Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இயற்கை வணக்கத்துக்குரியதா? - Thiru Quran Malar

இயற்கை வணக்கத்துக்குரியதா?

Share this Article

கீழடி அகழாய்வுகளுக்குப் பிறகு அங்கு உருவ வழிபாட்டிற்கான தடயங்களோ மத அடையாளங்களோ  ஏதும் கிடைக்கவில்லை. அதைக் காரணம் காட்டி அங்கு வாழ்ந்த பண்டைத் தமிழ் மக்கள் எந்த மதத்தையும் சாராமல் இயற்கையைத்தான் வழிபாட்டு வந்தார்கள் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள் சிலர்.

 சரி, இன்று #இஸ்லாம் கற்பிப்பது போல இறைவனுக்கு உருவமேதும் சமைக்காமல் அம்மக்கள் நேரடியாக வழிபாட்டு வந்திருந்தாலும் அங்கும் அதுபோன்று தடயங்கள் கிடைக்க வாய்ப்பில்லைதானே!எது எப்படியோ… அம்மக்கள் எதை அல்லது யாரை வழிபாட்டு வந்தார்கள் என்ற விவாதத்தை விட்டுவிட்டு எதை அல்லது யாரை வழிபடுதல் அறிவுடைமை என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஆம், வணக்கத்திற்குரியது இயற்கையா அல்லது இயற்கையை உருவமைத்து இயக்கிவரும் இறைவனா என்பதுதான் விவாதப் பொருள்!

இயற்கை என்பது தன்னைத்தான் உருவாக்கிக் கொண்டதோ அல்லது தானியங்கியோ அல்ல என்பதை நாம் கவனிப்போமேயானால் இயற்கை அல்ல இறைவனே வணங்குவதற்குத் தகுதியானவன் என்பது புரிந்து விடும். மேலும் இயற்கைக்கு நம் வணக்கத்தை புரிந்துகொள்ளும் சக்தியோ அறிவோ கிடையாது என்பதும் நம் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கும் இயல்பும் கிடையாது என்பதும் மிகத் தெளிவான விடயங்கள்.  

இயற்கை என்ற நாத்திகர்களின் ‘கடவுள்’!

இல்லாமையில் இருந்து இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவாயிற்று? இதை இயக்குவது யார்? பரிபாலிப்பது யார்? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் நாத்திகர்கள் அளிக்கும் பதில் “#இயற்கை” என்பதே!

‘#இயற்கை’ என்றால் என்ன என்று பகுத்தறிவு பூர்வமாக விளங்க முற்படாமையே இப்படிப்பட்ட பதிலுக்குக் காரணம். உண்மையில் இயல்புகளின் தொகுப்புக்கே #இயற்கை என்று கூறப்படும். எந்த ஒரு பொருளுக்கும் இயல்பு என்பது தானாக வருவதல்ல. 

பொருட்களின் இயல்பு என்பது அவற்றின் மூலக்கூறுகளின் அளவு, விகிதம், வடிவம், கால அளவு, சூழல், போன்ற பல அளவைகள் (parameters) மற்றும் அவற்றை உருவாக்கும் சக்தியின் அறிவு, திறன், நோக்கம், திட்டமிடுதல், கட்டுப்பாடு போன்ற பலவற்றையும் பொறுத்தே அமைகிறது. 

அவ்வியல்புகள் அப்பொருளில் நீடிக்க உரிய திட்டமிடுதலும் கட்டுப்பாடும் பரிபாலனமும் (planning, control, maintenance…) போன்ற பலவும் தேவை. எனவே இதை நிகழ்த்த இதற்குப்பின் ஒரு அறிவார்ந்த மதிநுட்பமும் சர்வ வல்லமையும் நிறைந்த சக்தியும் தேவை என்பது தெளிவு.

அறிவியல் இன்றுவரை கண்டுபிடித்துள்ள மிக நுண்ணிய பதார்த்தம் (smallest particle of matter known… eg. quarks, leptons bosons etc) ஆனாலும் சரி இந்த விசாலமான இப்பிரபஞ்சம் ஆனாலும் சரி. இவற்றில் காணப்படும் ஒழுங்கும் கட்டமைப்பும் கட்டுப்பாடு நிறைந்த இயக்கமும் தானாக வரமுடியாது என்பதே #பகுத்தறிவு உறுதிப்படுத்தும் பாடம்.

