இயற்கையைக் காப்பதும் இறைவழிபாடே!
நம்மில் ஒவ்வொருவரும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட தவணையில் இந்த பூமியின் மீது தோன்றி மறைகிறோம். இந்த குறுகிய தற்காலிக வாழ்க்கையை ஒரு #பரீட்சையாகவும் இந்த பூமியை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் நம்மைப் படைத்தவன் ஆக்கியுள்ளான் என்பது பகுத்தறிவு கொண்டு ஆராய்வோர் அனைவருக்கும் புலப்படும்.
இங்கு நாம் நம்மைப் படைத்த இறைவனின் ஏவல்-விலக்கல்களை ஏற்று அதன்படி வாழ்கிறோமா என்பதுதான் இந்தப் #பரீட்சை. இந்தப் பரீட்சையில் வெல்பவர்களுக்கு – அதாவது இறைவனின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வாழ்ந்தவர்களுக்கு- #மறுமையில் #சொர்க்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது.
மாறாக தோல்வியுறுபவர்களுக்கு – அதாவது இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்துத் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தவர்களுக்கு – தண்டனையாக நரகமும் கிடைக்கும் என்பதை இறைவனின் #வேதங்கள் நமக்குச் சொல்கின்றன. இறைவனின் இறுதிவேதம் #திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
= திண்ணமாக, நாம் இப்பூமியின் மீதுள்ள அனைத்தையும் அதற்கு அலங்காரமாய் ஆக்கியுள்ளோம், இவர்களில் மிகவும் சிறந்த செயலைச் செய்பவர் யார் என்று இவர்களை சோதிப்பதற்காக! (திருக்குர்ஆன்; 18:7)
இயற்கை என்ற மாபெரும் பொக்கிஷம்.
பூமியின் மீதான இந்த வாழ்வை மனிதகுலம் செவ்வனே வாழவேண்டும் என்பதற்காக எண்ணற்ற அற்புதமான அருட்கொடைகளை அளவிலாக் கருணைகொண்ட #இறைவன் வழங்கியுள்ளான். அந்த இறைவனின் அருட்கொடைகளில் மிக முக்கியமானது இயற்கை என்ற மாபெரும் பொக்கிஷம்.
= இறைவன்தான் உங்களுக்கு இப்பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்; மேலும், அவன்தான் உங்களை உருவாக்கி உங்கள் உருவங்களை அழகாக்கி சிறந்த உணவு வசதிகளையும் அளித்தான். அவன்தான் அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் மிக பாக்கியமுடையவன். (திருக்குர்ஆன்40:64) (அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது பொருள்)
= நிச்சயமாக #இறைவன் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும் இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும் அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? (திருக்குர்ஆன் 31:20)
சுற்றுப்புறச்சூழல் காக்கும் பொறுப்பு
இந்த பூமியில் அந்த இறைவனின் பிரதிநிதியாக நாம் நியமிக்கப் பட்டுள்ளோம் என்றும் திருக்குர்ஆன் நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே நம்மை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொக்கிஷமாக இயற்கை வளங்களையும் வசதிகளையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவர் மீதும் சுமத்தப்பட்ட பொறுப்பாக இருக்கிறது.
#இறைவன் இன்று நம் கைவசம் ஒப்படைத்துள்ள இயற்கை அருட்கொடைகளை யாரும் சுயநல நோக்கோடு சொந்தம் கொண்டாடி தான்தோன்றித்தனமாக பயன்படுத்த முடியாது. ஏனெனில் நம்மில் எவருமே இவற்றின் உரிமையாளர்கள் கிடையாது.
இவற்றின் உண்மை உரிமையாளன் #இறைவன் மட்டுமே! நாம் இவற்றைக் கடந்து செல்லும் வெறும் பயனாளிகள் மட்டுமே. இவை அனைத்து மனித குலத்துக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இனி எதிர்காலத்தில் இங்கு வாழவிருக்கும் நமது தலைமுறையினருக்கும் சொந்தமானது என்ற பொறுப்புணர்வோடு நடந்துகொள்வது மிகமிக அவசியமாகும்.
இறைவன் கண்டிப்பாக விசாரிப்பான்
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந்நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் – மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன். (திருக்குர்ஆன் 24:64)
ஆம் மறுமை நாளில் இவற்றை நாம் பயன்படுத்தியது பற்றி விசாரிக்கப்படுவோம் என்பது உறுதி!
