இதற்குப் பெயர்தான் நாட்டுப்பற்று!
நாட்டின் ஆட்சியாளர்கள் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு சல்யூட் அடிப்பதோடு நாட்டுப்பற்று உள்ளதாகக் காட்டிக் கொள்ளலாம். ஆனால் உண்மை #நாட்டுப்பற்று என்பது நாட்டு மக்களை மதித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதே! அதற்கு ஆட்சியாளர்களிடம் #இறையச்சம் என்பது முதலில் இருக்க வேண்டும். தன்னைத் தட்டிக் கேட்க மேலே இறைவன் இருக்கிறான் என்ற பொறுப்புணர்வே அது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார்…..’ (நூல்: புகாரீ 5200)
இஸ்லாமிய அரசின் ஒரு ஜனாதிபதியாக இருந்த #உமர்(ரலி) அவர்களின் வாழ்க்கை இந்தப் பொறுப்புணர்விற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும். உமர்(ரலி) அவர்கள் ஆரம்பத்தில் ஊதிய மின்றி ஜனாதிபதி உத்தியோகம் பார்த்தார்கள். ஆனால் பணிச்சுமை காரணமாக வருவாய் தேடும் வாய்ப்பு குறைந்த பொழுது குடும்ப செலவிற்கு ஒருநாளைக்கு இரண்டு திர்ஹங்கள் அரசுநிதியில் இருந்து பெற்றார்கள்.
சலிக்காத மாவில் ஜைத்தூண் எண்ணெயில் சுட்ட சாதாரண ரொட்டியே அவர்களின் குடும்ப உணவு. ஜனாதிபதியைக் காண வருவோர் அவ்வுணவை சாப்பிட சிரமப்படுவர்.
ஒருமுறை ஜனாதிபதி #உமர்(ரலி) அவர்கள் உணவு உண்ணும் பொழுது அஜர்பைஜானின் ஆளுனர் ஹழ்ரத் உத்பா இப்னு பர்கத் (ரலி) அவர்கள் ஜனாதிபதியைக் காண வந்தார். ஜனாதிபதி, ஆளுநருடன் உணவைப் பகிர்ந்துகொண்டார். ஒரு கவளம் வாயிலிட்ட ஆளுநர் அல்லல்பட்டு அதோடு உண்பதை நிறுத்தினார். ஜனாதிபதி காரணம் கேட்டவுடன் “”சலிக்காத மாவை ஜைத்தூண் எண்ணெயில் சுட்டு எப்படி சாப்பிட முடிகிறது? மாவைச் சலித்து மணமுள்ள எண்ணெயில் சமைத்து சாப்பிடக் கூடாதா?” என்று வினவினார்.
“”சலித்த மாவையும் தரமான எண்ணெயையும் எல்லா மக்களும் உண்ணும்பொழுது நானும் உண்ணலாம். அந்நிலை வரும் வரை ஏழைகள் எதை உண்கிறார்களோ அதையே நானும் உண்பேன். மறுமையின் அச்சம் இல்லாது இருந்தால் என் வீட்டில் உயர்ந்த உணவுகளைச் சமைப்பேன்”
ஜனாதிபதியின் பதிலைக் கேட்டு ஆளுநரின் கண்கள் கலங்கின. உமர்(ரலி) அவர்கள் ஜனாதிபதி ஆன பிறகு சலித்த மாவில் ரொட்டி தயாரித்து உண்டதே இல்லை என்று உரைக்கிறார் ஹழ்ரத் யஸôர் இப்னு நுமைர்(ரலி) அவர்கள்.
அஜர்பைஜான் திரும்பிய ஆளுநர் ஜனாதிபதிக்கு அன்பளிப்பு அனுப்பினார். பொதுநிதி பைத்துல்மாலுக்குப் பொருள் வந்திருப்பதாக பிரித்த உமர் அவர்கள் அதில் அஜர்பைஜானில் தயாரிக்கப்படும் நெய்யுடன் கலந்த பேரீத்தங்கனி பாத்திரங்களில் இருப்பதைக் கண்டார். ஒன்றை எடுத்து வாயிலிட்ட ஜனாதிபதி அதன் சுவை மிகுதியை உணர்ந்து, “”அஜர்பைஜானின் அத்தனை மக்களும் அதை சாப்பிடுகிறார்களா?” என்று கேட்டார்.
இல்லை என்ற பதில் வந்ததும் பொருள் கொண்டு வந்தவர்களைத் திரும்ப எடுத்துச் செல்ல பணித்தார். ஜனாதிபதியின் கடுமையான எச்சரிக்கை கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
“”நெய்யில் பொரித்த பேரீத்தங்கனி உங்களுடைய சொந்த உழைப்பால் உங்களுக்குக் கிடைத்ததா? உங்களின் பெற்றோர் விட்டுச் சென்று உங்களுக்குக் கிடைத்த உடமைகளிலிருந்து நீங்கள் பெற்றதா? அப்படியாயின் அதை நீங்கள் உண்ணலாம். இல்லையேல் எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் எளிய உணவையே நீங்கள் உண்ண வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது”.
நன்றி: அஜீஸ் அஹ்மது