Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது? - Thiru Quran Malar

இறைவன் அல்லாதவற்றை ஏன் வணங்கக்கூடாது?

Share this Article

இணைவைத்தல் என்றால் என்ன?

– படைத்த இறைவனை வழிபடுவதற்கு பதிலாக மனிதர்கள், சூரியன், சந்திரன், மரம், விலங்கினங்கள், போன்ற இன்ன பிற படைப்பினங்களை வணங்குவது மற்றும் பிரார்த்திப்பது  – இவ்வுலகிலிருந்து மறைந்துவிட்ட மனிதர்களின் உருவச்சிலைகள்,, சமாதிகள் (தர்காக்கள்), அல்லது வேறு கற்பனை உருவங்களை வணங்குவது அல்லது அவர்களிடம் பிரார்த்திப்பது- இறைவன் அல்லாத எதனையும் இறைவன் என்றோ கடவுள் என்றோ அழைப்பது மற்றும் பிரார்த்திப்பது- ஏகனான இறைவனுக்கு இல்லாத மக்களையும் மனைவிமார்களை எல்லாம்   கற்பித்து அவர்களை வணங்குவது.- இன்னும் இவைபோன்ற செயல்களுக்கு இறைவனுக்கு இணைவைத்தல் என்று கூறப்படும்.

பாவங்கள் பெருக மூல காரணம் இது 

மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல் வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக கடவுளைப் பற்றிய பயம் வேண்டும். அதாவது என்னைப்  படைத்தவன் என்னை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம் விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன் என்னை தண்டிப்பான் என்ற உணர்வு மனிதனுக்குள் விதைக்கப் படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல் துணிகிறான்.  

உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் காட்டி இவைதான் கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து வந்ததன் விளைவு மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. ஆக, இந்த  இறைவனுக்கு இணை வைக்கும் செயல்தான் இன்று நாட்டில் காணப்படும் அனைத்துப் பாவங்களுக்கும் குழப்பங்களுக்கும் மூல காரணம் அல்லது ஊற்றுக் கண் என்றுணரலாம். அப்படிப்பட்ட கடவுள் பயமற்ற தலைமுறைகள் உருவாகும் போது  பாவங்கள்  கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன.

மூடநம்பிக்கைகளும், மோசடிகளும் உருவாகின்றன.

அகில உலகத்தையும் அண்ட சராசரங்களையும்  படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு உயிரற்ற உணர்வற்ற பொருட்களை ஒப்பாக்குவது என்பது  அவனை இழிவுபடுத்தும் செயலாகும் .மட்டுமல்ல, இது ஒரு மிகப்பெரிய உண்மையை மறைத்து பரப்பப்படும் பெரும்பொய்யும் ஆகும்.இந்த மாபெரும் பொய்யை மையமாக வைத்து மிகப்பெரிய மோசடி அரங்கேறுகிறது. கண்டதெல்லாம் கடவுள் என்று மக்கள் நம்பத் தலைப்படும் போது அதைச்சுற்றி இடைத் தரகர்கள் உருவாகிறார்கள்.

பின்னர் அவர்கள் சொல்வதுதான் சட்டம் என்றாகிறது. அவர்கள் தம் மனம் போனபடி மக்களை ஏய்த்து தம் வயிற்றை நிரப்பிக் கொள்ள பாவ பரிகாரம், தோஷ பரிகாரம் என்றெல்லாம் பெயர் சொல்லி பாமரர்களின் சம்பாத்தியங்களையும் செல்வங்களையும்   கொள்ளை  அடிக்கிறார்கள்.  உண்மையில் படைத்த  இறைவனை வழிபடுவதற்கு எந்தப் பொருட்செலவும் தேவை இல்லை. அவனை நேரடியாக வணங்குவதற்க்குத்தான் இறைத்தூதர்கள் கற்றுத்தந்தார்கள்.

அவனை அழைப்பதற்கோ, நம் தேவைகளை கேட்பதற்கோ நமக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த தரகர்களும் தேவை இல்லை.எந்த வித வீண் சடங்குகளுக்கும் அங்கு இடமில்லை. ஆனால் படைத்தவனை விட்டு விட்டு போலி தெய்வங்களை வணங்க முற்படும்போது இறைவழிபாடு என்பது கடினமாக்கபடுகிறது. வீண் சடங்குகளும் மூட நம்பிக்கைகளும்  இடைத்தரகர்களும் இடையே நுழைந்து இது  மாபெரும் வியாபாரமாக்கப் படுகிறது. மக்களை ஏய்த்துப் பிழைப்பதற்கான எளிமையான மார்க்கமாக இது மாறிவிடுகிறது.

