Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இதயங்களை வென்ற இறைத்தூதர் - Thiru Quran Malar

இதயங்களை வென்ற இறைத்தூதர்

Share this Article

முஹம்மது நபி (அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக)பரந்த உலகில் விரிந்து கிடக்கிற மனித வரலாற்றில் யாரும் எட்டிப்பிடிக்க முடியாத தாக்கம் அவருடையது.

= இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகின் 25%க்கும் அதிகமான மக்கள் அந்த  மாமனிதரைக் கண்ணால் காணாமலேயே அவரை நேசிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அவரது கட்டளைகளை சிரமேற்கொண்டு பின்பற்றுகிறார்கள். கடந்த பதினான்கு நூற்றாண்டுகளில் அவரை அவ்வாறு பின்பற்றியவர்கள் பலகோடி.

=ஆன்மிகம், சமூகம், அரசியல், பொருளாதாரம்,  கலாச்சாரம்,  வரலாறு, அறிவியல், மொழி, தத்துவம்,  இலக்கணம், இலக்கியம்,  வாழ்வியல், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவரது வழிகாட்டுதல் மேலோங்கி விளங்குகிறது. முஹம்மது நபிகளாரின்  (ஸல்) ஆரோக்கியத்திற்கான வழிகாட்டுதல்கள் அனைத்து மருத்துவத்துறையிலும் மேற்கோள் காட்டப்படுபடுகின்றன. சட்டம், நீதி, நிர்வாகம் மற்றும் பதிவுத்துறைகளும் அவர் கோலோச்சுகின்ற துறைகளாகும்.

= ஆங்கில வரலாற்றாசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் ‘மனித வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூறு பேர்’ (The 100) என்ற தன்னுடைய புத்தகத்தில் அவர்களை வரிசைப்படுத்திப் பதிவு செய்திருக்கிறார்.

அதில் #முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும்  கூறுகிறார்:“ஆன்மிகம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர் வரலாற்றில் அவர் ஒருவர் மட்டுமே! எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள்.

அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.”
அந்த சரித்திர நாயகர் தனது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப்பட்டார்கள். 63 –வது வயதில் மரணமடைந்தார்கள். அந்த 23 வருட இடைவெளியில் அவர் நடத்திய புரட்சிதான் தனது தாக்கத்தை இன்றும் நிகழ்த்திக் கொண்டு வருகிறது..

அப்படி என்னதான் நடந்தது அங்கே? வாருங்கள் கண்டு வருவோம்….

அன்று மக்காவில் அவரைச் சுற்றி வாழ்ந்த மக்கள் பலவிதமான  #மூடநம்பிக்கைகளிலும் மூடப்பழக்கவழக்கங்களிலும் மூழ்கிக்கிடந்தார்கள். மக்காவில் இன்று காணப்படும் சதுர வடிவான கஅபா என்ற இறையில்லம் சுமார் 5000 வருடங்களுக்கு முன்னால் #இப்ராஹீம் (ஆப்ரஹாம்) என்ற இறைத் தூதரால் ஏக இறைவனை வழிபடுவதற்காக கட்டப்பட்ட ஒன்றாகும்.

ஆனால் காலப்போக்கில் அதற்குள் 360 சிலைகள் நிறுவப்பட்டு தினம்  ஒரு சிலைக்கு வழிபாடு என்றவாறு நடத்திக் கொண்டிருந்தார்கள். அதிகாரம் படைத்தவர்களும் பலம் வாய்ந்தவர்களும் இடைத்தரகர்களும் சேர்ந்து கடவுளின் பெயரால் மக்களை அடிமைப் படுத்தியும் கொடுமைப் படுத்தியும் வந்தனர். குலவேற்றுமையும் இனவேற்றுமையும் ஆழமாய் வேரூன்றியிருந்த காரணத்தால் அவர்களுக்குள்ளே சண்டைகளுக்கும் கலகங்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது.

பெண்ணடிமைத்தனமும் மூடநம்பிக்கைகளும் காரணமாக அவர்கள் பெண்குழந்தைகள் பிறந்தாலே இழிவு என்று கருதி அவர்களை உயிரோடு புதைக்கவும் செய்து வந்தார்கள். இன்னும் இவைபோன்ற பல அனாச்சாரங்களும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன.

 தன்னைச் சுற்றி இவையெல்லாம் நடந்துகொண்டிருக்க இவற்றுக்கான தீர்வுகளுக்காக அனைவரது மனமும் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் இறைவன், மக்களுக்கு நல்ல  வழிகாட்டுவதற்காக #முஹம்மது (ஸல்) அவர்களைத் தன் தூதராக ஆக்கினான். #ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் நபிகளாருக்கு இறைவன் புறத்திலிருந்து வேதவசனங்களும் இறைகட்டளைகளும் வழிகாட்டுதல்களும் வரத் துவங்கின. 