இயற்கையை இயக்கும் தன்னிகரில்லா சக்தி

இதைப்பற்றி புரிந்துகொள்ள ஒரு விதையையோ கடுகையோ எள்ளையோ எடுத்து நோட்டமிடுங்கள். அதற்குள் அடங்கியுள்ள மென்பொருளை – அதாவது அதில் அடங்கியுள்ள மூலப்பொருட்களின் இயல்புகளை செயல்பாடுகளை நடத்தையை அல்லது அதிலிருந்து முளைக்கப் போகும் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு போன்றவற்றின் இயல்புகள்,  நிறங்கள், வடிவங்கள், போன்ற விவரங்கள் அல்லது எவை எவை என்னென்ன  விதத்தில் அளவையில் விகிதத்தில் இருக்கவேண்டும் என்னும் விவரங்களை இன்னும் நாம் நம்மால் அறிய இயலாத ஏராளமான விவரங்களை கட்டளைகளை  –  முன்கூட்டியே எழுதியதும் இயக்குவதும் கட்டுப்படுத்துவதும் யார்? இதை சிந்தித்தால் சர்வவல்லமை கொண்ட இறைவனே அவன் என்பது புலப்படும். திருக்குர்ஆன் கூறுகிறது:

=  (நபியே!) உயர்வான உம் இறைவனுடைய திருப் பெயரைத் துதிப்பீராக!அவன்  எத்தகையவன் எனில்,  அவன்தான் படைத்தான்;  பொருத்தமாகவும் பக்குவமாகவும் அமைத்தான்;   மேலும்,  அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கும் இயங்குவதற்கும்) வழிகாட்டினான். (திருக்குர்ஆன் 87:1-3)

இல்லாமையில் இருந்து இயற்கையை உருவாக்கியவன்

ஏதேனும் ஒரு இயங்கும் பொருளை – உதாரணமாக கடிகாரம், ஸ்கூட்டர், கால்குலேட்டர் – காணும்போது நமது பகுத்தறிவு என்ன சொல்கிறது? இவையெல்லாம் திட்டமிடுதலும் வடிவமைத்தலும்  உருவாக்கியவனும்  இல்லாமல் உருவாக முடியாது என்றும் இவை இயங்க தொடர்ச்சியான மின்சாரம் போன்ற இயங்கு சக்தி தேவை என்பதையும் உறுதியாகச் சொல்லும். ஏற்கெனவே கிடைக்கக் கூடிய பொருட்களை சிதைத்து அல்லது உருமாற்றி அவற்றை ஒன்று சேர்த்து முறைப்படிப் பொருத்தி உருவாக்கப் படுபவையே மேற்கண்ட பொருட்கள்.

இந்த தயாரிப்புக்களுக்குப் பின்னே என்னென்ன அறிவு சார்ந்த நடவடிக்கைகள் உள்ளன என்பதை நீங்கள் உணர்ந்தால் ஒரு அறிவார்ந்த உருவாக்குபவன் அல்லது குழு இல்லாமல் இவை உருவாக முடியாது என்றே உறுதியாகச் சொல்வீர்கள்.

ஆனால் அறவே இல்லாமையில் இருந்து அதிபக்குவம் வாய்ந்த பொருட்கள் உருவாகி இயங்கி வரும் அற்புதத்தை மட்டும் தானாக உருவானவை என்று அறிவுள்ள எவராலும் சொல்ல முடியுமா? உருவாகுவது மட்டுமல்ல, தானியங்கியாக அவை தாங்களாகவே இனப்பெருக்கமும் செய்வதைக் கண்டால் இவற்றின் பின்னுள்ள நுண்ணறிவாளனை சர்வ வல்லமை கொண்டவனை எவ்வாறு மறுக்க இயலும்?

இறைவன்  எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19) 

இவர்களிடம் கூறும்: பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள்; எவ்வாறு அவன் முதன் முறையாகப் படைத்துள்ளான் என்று! பின்னர், இறைவன் இன்னொரு தடவையும் வாழ்வை நல்குவான். திண்ணமாக, இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுள்ளவன். (திருக்குர்ஆன் 29:20)

Share this Article

Add a Comment

Your email address will not be published.