= இறைவனின் இறுதித் தூதர் #முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:‘நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகளே. உங்கள் ஒவ்வொருவரின் பொறுப்புக்கள் பற்றியும் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்…” (புகாரி, முஸ்லிம்)
எனவே இந்தப் பொறுப்புணர்வோடு சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் பேணுவது இந்த பூமியின் மீது இன்று வாழ்வோருக்கும் நலம் பயப்பதாக அமையும். எதிர்கால தலைமுறைகளுக்கும் பயனளிக்கும். மட்டுமல்ல இறைவனின் ஏவலுக்கேற்ப இவற்றைக் கட்டுப்பாட்டோடு பயன்படுத்தியதற்காக அவனது தரப்பிலிருந்து புண்ணியத்தையும் அதன்வழி அச்செயல் #மறுமையில் சொர்க்கத்தையும் பெற்றுத்தரும்.
இயற்கை வளங்களை சிதைப்பது யார்?
இந்த பூமியையும் அதைச் சூழவுள்ள வானமண்டலங்களையும் அழகிய முறையில் படைத்து பரிபாலித்து வருபவன் #இறைவன். ஆனால் மனிதர்கள் இறைவனின் வழிகாட்டுதலை மீறி தான்தோன்றித்தனமாகவும் சுயநல அடிப்படையிலும் இந்த அருட்கொடைகளை பயன்படுத்துவதன் காரணமாக இயற்கை வளங்கள் அநியாயமாக அழிக்கப்படுகின்றன.
இவற்றின் சமநிலை குலைகிறது. நீரும் காற்றும் உணவும் நஞ்சாக மாறுகிறது. இவற்றின் விளைவாக உலகெங்கும் – குறிப்பாக நலிந்த நாடுகளில் – கொடிய நோய்களும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடுகின்றன.. நாளுக்குநாள் நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.
= “மக்கள் தங்கள் கைகளால் எதைச் சம்பாதித்தார்களோ அதன் காரணமாக தரையிலும் கடலிலும் அராஜகமும் குழப்பமும் தோன்றிவிட்டிருக்கின்றன” (திருக்குர்ஆன் 30:41)
தேவை ஒரு தீர்வு
இந்தக் அராஜகத்தையும் குழப்பத்தையும் முடிவுக்குக் கொண்டுவந்து இவ்வுலகில் இயற்கை வளங்களையும் அவற்றின் செழுமையையும் மீட்டெடுக்க வேண்டுமானால் #இறைவன் பாலும் அவனது வழிகாட்டுதலின் பாலும் நாம் திரும்ப வேண்டும். அந்த இறைவன் நமக்குக் கற்பிக்கும் ஏவல்- விலக்கல்களை பேணி வாழவேண்டும். அவ்வாறு இறைவனின் வழிகாட்டுதல்களுக்கேற்ப வாழும் வாழ்க்கை நெறிதான் #இஸ்லாம் (கீழ்படிதல்) என்று அழைக்கப்படுகிறது.
= மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ….. நிச்சயமாக இறைவன் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1)
அதாவது ஒன்றே மனித குலம், ஒருவனே #இறைவன், அவனது கண்காணிப்பின் கீழ் உள்ளோம், நம் வினைகளுக்கு #மறுமையில் விசாரணையும் அதற்கேற்ப #சொர்க்கமும் #நரகமும் வாய்க்க உள்ளது என்ற அடிப்படை உண்மைகளை மனித மனங்களில் விதைத்து அவர்களை சீர்திருத்தி ஒழுக்கம் நிறைந்த ஓர் உலகை கட்டியெழுப்பவே இஸ்லாம் விழைகிறது.
அந்த வகையில் மனித உள்ளங்களைப் பண்படுத்தி கொலை, கொள்ளை, விபச்சாரம், மது, சூதாட்டம், மூடநம்பிக்கைகள், தீண்டாமை, மனித உரிமை மீறல்கள் போன்ற கொடுமைகளை விலக்கி புத்துலகு சமைக்க முயற்சிக்கிறது.
அங்கு இன, நிற, மொழி,நாடு போன்ற வேற்றுமைகளைக் கடந்து மனித சமத்துவமும் சகோதரத்துவமும் பேணக்கூடிய தனி மனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் பேணக்கூடிய, தீமைகளில் இருந்து விலகி வாழக்கூடிய, ,பரஸ்பர அன்பு, தியாகம் கூட்டுறவு போன்ற அழகிய பண்புகள் அமைந்த சமூகம் உருவாக வழிவகுக்கிறது #இஸ்லாம்.
