Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாடங்கள் - Thiru Quran Malar

இயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாடங்கள்

Share this Article

திருக்குர்ஆன் இயேசுவைப் பற்றி விரிவான வாழ்க்கை வராலாற்றைக் கூறவில்லை. எனினும் அவர் பிறப்பு மேன்மை, அவரது இறைச் செய்தி, அவரது விண்ணேற்றம்,  அவரைப் பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கைகள் மீதான தீர்ப்புகள் ஆகியவை பற்றிய முக்கிய விபரங்களை எடுத்துக் கூறுகிறது.

வரலாற்றைக் கற்றுத்தருவது திருக்குர்ஆனின் நோக்கமல்ல. மாறாக இயேசுவின் வாழ்விலிருந்தும் அவரோடு தொடர்புடையவர்களின் வாழ்விலிருந்தும் மனிதகுலம் பெறவேண்டிய பாடங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறான் இறைவன். இறைவேதத்தின் நோக்கமே அதுவல்லவா? 

இயேசுவின் பாட்டி

இயேசு பற்றிய குறிப்பு திருக்குர்ஆனில் அவரது பாட்டியின் பிரார்த்தனையில் இருந்து தொடங்குகிறது. அன்னை மரியாளை அவர் கர்ப்பம் தரித்தபோது இறைவனுக்கு அவரை நேர்ச்சை அவர் செய்த விதத்தை மனித குலத்துக்குப் பாடமாக போதிக்கிறான் கருணையுள்ள இறைவன்.

   3:35 இம்ரானின் மனைவி ”என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-

3:36  (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும். ”என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்.) ”அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன். 

எவ்வளவு அழகிய பாடம்! குழந்தைப்பேறு என்பது இறைவனின் அருட்கொடை. அக்குழந்தை நல்லவனாக அல்லது நல்லவளாக வளர ஒரு தாய் இடும் நல்ல உரமே அவளது பிரார்த்தனை! கர்ப்பத்தில் குழந்தை உருவாகும்போதே குழந்தையை இறைப்பணிக்காக நேர்ந்து அதன் வளர்ப்பையும் அவ்விறைவனிடமே ஒப்படைக்கும் ஒரு முன்மாதிரித் தாயை நாம் இயேசுவின் பாட்டியிடம் காண்கிறோம்.

அவ்வாறு யாராவது ஆத்மார்த்தமாகப் பிரார்த்தித்து இறைவனிடம் ஒப்படைத்தால் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறான் என்பதை அடுத்த வசனங்கள் மூலம் கற்றுதருகிறான் இறைவன்:

3:37 அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ”மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார். ”இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையையும் அது பிறக்கும்போதே ஷைத்தான் தீண்டி விடுகிறான். ஷைத்தான் தீண்டுவதாலேயே அது சப்தமிட்டு அழுதுக்கொண்டு பிறக்கிறது. (ஆனால்) மரியமையும் அவரது புதல்வரை(இயேசுவை)யும் தவிர” அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்:புகாரி

பாருங்கள், ஒரு தாயின் பிரார்த்தனை அவளது மக்களுக்கு எப்படிப் பயனுள்ளதாக அமைகிறது! அவளது மகள் மட்டுமல்ல தொடர்ந்துவரும் சந்ததிகளுக்கும் ஷைத்தானின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பு! இறைவனிடம் ஒப்படைத்ததால் அந்த மகளின் வளர்ப்பு, உணவு என முழு பொறுப்பையும் இறைவனே ஏற்றுக்கொள்ளவும் செய்கிறான்.நாமும் இதிலிருந்து பாடம் பெறுவோமா?

Share this Article

Add a Comment

Your email address will not be published.