#இறைவன் வகுத்து வழங்கும் வாழ்க்கை நெறியின் பால் மக்களை அழைக்குமாறு இறைவனால் பணிக்கப் பட்டார்கள். அந்த வாழ்க்கை நெறியே  இஸ்லாம் (இறைவனுக்குக் கீழ்படிதல்) என்று அறியப்படுகிறது.

நபிகளார் எதன்பால் மக்களை அழைத்தார்கள்?

 #நபிகள் நாயகம் (ஸல்) மக்களை ஒரு புதிய மதத்திற்கோ அல்லது ஒரு புதிய கடவுளை வழிபடச் சொல்லியோ அழைக்கவில்லை. தான் மக்களுக்குச் செய்த சமூக சேவைகளைக் காட்டி தன்னை ஒரு தலைவராக ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லியோ அழைக்கவில்லை. மாறாக அனைத்து மக்களுக்கும் பயன்படக் கூடிய ஒரு சீர்திருத்தத் திட்டத்தின்பால்தான் அழைத்தார்கள். அவரது அழைப்பின் சாரம் இதுவே:

= “ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்த நீங்கள் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்களே. குலமோ, இனமோ, மொழியோ, நிறமோ, இடமோ உங்களைப் பிரித்துவிடக் கூடாது. 

“உங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டும்,  சுரண்டிக் கொண்டும், மோசடி செய்தும், அமைதி இழந்து தவித்துக் கொண்டிருக்கும் என் சமுதாயமே! வாருங்கள் இதற்கொரு முடிவு கட்டுவோம்! ஒரு இனிய புதிய விடியலை நோக்கிப் பயணிப்போம்! இந்த குறிக்கோளை அடைய நீங்கள் மறந்துபோன சில உண்மைகளை நினைவூட்டி அவற்றை ஏற்றுக்கொள்ளும்படி அழைக்கவே நான் இறைவனால் அனுப்பப் பட்டுள்ளேன்”, என்றார் நபிகளார்.

மறுக்கமுடியாத உண்மைகள்

= “நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய முதல் உண்மை எதுவெனில் இவ்வுலகத்தை படைத்த இறைவன் ஒரே ஒருவனே என்பதும் அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதுதான். அவன்தான் நமக்கு தன் புறத்திலிருந்து எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கி நம்மை பரிபாலித்துக் கொண்டிருக்கிறான். அவன் மட்டுமே நம் நன்றிக்கும் வணக்கத்திற்கும் தகுதியானவன்.

நம் பிரார்த்தனைகளை செவியுறவும் பதிலளிக்கவும் ஆற்றல் கொண்டவன் அவனே ஆவான். அவனைத் தவிர மற்ற அனைத்துமே அவனது படைப்பினங்களே. அவற்றை வணங்குவதும் உயிரற்ற உணர்வற்ற பொருட்களை கடவுள் என்று அழைப்பதும் எல்லாம் இறைவனைச் சிறுமைப்படுத்தும் செயலும் வீணும் மோசடியும் ஆகும். எனவே பொய்யான தெய்வங்களை விட்டுவிட்டு உங்களைப் படைத்தவன்பால் வாருங்கள்”

= “அடுத்த உண்மை – இவ்வுலகம் தற்காலிகமான ஒரு பரீட்சைக்கூடம் போன்றது. இதில் நீங்கள் இறைவனின் வழிகாட்டுதல்படி அவன் கூறும் நன்மைகளைச் செய்தும் அவன் கூறும் தீமைகளில் இருந்து விலகியும் ஒழுக்க வாழ்வு வாழ்ந்தீர்களானால் உங்கள் தனி நபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் அமைதியைக் காண முடியும்.

அவ்வாறு நீங்கள் படைத்தவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தீர்களானால் அதற்குப் பரிசாக அவன் மறுமையில் நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்கத்தில் உங்களைப் புகுத்துவான். மாறாக அவனுக்குக் கட்டுப்படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தீர்களானால் அதற்கு தண்டனையாக மறுமையில் நரகத்தையும் வைத்துள்ளான்.” 

= “இந்த மறுக்கமுடியாத சத்தியங்களை ஏற்றுக் கொண்டு இறைவன்பால் திரும்புங்கள். அவன் நமக்காக வகுத்துத் தந்துள்ள அழகிய வாழ்க்கைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். பூமியை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம் வாருங்கள்.”இவ்வாறு எல்லாக் காலத்திலும் எல்லா இடங்களிலும் அனைத்து மனிதகுலமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சீர்திருத்தத் திட்டத்தின்பால்தான் நபிகள் நாயகம் (ஸல்) மக்களை அழைத்தார்கள்.

ஆனால் என்ன நடந்தது?

புரிந்து கொண்டவர்கள் இந்த உயர்ந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். முழுமூச்சாக அண்ணலாரோடு இணைந்து பாடுபட்டார்கள். கொண்ட கொள்கைக்காக தங்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் துணிந்தார்கள். படைத்த இறைவனுக்காக அனைத்தையும் இழந்தாலும் நஷ்டம் ஏதும் இல்லையல்லவா? மறுமையில் சொர்க்கமல்லவா காத்திருக்கிறது!

