிரே நிற்கும் ஆடவனுக்கு இறைவனைப் பற்றி நினைவூட்டி இறைவனிடமே தனக்குப் பாதுகாப்பும் தேடுகிறார். அந்த வல்லோனை மீறி என்னதான் சம்பவித்து விடமுடியும்?

 இதே உத்தியை சரித்திரத்தில் இன்னொரு பெண் கையாண்டு தன்னைக் கற்பழிக்கவிருந்த ஆடவனிடம் இருந்து தற்காத்துக் கொள்வதை ஒரு நபிமொழி மூலம் அறிகிறோம்ஒரு குகைக்குள்  சிக்கிக் கொண்ட  மூன்றுபேர் தங்கள் இறைவனுக்கு பயந்து செய்த நற்காரியங்களை முன்னிறுத்தி இறைவனிடம் பாதுகாவல் தேடினார்கள்.

அந்த மூவரில் ஒருவர் கூறியதைப் பாருங்கள்:’இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள்.

நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள்.

உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு’ எனக் கூறினார். இறைவன் அவரது பிரார்த்தனையை ஏற்று அவர்களைக் காப்பாற்றினான்.

இந்த சரித்திர சம்பவம் புகாரி என்ற நபிமொழி நூலில் இடம்பெற்றுள்ளது. சரி, இனி மரியாளின் சம்பவத்துக்கு வருவோம். தன்முன் வந்தவர் வானவர்களின் தலைவரான ஜிப்ரீல் என்பதை உணர்ந்து மரியாளின் அதிர்ச்சி நீங்கியது.

‘நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்’ என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 19:19)

ஒரு அதிர்ச்சியில் இருந்து நீங்கியதும் அதைவிடப் பெரிய அதிர்ச்சி மரியாளைத் தாக்கியது! “கன்னிப்பெண்ணான எனக்கு குழந்தையா?”

‘எந்த ஆணும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை கெட்டவளாக இல்லாமலும் இருக்க எனக்கு எப்படிப் புதல்வன் உருவாக முடியும்?’ என்று (மர்யம்) கேட்டார். (திருக்குர்ஆன் 19:20)

‘அப்படித் தான். இது எனக்கு எளிதானது. அவரை மக்களுக்கு சான்றாகவும், நம் அருளாகவுiiம் ஆக்குவோம். ‘இது நிறைவேற்றப்பட வேண்டிய கட்டளையாகும்’ என உமது இறைவன் கூறுகிறான்’ என்று அவர் கூறினார். (திருக்குர்ஆன் 19:21)

இறைவன் வகுத்ததே இயற்கை விதிகள்

ஆம், இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவன் இறைவன். அவன் வகுத்ததே இயற்கை விதிகள்.

= அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே விதிகளை  நிர்ணயித்தான். வழி காட்டினான்.  (திருக்குர்ஆன் 87:2,3)

அவன் அவ்விதிகளுக்குக் கட்டுப் பட்டவன் அல்ல. அவன் தான் நினைப்பதை எந்த விதிகளுக்கும் உட்படாமல் மிகமிகக் கச்சிதமாக நடத்தி முடிப்பவன்.  அப்படிப்பட்டவனே நமது இறைவன்.  அந்த இறைவனிடமே நாம் நமது பிரார்த்தனைகளை முன்வைக்கிறோம் என்பதை நாம் பெரும்பாலும் யோசிப்பதில்லை.

பொதுவாக நாம் நமக்கோ அல்லது மற்ற மனிதர்களுக்கோ சாத்தியமான ஒன்றைத்தான் இறைவனிடம் பிரார்த்தித்துக் கேட்போம். நமக்கு அசாத்தியமாகப்படும் ஒன்றைக் கேட்பதற்கு நமது மனம் இடம் கொடுப்பதில்லை. 

ஸ்ரீ நமக்கு வேண்டியவர்கள் நோயினால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெறும்போது டாக்டர் “நாங்கள் எங்களால் முடிந்ததெல்லாம் பார்த்துவிட்டோம், இனி இவர் பிழைக்க வழியில்லை!” என்று கூறுவதைச் செவியுற்றிருப்போம்.

ஸ்ரீ நீண்ட காலமாக குழந்தைப் பேறு இல்லாமல் கஷ்டப்படும் தம்பதியினரிடம் டாக்டர், “நாங்கள் எல்லாப் பரிசோதனைகளும் சிகிச்சையும் நடத்திவிட்டோம்,  உங்களுக்குக் குழந்தை பிறக்க வழியேதும் இல்லை” என்று சொல்வதையும் கேட்டிருப்போம்.

ஸ்ரீ நினைத்தவுடன் சென்றடைய முடியாத தூரத்தில் உள்ள நமது உறவினர் ஒருவருக்கு அவசர உதவி ஒன்றை உடனடியாகச் செய்ய வேண்டிய சூழ்நிலையைச் சந்தித்திருப்போம்.இப்படிப்பட்ட பல சூழ்நிலைகளில் மனம் உடைந்து இறைவனிடம் பிரார்த்திப்பதையே விட்டு விடுவது மனித வழக்கம்.

ஆனால் ஒரு உண்மை இறைவிசுவாசி அப்படி இருக்கக் கூடாது. இறைவனின் வல்லமையைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. நமக்கு அசாத்தியமானதையும் இறைவனிடம் கேட்க வேண்டும்.

வயதான காலத்தில் ஜகரிய்யா அவர்கள் பிள்ளைப் பேறு பெற்றதும், தனிமையில் இருந்த மரியாளுக்கு கோடைக்காலப் பழவகைகள் குளிர்காலத்தில் கிடைத்ததும், கன்னிப்பெண் மரியாள் குழந்தைப் பேறு பெறுவதும் எல்லாம் இறைவனின் அசாதாரண வல்லமையை நமக்கு நினைவூட்டும் பாடங்களாகும். பயபக்தியோடு இறைவனை அணுகினால் அதிலிருந்து நாமும் பயன் பெறலாம்!

Share this Article

Add a Comment

Your email address will not be published.