மனித குலத்தை பிளவு  படுத்தும் கொடிய பாவம். 

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எல்லா காலத்திலும் போதிக்கப்பட்ட கொள்கை. ஆனால் அந்த ஏக இறைவனை விட்டு படைப்பினங்களை வணங்கத் தலைப்படும் போது மனித குலமும் அவரவர்களின் கடவுள் கொள்கையைப் பொறுத்து கூறுபோடப் படுகிறது. உதாரணமாக, நமது நாட்டின் ஜாதி அமைப்புக்களைப் பாருங்கள். எந்த ஜாதியைச் சேர்ந்தோரானாலும் நாம் அனைவரும் மனிதர்களே. ஒரே இரத்தம்,, ஒரே மாமிசம் ஒரே உடலமைப்பு  என எல்லாம் ஒன்றாக இருந்தும் ஒரு ஜாதி மக்கள் இன்னொரு ஜாதி மக்களோடு கலப்பதில்லை.

இதில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, தாழ்த்தப்பட்டோர்,  தீண்டத்தகாதவர்கள் என பல கூறுகள்! என்ன காரணம்? ஒவ்வொரு ஜாதியும் தங்களுக்கு வெவ்வேறு தெய்வங்கள் இருக்கின்றன என்று நம்புகிறார்கள். அவற்றை குலதெய்வம் என்று சிறப்பு செய்கிறார்கள். இவை மட்டுமல்ல, ஊர்களையும் எல்லைகளையும் பிரிக்கும் காவல் தெய்வங்களும் எல்லைச்சாமிகளும் மனிதர்களுக்கிடையே மேலும் பிளவை வலுப்படுத்துகின்றன.

இஸ்லாம் என்ன சொல்கிறது என்றால், இந்த கற்பனை தெய்வங்களை எல்லாம் தூக்கி எறிந்து விடுங்கள். இவற்றால் எந்த பயனும் கிடையாது. அனைவரும் உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த ஒரே இறைவன் பக்கம் மீளுங்கள் என்கிறது.இவ்வாறு எல்லா பாவங்களுக்கு தாயாக இது விளங்குவதால் இப்பாவத்தை  மன்னிக்கவே முடியாத பெரும் பாவம் என்கிறான்  இறைவன்    திருக்குர்ஆன் கீழ்கண்டவாறு இப்பாவத்தைக் கண்டிக்கிறது:

பாவங்களிலேயே மிகப்பெரும் பாவம்

‘ …..நிச்சயமாக இறைவனுக்கு இணைவைத்தல் மாபெரும் பாவமாகும்…… (திருக்குர்ஆன் 31:13)

 ‘நிச்சயமாக இறைவன் ; தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்¢ இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். யார் இறைவனுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.’  (திருக்குர்ஆன் 4:48)

 இது மிகப்பெரிய நன்றி கேடாகும்.மனிதர்களே! உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா? அவனையன்றி வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்? .(திருக்குர்ஆன் 35:3)

(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள் )

”அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.’ .(திருக்குர்ஆன் 30:40)

இணை வைப்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை!

“நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதையாவது அவை படைத்துள்ளனவா அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (திருக்குர்ஆன் : 46:4)

அல்லாஹ்வுக்கு இணையாக்கப்படுபவற்றின் பலஹீனம்! 

மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ,  அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈடைக்கூடப் படைக்க முடியாது; இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது; தேடுவோனும்,  தேடப்படுவோனும் பலஹீனர்களே. (திருக்குர்ஆன் 22:73)

இடைத் தரகர்களுக்கு இடமில்லை  

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (இணைவைப்பாளர்கள் ) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள் ‘இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை’ என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்’ என்று கூறும். (திருக்குர்ஆன் 10:18)

இணைவைப்போருக்கு தண்டனை நிரந்தர நரகம்

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ்விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதிஇழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” (திருக்குர்ஆன் 5:72)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் அவனை சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். யார் இணை கற்பித்தவராக சந்திக்கிறாரோ அவர் நரகம்புகுவார். அறிவிப்பு : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

Share this Article

Add a Comment

Your email address will not be published.