சுற்றுப்புற சூழல் பாதுகாக்க இஸ்லாம்
எந்த ஒரு உயிரினத்தையும் அநியாயமாகக் கொல்வதை #இஸ்லாம் தடை செய்கிறது. உணவுக்காக #இறைவன் படைத்துள்ள பிராணிகளைக் கூட கேளிக்கைக்காகக் கொல்வது தடை செய்யப்பட்டதே. தாவரங்களை அநியாயமாக அழிப்பதையும் நீர்நிலைகளை மாசு படுத்துவதையும் இஸ்லாம் அறவே தடுக்கிறது.
போர்களின் போது கூட இவற்றுக்கு இஸ்லாம் அனுமதிப்பதில்லை. போர்களின் போது பொதுவாக எதிரி நாட்டு நீர்நிலைகளை யானையை விட்டுக் கலக்குவதும் மரங்களை வெட்டி சாய்ப்பதும் பயிர்களையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்துவதும் மன்னர்களின் வழக்கம்.
#நபிகள் #நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட தற்காப்புப் போர்களின் போது இவற்றையெல்லாம் முழுமையாகத் தடை செய்தார்கள். தமது படை வீரர்களுக்கு பயிர்களை, உணவினைத் தரும் கனி வர்க்க மரங்களை, நீர் நிலைகளை, குடியிருக்கும் வீடுகளை சேதப் படுத்தக் கூடாது என்றும் முதியோர், நோயாளிகள், பெண்கள், குழந்தைகளை, புறமுதுகிட்டு ஒடுவோர்களையும், வளர்ப்பு பிராணிகளையும் கொல்லவோ அல்லது துன்புறுத்தவோ கூடாது என்றும் கட்டளை இட்டார்கள்.
மரம் நடுதல்:
சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்க காடுகள் அழிக்கப்படுவதைத் தவிர்ப்பதுடன் மரங்களை நடுவது காலத்தின் கட்டாயமாகும். #இஸ்லாம் மரம் நடுவதை புண்ணியம் தரும் ஒரு வணக்க வழிபாடாகப் போதிக்கின்றது.
= இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” (நூல்: புகாரி)
நீர் நிலைகள் பாதுகாப்பு
சுற்றுப் புறச் சூழல் பாதுகாப்பில். நீர்நிலைகளைப் பாதுகாப்பதும், நீர் வளத்தைப் பாதுகாப்பதும், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் அவசியமாகும். நிலையான நீரில் சிறுநீர் கழிப்பதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள்.
= ’ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி)
அதேபோல நீரை வீண்விரையம் செய்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது:
= உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.(திருக்குர்ஆன் 7:31)
= “ஓடுகின்ற ஆற்றில் தொழுகைக்காக அங்கத்தூய்மை செய்தாலும் அளவோடு நீரை பயன்படுத்துங்கள். வீண்விரயம் கூடாது” என்று அறிவுறுத்தினார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். ” ( அஹ்மத்)
பொது இடங்களில் தூய்மை பேணுதல்
பொது இடங்களான சாலை ஓரங்கள், இரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் ஆகிய இடங்களை அசுத்தப்படுத்துவதன் மூலம் பலர் மக்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள்.
= ’பாதையோரங்களிலும் நிழல் தரும் இடங்களிலும் மலஜலம் கழித்து மக்களின் சாபத்தைப் பெறுவதையிட்டும் நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பொது இடங்களில் குப்பை மற்றும் நாற்றம் வீசும் கழிவுப்பொருள்களைக் கொட்டுவோருக்கும், காற்றை மாசுபடுத்தி அண்டை அயலாருக்கு தொல்லை கொடுப்போருக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும் என்பது தெரிந்ததே.
தனி நபர் உடல் தூய்மையும் முக்கியம்
சாலை ஓரங்களிலும் சுவர்களிலும் சிறுநீர் கழித்தாலோ அவற்றை யாரும் பொருட்படுத்தப்படாத நிலை தொடர்கிறது. சிறுநீரும் கழித்த பின் கழுவி சுத்தப்படுத்தப் படவேண்டிய விஷயமே என்பதை மக்கள் உணராததன் காரணமாக சாலைகளில் சிறுநீரின் நாற்றத்தையும் அதன்மூலம் உண்டாகும் சுகாதார சீர்கேடுகளையும் நாம் சகித்துக் கொண்டே வாழவேண்டியுள்ளது.
ஆனால் #இஸ்லாம் வழிபாட்டின் ஒரு முக்கியப் பகுதியாக சிறுநீர் சுத்தம் பற்றிய பேணுதலைக் கற்பிக்கிறது. குழந்தைகள் ஏழு வயதில் இருந்தே அந்தப் பேணுதலுக்குப் பழக்கப்படுத்தப் படுகிறார்கள்.
= “சுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
அசுத்தம் நீக்குதலும் வழிபாடே!
= “தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும்’‘ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)