ஆனால் இக்கொள்கையின் அருமையைப் புரிந்து கொள்ளாதவர்கள்தான் பெரும்பான்மையாக இருந்தார்கள். இந்த இயக்கம் வெற்றி பெற்றால் அனைவரும் சுபிட்சமாக வாழலாம் என்பதைப் புரிந்து கொள்வதிலிருந்து  சிலரை அவர்களுடைய தற்பெருமையும், சிலரை சுயநலமும், சிலரை ஆதிக்கபலமும் தடுத்தது. பெரும்பாலோரை ‘முன்னோர்கள் எது செய்தாலும் சரியே’ என்ற குருட்டு நம்பிக்கை தடுத்தது!

தொடர்ந்த சித்திரவதைகள்

இயக்கம் தொடங்கி பதிமூன்று வருடங்கள் தொடர் சித்திரவதைகளுக்கு மத்தியில் கழிந்தது. ஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கணவாய்க்கு நபிகள் நாயகத்தையும், அவர்களது சகாக்களையும் விரட்டியடித்து சமூகப்புறக்கணிப்பும் செய்தனர். பல நாட்கள் இலைகளையும், காய்ந்த சருகுகளையும் மட்டுமே உணவாகக் உட்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். 

‘நபிகள் நாயகத்துடன் யாரும் பேசக் கூடாது; அவருடன் யாரும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது’ என்றெல்லாம் ஊர்க் கட்டுப்பாடு போட்டார்கள்.ஒன்று இரண்டல்ல, பதிமூன்று வருட காலம் தொடர்ச்சியாக சித்திரவதைகளை அனுபவிக்க எவ்வாறு இவர்களால் முடிந்தது? கொடுமையாளர்களுக்கு எதிராக இவர்கள் ஏன் ஒன்றுமே செய்யவில்லை?  எண்ணிக்கைப் பெருகும் போதும் எதிர்த்து நிற்க எது தடை செய்தது? …… இதைத்தான் நாம் முக்கியமாக கவனிக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இஸ்லாம் என்பது ஒரு இனம் சார்ந்தது அல்ல. மாறாக அனைத்து மனிதகுலத்துக்கும் பொதுவான ஒரு கொள்கை. தங்கள் இலக்கு எதிர்ப்போரையும், அவர்களின் உடமைகளையும் அழிப்பதல்ல., மாறாக அவர்களைத் திருத்தி பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதுதான் என்பதைத் தெளிவாகப் புரிந்திருந்தார்கள் நபிகளாரும் சகாக்களும். அதன் காரணமாக பொறுமையையும், மன்னிப்பையும், இறை உதவியையுமே தங்கள் ஆயுதங்களாக எடுத்துக் கொண்டார்கள்.

பொறுமை என்ற ஆயுதம்

ஆம், தன்னை மக்கள் தாக்கியபோதும் நபிகளார் பொறுமையுடன் தாங்கிக் கொண்டார்கள். தன் சகாக்கள் தாக்கப்பட்ட போதும் பொறுமையை மேற்கொள்ளுமாறு பணித்தார்கள். இறைவனின் கட்டளைகளை அவர்களுக்கு நினைவூட்டினார்கள்.

“நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும் உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.” (திருக்குர்ஆன் 41 : 34)“

அவர்கள் சகித்துக் கொண்டதாலும், நன்மையின் மூலம் தீமையைத் தடுத்ததாலும், அவர்களுக்கு நாம் வழங்கியதை (நல்வழியில்) செலவிட்டதாலும் அவர்களுக்கு இரண்டு தடவை அவர்களின் கூலிகள் வழங்கப்படும்.”  (திருக்குர்ஆன் 28 :54)

கொடுமைகளையும் சித்திரவதைகளையும் தாங்க முடியாத தன்னுடைய சகாக்களை, நாடுதுறந்து செல்லுமாறு கட்டளையிட்டார்கள் நபிகளார்.பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு நபிகள் நாயகமும் முஸ்லிம்களும் மதீனா நகரில் தஞ்சம் அடைந்த போது, அங்கும் வந்து எதிரிகள் தாக்க முற்பட்டபோது மட்டுமே தற்காப்புக்காக போரிட்டார்கள் முஸ்லிம்கள்.

இஸ்லாமிய இயக்கம் வளர்ந்து இறுதியில் மீண்டும் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்டபோது யாரையும் பழிவாங்காமால் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார் நபிகளார். இவ்வாறு இதயங்களை வென்றதால்தான் இஸ்லாம் வெகுவேகமாக உலகெங்கும் பரவியது.

ஆம், இன்று அதர்மத்தை அழித்து தர்மத்தை உலகில் நிலைநாட்ட வேண்டுமானால்   இறை உதவியும் பொறுமையும் மன்னிப்புமே அதற்கான ஆயுதங்கள் என்பது நபிகளாரிடம் இருந்து மனிதகுலம் பெறும் அழியாத பாடமாகும்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.